கடந்த 2015ஆம் ஆண்டு மலேசியாவின் சாபாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிர்தப்பிய அர்ணாவ் கரண் சப்ரியா இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பில் முழுமைத் தற்காப்பு அணிவகுப்பில் கலந்துகொள்கிறார்.
தற்போது 19 வயதாகும் இவர் முழுநேர தேசிய சேவையாளராக இருக்கிறார்.
ஆகஸ்ட் 9ஆம் தேதி பாடாங்கில் நடைபெறவிருக்கும் தேசிய தின அணிவகுப்பில் முழுமைத் தற்காப்பின் ஆறு தூண்களில் ஒன்றான மனோவியல் தூணைப் பிரதிநிதிக்கும் மிதவையின் உச்சியில் சிங்கப்பூருக்கே உரிய கனிவான சிங்கா உருவச் சின்ன பொம்மையில் காட்சி தருவார் அர்ணாவ்.
மூன்றாம் சார்ஜண்ட் ஆக இருக்கும் அர்ணாவ், 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி சாபாவில் 6.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கினார்.
தஞ்சோங் காத்தோங் தொடக்கப்பள்ளியிலிருந்து தலைமைத்துவ முகாமிற்காக அங்கு சென்றிருந்த 29 மாணவர்களுள் இவரும் ஒருவர்.
அந்தச் சம்பவத்தில் ஏழு மாணவர்களுடன் இரண்டு ஆசிரியர்களும் ஒரு சிங்கப்பூர் சாகச வழிகாட்டியும் மாண்டனர். மொத்தம் 18 பேர் உயிரிழந்தனர்.
அப்போது 11 வயது சிறுவனான அர்ணாவ், தோள்பட்டை முறிவுடன் சேர்த்து பல பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
“அச்சம்பவத்தின் தாக்கத்திலிருந்து வெளிவருவது மிகவும் கடுமையாக இருந்தது. உடலளவிலும் மனதளவிலும் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டிருந்தது மன உளைச்சலுக்கு ஆளாக்கியது,” என்று நினைவுகூர்ந்தார் அர்ணாவ்.
தொடர்புடைய செய்திகள்
குளிப்பது, சாப்பிடுவது போன்ற அன்றாட அடிப்படை நடவடிக்கைகளுக்குக்கூட உதவி தேவைப்பட்டது என்றும் உடல்நலம் சீராவதற்காக மாற்று வேலையின்றி பல மாதங்கள் ஓய்வெடுத்தது நண்பர்களையும் ஆசிரியர்களையும் இழந்த துயரத்தை நினைவூட்டிக்கொண்டே இருந்தது என்றும் கூறினார் அர்ணாவ்.
இருப்பினும் குடும்பத்தினர், நண்பர்கள், பள்ளி மற்றும் ஆசிரியர்களின் வலுவான ஆதரவினால் தான் மீண்டு வந்ததாகக் கூறிய அர்ணாவ், அந்த இக்கட்டான சூழலில் ஒவ்வொரு நாளும் ‘எதுவாயினும் தொடர்ந்து முன்செல்ல வேண்டும்’ என்ற வாக்கியத்தையே மந்திரமாகக் கொண்டதாக கூறினார்.
உடலளவில் நாம் ஆரோக்கியமாக இருக்கும்போது மனநலத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என்பதை குடும்பத்தினர் உணர்த்திய பின்னர் ஆறு மாதங்களுக்கும் மேல் தொடர் உடற்பயிற்சி சிகிச்சைகள் மேற்கொண்டு மெல்ல குணமடைந்ததாகக் கூறினார் அவர்.
தொடக்கப்பள்ளியில் படிக்கும்போது தேசிய தின அணிவகுப்பை முதல்முறையாக நேரில் கண்டது நினைவில் உள்ளது என்று கூறிய அர்ணாவ், பல ஆண்டுகள் கழித்து இன்றுதான் அதில் பங்குகொள்வது மட்டற்ற மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருகிறது என்றார்.
அதிலும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் சிங்கப்பூர் குழந்தைகளுக்கு பிடித்தமான ‘சிங்கா’ உருவச் சின்னமாக பங்குகொள்வது அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் ஒரு அரிய வாய்ப்பாகவே கருதுவதாகவும் அர்ணாவ் கூறினார்.

