உதவும் எண்ணத்தை உயர்த்திய கல்வி

3 mins read
f1e39be3-89f0-4ac2-899c-8bcf5b17fcda
நேப்பாளத்தில் தன் குழுவோடு தண்ணீர்த் தொட்டிகளை உருவாக்கும் முயற்சியில் அரிவிந்த் - படம்: அரிவிந்த் ஆறுமுகம்
multi-img1 of 4

உலகில் இருக்கும் வசதி குறைந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பொறியியல் ரீதியான தீர்வுகளைப் பயன்படுத்துகிறார் 29 வயது அரிவிந்த் ஆறுமுகம்.

‘என்ஜினியர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்’ (Engineers Without Borders) எனும் அனைத்துலக அமைப்பு பொறியியல் திட்டங்கள் மூலம் அடிப்படைத் தேவைகளுக்கு சிரமப்படும் சமூகத்தினருக்கு கைகொடுக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பானது தற்போது உலகமெங்கும் மொத்தம் 27 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் இயங்கும் இந்த அமைப்பின் தலைவரான அரிவிந்த் கடந்த நான்கு ஆண்டுகளாக அதில் செயலாற்றி வருகிறார். சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியலில் இளநிலை பட்டம் பெற்ற அவர் சிறு வயதிலிருந்தே, எதிர்காலத்தில் மேற்கொள்ளும் பணி மூலம் பிறருக்கு அர்த்தமுள்ள வழிகளில் தொண்டாற்ற வேண்டுமென்ற முனைப்புடன் இருக்கிறார்.

பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே என்ஜினியர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் அமைப்பைப் பற்றி தனது பேராசிரியர் மூலம் கேள்விப்பட்ட அரிவிந்த், மனிதநேயம் சார்ந்த பொறியியல் பாடத் தொகுதியை கற்று வந்தார்.

அதன் மூலம் அவருக்கு அந்த அமைப்பில் உறுப்பினராக சேர உந்துதல் கிடைத்தது. அமைப்பின் முன்னாள் தலைவரை சந்தித்த அரிவிந்த் பிற நாடுகளை ஒப்பிடுகையில் சிங்கப்பூரில் இந்த அமைப்பு பெரிதளவில் செயல்படவில்லை என்பதை உணர்ந்தார்.

அமைப்பை நெருங்கிய நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும் அறிமுகப்படுத்திய பின் மூன்றே மாதங்களில் அரிவிந்த் அமைப்பின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். அப்பொழுது அவருடன் 11 பேர் இணைந்துகொண்டனர்.

சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்திலும், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திலும் பொறியியல் பயிலும் மாணவர்களை அமைப்பில் சேர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளை அரிவிந்தும் அமைப்பு உறுப்பினர்களும் மேற்கொண்டனர்.

தொடக்கத்தில் மாணவர் குழுக்களை அமைத்த அவர்கள் பின்னர் அமைப்பை பல்கலைக்கழகத்தில் ஒரு அதிகாரபூர்வ இணைப்பாட நடவடிக்கையாக செயல்படுத்த எண்ணினர்.

இதில் பொறியியல் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் பயிலும் மாணவர்களும் உறுப்பினர்களாக சேர்ந்து பங்களிக்கலாம். இந்த அமைப்பானது விலங்குநல தொண்டு நிறுவனம் போன்ற லாப நோக்கற்ற நிறுவனத்துடன் கைகோத்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

பன்றி மூக்கு ஆமைகள் வாழும் நீர் தொட்டிகளுக்கு விலங்குநல தொண்டு நிறுவனம் பயன்படுத்தும் தற்போதைய வடிகட்டுதல் முறையை மாற்றுவதற்கு அரிவிந்தும் சக உறுப்பினர்களும் தகவல் தொடர்பு வடிகட்டுதல் அமைப்பை வடிவமைத்துள்ளனர்.

இந்தப் புதிய வடிகட்டுதல் முறையில் ஆமைகளால் சேதமடைவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் செலவும் நேரமும் மிச்சமாகும்.

இது போல அவர்கள் சிங்கப்பூர் விலங்குவதை தடுப்பு சங்கம், நீ சூன் ஈஸ்ட் சமூக மன்றத்திற்கும் உதவ முன்வந்துள்ளனர். சிங்கப்பூருக்கு அப்பாற்பட்டு அரிவிந்தும் தனது அமைப்பு உறுப்பினர்களும் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் உதவியுள்ளார்கள்.

வெளிநாடுகளுக்குச் சென்ற இவர்கள் அந்நாட்டு கலாசாரத்தையும் அறிந்துகொண்டனர். பயனாளிகளுக்கு உதவுவதோடு விடாமல் அவர்களுடன் நட்போடும் திகழ்கின்றனர்.

அதில் தோன்றியதுதான் இவர்களின் நேப்பாள தண்ணீர் திட்டம். நேப்பாளத்தில் உள்ள பங்கமதி சமூகத்தின் நீர் சுகாதாரம் மற்றும் நீர் சேமிப்பு நிலைமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இவர்கள் சென்றாண்டு மார்ச் மாதத்தில் நேப்பாளம் சென்றிருந்தார்கள். தண்ணீர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் அம்மக்களின் நிலைமை அரிவிந்தை வருத்தியது.

தொடக்கத்தில் அவர்கள் பொறியியல் ரீதியான சோதனையை மேற்கொண்ட பின் அதிலிருந்த பிரச்சினைகளைக் கண்டறிந்தனர். பின்னர் அவர்கள் தொட்டிகளில் மழை தண்ணீரை சேகரித்து ஊர் மக்களுக்கு நிலையான தண்ணீர் விநியோகத்தை உருவாக்கினர். இதன் மூலம் பெரிதளவில் பயன் கண்ட ஊர் மக்களின் முகத்தில் பூத்த புன்னகை அரிவிந்தை நெகிழ வைத்தது.

நேப்பாளம் தவிர்த்து இவர்கள் பிலிப்பீன்சில் உள்ள தபுல் சமூகத்தினருக்காக உலோட் ஆற்றின் குறுக்கே ஒரு நடையர் மேம்பாலத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்தப் பாலம் மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற இடங்களை அணுக சிரமப்படும் மக்களுக்கும், சரக்குகளின் போக்குவரத்துக்கும் கைகொடுக்கும்.

பிலிப்பீன்சுக்குச் சென்று உதவ முடியாமல் போனாலும் அரிவிந்தும் அவரது குழுவினரும் இந்தத் திட்டத்துக்காக சிங்கப்பூரில் கிட்டத்தட்ட $35,000 நிதியை திரட்டினர். எதிர்காலத்தில் ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்குச் சென்று உதவ முனைந்துள்ள அரிவிந்த் அமைப்பில் போதுமான உறுப்பினர்கள் இல்லை என்ற வருத்தத்தையும் வெளிப்படுத்தினார்.

தொடக்கத்தில் ஆர்வமாக இருந்தாலும் பிறகு அமைப்பைவிட்டு செல்கின்றனர். மேலும் இதற்காக நேரத்தை ஒதுக்கி ஈடுபாடு காட்டினால் மட்டுமே அமைப்பில் நீண்ட நாள் நிலைத்திருக்க முடியும் என்பதையும் அரிவிந்த் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்