பின்தங்கிய சமூகத்தின் குரலாக இருக்க விருப்பம்: நன்யாங் மாணவர் ஹரிதாஸ்

2 mins read
8c8aff41-bbbc-48e1-92f5-70b88a824c57
எஸ்பிஎச் மீடியா,எஸ்பிஎச் அறக்கட்டளை வழங்கும் உபகாரச் சம்பளம் பெற்றுள்ளார் நன்யாங் மாணவர் ஹரிதாஸ் - படம்: கார்த்திகேயன்

“தொடக்கக் கல்லூரி முடித்தவுடன் பணிக்குச் சென்று ஒற்றைத் தாயாருக்கு உதவியாக இருக்கலாம்” என்று எண்ணிய ஹரிதாஸை ஊக்குவித்து கல்லூரியில் பயில வைத்த தனது தாயார் திருவாட்டி ராஜேஸ்வரி தான் தன் எல்லா வெற்றிக்கும் முழுக் காரணம், என்கிறார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் ஹரிதாஸ்.

இவர் கடந்த 28 ஆம் தேதியன்று குறைந்த வருமானமுடைய பின்புலத்திலிருந்து வரும் மொழியியல் மானுடவியல் மாணவர்களுக்கு எஸ்பிஎச் மீடியா,எஸ்பிஎச் அறக்கட்டளை வழங்கும் உபகாரச் சம்பளம் பெற்றுள்ளார்.

இதன் வாயிலாக படிப்புக் கட்டணங்கள், கல்வித் தேர்வுகள், முழுமையாகச் செலுத்தப்படுவதோடு அவர்களுக்கு வாழ்க்கை, புத்தகச் செலவுகளுக்காக வருடாந்திர படித்தொகையும் வழங்கப்படுகிறது.

வரலாறு, தொடர்புத் துறைகளில் இரட்டை முதுகலைப் பட்டப்படிப்பு பயின்று வரும் 23 வயதான ஹரிதாஸ், “என் தாய் கடுமையான சூழ்நிலையிலும் தனி ஆளாக நின்று என்னை வளர்த்துள்ளார். எங்களுக்கு வேறு பெரிய ஆதரவு எதுவும் கிட்டியதில்லை. எனக்குக் கிடைக்கும் இதுபோன்ற அங்கீகாரங்கள் அவரை மகிழ்விக்கும்,” என்கிறார்.

வரலாறு, சமூகம் தொடர்பான வலைப்பதிவுகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், முதல் உலக நாடான சிங்கப்பூரில் இன்னமும் பின்தங்கி இருக்கும் சமூகத்தின் குரலாக இருக்க விழைவதாகக் குறிப்பிட்டார்.

பகுதி நேரப் பணி செய்து வரும் இவரது தாய் ராஜேஸ்வரி, “ஹரிதாஸ் இயல்பிலேயே அறிவுத்திறன் வாய்ந்தவர். இந்த உபகாரச் சம்பளம் கிட்டியது மகிழ்ச்சி. இன்னும் சில ஆண்டுகளில் அவர் பணியமர்த்தப்பட்டு நல்ல நிலைக்கு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது,” என்று குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்