கல்வி கற்க வரம்பு இல்லை

‘ஓ’ நிலைத் தேர்வு முடித்த கையோடு தேர்வு முடிவுகளுக்குக் காத்திருக்கும் நேரத்தில் தனது 16 வயதிலேயே வேலை உலகில் காலடி எடுத்து வைத்தார் தற்போது 32 வயதுள்ள தீபப்ரியா ராஜேந்திரன். சக நண்பர்களும் வகுப்பினரும் தொடக்கக்கல்லூரி அல்லது பலதுறைத் தொழிற்கல்லூரி பாதையில் பயணித்தபோது தீபப்ரியாவிற்கு அப்பொழுது மாத வருமானமாக ஈட்டிய $1,200 மனநிறைவு அளித்தது.

உறவினர்கள் பலர் அவரை இடித்துப் பேசியும் எவ்வித பொறுப்புகளையும் ஏற்கும் தேவை இல்லாததால் கல்வியைத் தொடர வேண்டும் என்ற எண்ணம் ஒரு நொடியும் தீபப்ரியாவுக்குத் தோன்றவில்லை. நிதி நெருக்கடி இல்லாமல் சுதந்திரப் பறவை போல காலத்தைக் கழித்துக்கொண்டிருந்த அவர், அண்மையில் பட்டப்படிப்பில் உச்சத் தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்த்த பின்பு மீண்டும் கல்விப் பயணத்தில் தனது 27 வயதில் அடியெடுத்து வைத்த தீபப்ரியா, கெப்லான் சிங்கப்பூரின் (Kaplan Singapore) பங்காளித்துவ பல்கலைக்கழகமான நோர்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் பயின்று மனிதவள நிர்வாகத்துடன் வணிகத் துறையில் ஹானர்ஸ் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

16 வயதில் பகுதிநேர வேலையைத் தொடங்கி அதன் பிறகு பல நிறுவனங்களில் பணிபுரிந்த அவர், ஒரு முறை பாலர் பள்ளியில் பணிபுரிவதற்கு விரும்பியபோது அவரால் அந்த வேலையில் சேர முடியாமல் போனது. பெரும்பாலான வேலைகளில் அமர்வதற்குக் குறைந்தபட்சம் பட்டயமாவது பெற்றிருக்க வேண்டுமென்ற கட்டாயம் இருந்ததால் தீபப்ரியா திண்டாடினார். அப்போது உறைந்துபோன தீபப்ரியாவிற்குக் கல்வியின் முக்கியத்துவம் புரிந்தது.

தீபப்ரியா 2017ல் மனிதவள நிர்வாகத்துடன் வர்த்தகத் துறையில் பட்டயப்படிப்பு படிக்கத் தொடங்கினார். திருமணம் ஆன போதிலும் வாரத்துக்கு மூன்றிலிருந்து நான்கு நாள்கள் வேலை முடிந்து வகுப்புகளுக்குச் செல்ல நேரத்தை நன்கு வகுத்து வந்தார்.

பட்டயம் பெற்றதுடன் தீபப்ரியாவிற்கு இளங்கலைப் பட்டம் பெற வேண்டுமென்ற உந்துதல் உதயமானது. 2018ல் இளங்கலைப் படிப்பு பயிலத் தொடங்கினார். அந்தாண்டு இறுதியில் அவரது பாட்டி திடீரென இறந்தார். குடும்பத்தில் ஏற்பட்ட முதல் இழப்பால் தவித்த தீபப்ரியா, தம் பெற்றோர் மற்றும் கணவரின் ஆதரவோடு வெற்றிகரமாக இளங்கலைப் படிப்பைப் பயின்று வந்தார்.

மேலுமொரு இடியாக, 2020ல் தீபப்ரியாவின் ஒரே மூத்த சகோதரர் கார்த்திக் ராஜ் தூங்கிக்கொண்டிருக்கும்போதே மாண்டுபோனார். சகோதரருடன் மிக நெருக்கமாக இருந்த தீபப்ரியா, அண்ணனின் இழப்பை நினைத்து துயருற்றார்.

தூங்க முடியாமல், சரியாகச் சாப்பிட முடியாமல் தவித்த தீபப்ரியா, அண்ணனை இழந்தபோது அவர் கருவுற்றிருந்தார். பட்டப்படிப்பு முடித்த பிறகு அண்ணனின் இறப்பு நேர்ந்தபோதும் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான தீபப்ரியா கல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக ஈ-பிரிஜ் பாலர் பள்ளியில் பணியாற்றிவரும் நிலையில் தற்போது அங்கு மூத்த மனிதவள நிர்வாகியாக தீபப்ரியா இருக்கிறார். தன்னுடைய பிள்ளைகள் தொடக்கப்பள்ளி சென்றவுடன் முதுகலைப் பட்டம் பெற வேண்டும், வருங்காலத்தில் ஒரு விரிவுரையாளராக வேண்டும் என்பது அவரது இலக்கு.

“கல்வி கற்க எவ்வித வரம்பும் இல்லை. என்னுடைய மதிப்பை என்னால் என் கல்வி மூலம் மட்டுமே உயர்த்த முடியும். நான் ஒரு காலத்தில் கல்வி கற்க நாட்டம் இல்லாமல் இருந்தேன், ஆனால் பிறருக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருக்க விரும்புகிறேன்,” என்று ஊக்கத்துடன் பகிர்ந்தார் தீபப்ரியா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!