திரைத்துறையைப் பற்றி இவருக்கு எதுவும் தெரியாது. அதுபற்றிய ஏட்டுக்கல்வியோ அனுபவமோ இல்லை. ஆனால், தமிழகத்தில் ஒரு திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டுள்ளார் சிங்கப்பூரின் சுகாதார நிறுவனம் ஒன்றில் ஆலோசகராகப் பணியாற்றும் கௌதம் ராஜேந்திரன், 29.
2017ல் மெதுவோட்டம் சென்ற தன் தந்தை திரு ராஜேந்திரன் சுப்பையா, மாரடைப்பால் திடீரென இறந்தார். ஆயினும், படத் தயாரிப்புக் கனவு அவருடன் மறைந்துவிடக்கூடாது என்ற எண்ணமே கெளதமைத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆக்கியது.
வாழ்ந்தபோது சொத்துச்சந்தை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பன்னாட்டு வர்த்தகராக இருந்த தம் தந்தை, திரைப்படங்களின் மீது ஆர்வமாக இருந்ததாகவும் இயக்குநர் ஒருவரின் கதையால் கவரப்பட்டு அவருக்குப் பட வாய்ப்பைத் தந்ததாகவும் கெளதம் கூறினார்.
‘உன்னால் என்னால்’ என்ற தலைப்புள்ள அந்தத் திரைப்படம், ஜூன் 2ஆம் தேதி தமிழகத்தின் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களிலுள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
பணச்சிக்கல்களை எதிர்நோக்கும் மூன்று இளையர்கள் எவ்வாறு மீண்டு வருகின்றனர் என்பது பற்றியது திரைக்கதை. புதிய நடிகர்களுடன் டெல்லி கணேஷ், ராஜேஷ் உள்ளிட்ட அபிமான நடிகர்களும் இணைந்துள்ளனர். பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள சோனியா அகர்வால், எதிர்மறை கதாபாத்திரத்தில் இடம்பெறுகிறார்.
தம் தந்தை ஒன்றைச் செய்ய ஆரம்பித்தால் அதை முடித்தே தீர்வார் என்றும் தாம் ஆரம்பித்ததைப் பற்றி பிறரிடம் ஆர்வத்துடன் பகிர்ந்துரைப்பார் என்றும் கெளதம் கூறினார். புதிய இயக்குநர் ஜெயகிருஷ்ணா, திரைக்கதையைப் பற்றி தம் தந்தையிடம் பகிர்ந்தபோது அவர் அதை விரும்பியதாகத் திரு கெளதம் கூறினார்.
இயக்குநர் மட்டுமின்றி ரிஸ்வான் என்ற புதிய இசையமைப்பாளரும் இந்தப் படத்தில் இணைந்தார். 2018ல் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீடு கண்டன. 2019ல் நடைபெறவிருந்த திரைப்பட வெளியீடு, கொவிட்-19 காரணத்தால் நான்கு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்டதாக கெளதம் தெரிவித்தார்.
காலஞ்சென்ற தம் தந்தை திரைப்படப் பணிகளை முக்கால் பங்கு நிறைவேற்றியதால் கெளதம் ஐந்து ஆறு முறைதான் இந்தியாவுக்கு நேரில் சென்று தயாரிப்புப் பணிகளைக் கவனித்துவந்தார். தம் தாய்மாமாவான வர்த்தகர் ரவீந்திரன் வள்ளிமுத்து இதற்காக இந்தியப் பயணத்தை மேற்கொண்டார்.
முற்றிலும் மாறுபட்ட கலாசாரச் சூழல், விதிமுறைக் கட்டமைப்பு ஆகியவற்றில் பணிகளை மேற்கொள்வது சில நேரங்களில் சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்டார் கெளதம்.
“பணச்செலவு குறித்த வேலைகள் ஆகியவற்றை ஆராயவேண்டும். அத்துடன், சில முடிவுகள் நம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நடைபெறும்,” என்றார். இருந்தபோதும், இயக்குநர் தங்களது தேவைகளையும் புரிந்துகொண்டு முடிந்த மாற்றங்களைச் செய்ததாகக் கூறினார்.
மதுரையிலுள்ள ஒரு திரையரங்கில் படத்தின் மேளதாள கொண்டாட்டங்களுடன் நடைபெற்ற வெளியீட்டு விழா மற்றொரு மாறுபட்ட அனுபவமாக இருந்ததாகக் கூறினார் கெளதம்.
தம் கணவர் வாழ்க்கையில் முழுமை பெறாமல் உயிர்நீத்தபோதும் அவரது கனவுகளையாவது முழுமை அடையச் செய்யவேண்டும் என்ற கனவைத் தம் மகன் நனவு ஆக்கியது குறித்து பெருமைப்படுவதாகக் கூறினார் கௌதமின் தாயார் பெருமாளம்மாள் வள்ளிமுத்து, 50.
படம் நல்ல வரவேற்பைப் பெற்றதாகக் கூறிய கௌதம், எடுத்த காரியத்தின் வெற்றி குறித்த மனநிறைவில் இருப்பதாகக் கூறினார்.