மறதிநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேட்கையுடன் சர்மிலி

மறதிநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேட்கையுடன் சர்மிலி

3 mins read
6b4c2c6c-76a7-4ae1-aedc-47bdd039a40e
சிங்கப்பூரில் முதியவர்களை அதிகம் பாதிக்கும் ரத்தநாள மறதிநோய் பற்றி ஆழமான ஆய்வை மேற்கொண்டார் சர்மிலி. - படம்: சர்மிலி செல்வராஜி
multi-img1 of 3
சிங்கப்பூரில் முதியவர்களை அதிகம் பாதிக்கும் ரத்தநாள மறதிநோய் பற்றி ஆழமான ஆய்வை மேற்கொண்டார் சர்மிலி.
சிங்கப்பூரில் முதியவர்களை அதிகம் பாதிக்கும் ரத்தநாள மறதிநோய் பற்றி ஆழமான ஆய்வை மேற்கொண்டார் சர்மிலி. - படம்: சர்மிலி செல்வராஜி

அறிவியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பில் உச்சத் தேர்ச்சி பெற்று சமூகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார் 28 வயது சர்மிலி செல்வராஜி. கடந்த ஆறு மாதங்களாக அமெரிக்காவின் மெசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (MIT) ‘பார்கின்சன்’ நோய் தொடர்பாக முனைவர் பட்டத்துக்குப் பிந்திய ஆய்வை மேற்கொண்டுள்ள சர்மிலி, உயிரியல் துறையில் சிறு வயதிலிருந்து ஆர்வம் காட்டி வருபவர்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் நரம்பியலில் (Neuroscience) முனைவர் ஆய்வுப் படிப்பை முடித்துள்ள சர்மிலி, ரத்தநாள மறதிநோய் (Vascular Dementia) ஆய்வில் நிபுணத்துவம் பெற்றவர்.

மேல்நிலைப் படிப்பைத் தொடர்ந்து உயிர் அறிவியலில் இளநிலைப் படிப்பை மேற்கொண்டார். மனித உறுப்புகளில் மூளை மிக விசித்திரமானது என்பதை அறிந்த சர்மிலிக்கு, நரம்பியல் துறையில் நாட்டம் ஏற்பட்டது.

இளநிலைப் படிப்புக்கான அவரது முதல் ஆய்வுத் திட்டமும் நரம்பியல் தொடர்பானது. டான் டோக் செங் மருத்துவமனை நரம்பியல் அறிஞர் ஒருவரின் கீழ் மேற்கொண்ட வேலைப்பயிற்சி, நரம்புத் தளர்ச்சி நோய்கள் (Neurodegenerative diseases) பற்றிய ஆழமான ஆய்வில் ஈடுபட அவரைத் தூண்டியது.

மூப்படையும் மக்கள்தொகையைக் கொண்ட சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் முதியவர்களை அதிகம் பாதிக்கும் நோயாக மறதிநோய் உள்ளது. சிங்கப்பூரில் நிலைமை தற்போது மோசமாக இல்லையென்றாலும் சில ஆண்டுகளில் அதிகமானோர் பாதிக்கப்படலாம் என்பதால், ஆய்வு மூலம் மறதிநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க எண்ணம் கொண்டுள்ளார் சர்மிலி.

2018ல் இளநிலைப் படிப்பை முடித்த பின்னர் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபடத் தொடங்கினார். மறதிநோயில் பலவகை இருந்தாலும் சிங்கப்பூரில் முதியவர்களை அதிகம் பாதிப்பது ரத்தநாள மறதிநோய். மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையும்போது மூளையின் உயிரணுக்கள் அழிந்துவிடுகின்றன.

இதன் விளைவாக ஏற்படும் மறதிநோய் பற்றி அவர் ஆழமான ஆய்வை மேற்கொண்டார். ரத்தநாள மறதிநோயால் பாதிக்கப்படுவோரைச் சுற்றுச்சூழல் எவ்வாறு பாதிக்கிறது என்பது இவரது ஆய்வின் கருப்பொருள்.

எலிகளைக் கொண்டு மேற்கொண்ட ஆய்வில் குறிப்பிட்ட நேரத்துக்கு உண்ணாமல் இருப்பது ரத்தநாள மறதிநோய் தீவிரமடையாமல் இருக்க உதவும் என்பது தெரியவந்தது. எனினும், மனிதர்களிடம் இதன் பாதிப்பு குறித்து அறிய, மேற்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.

நான்கு ஆண்டு கால முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பின்போது சர்மிலி பல சவால்களையும் எதிர்கொண்டார். கொவிட்-19 கொள்ளைநோய் பரவலின்போது அவரின் பேராசிரியர் ஆஸ்திரேலியாவுக்குத் திடீரென இடம்பெயர்ந்துவிட்டார். சர்மிலியும் அவர் குழுவில் இருந்தவர்களும் பேராசிரியரின் உதவியின்றி சுயமாக சில காலம் ஆய்வைத் தொடர வேண்டியிருந்தது. அந்த நான்கு ஆண்டுகளில் சில போட்டிகளில் வெற்றிகளையும் பெற்றுள்ளார்.

சர்மிலி கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவுக்குச் சென்றார். சிங்கப்பூரில் பேராசிரியராக பணிபுரிய வேண்டும் என்பது இவரின் இலக்கு. அமெரிக்காவில் பணியாற்றுவது அவருக்கு பல வகைகளில் கைகொடுத்து வருகிறது.

குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருந்தாலும் அமெரிக்காவின் முற்போக்கான வேலைச் சூழல், ஆய்வுக்கான வளங்கள், இடைநிலை ஆய்வு வாய்ப்புகள் போன்றவை சர்மிலி தன் பணியில் ஈடுபட உந்துதலாக இருந்துள்ளன.

தாய்மொழி கன்னடம் என்றபோதிலும், இவர் தமிழ்மொழி மீது அதிக ஆர்வம் கொண்டவர். தமிழ் இலக்கியம், கலைத்துறைகளில் பங்களித்து வரும் சர்மிலி, தொலைக்காட்சிப் படைப்பு போன்றவற்றிலும் ஈடுபாடுள்ளவர். தமிழ் முரசின் தெருக்கூத்து காணொளித் தொடருக்குப் படைப்பாளராகப் பணியாற்றியும் உள்ளார்.

இனி, தமிழ் மக்களிடம் மறதிநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறார் இளையர் சர்மிலி.

குறிப்புச் சொற்கள்