தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிதி திரட்ட ஐரோப்பா சுற்றும் வாலிபர்

3 mins read
64566c9e-1cbb-4f6d-8ffe-48ed16af2807
நாள்பட்ட நோய் உடையோருக்கு உதவும் ‘க்லப் ரெய்ன்போ’ அறநிறுவனத்துக்கு நிதி திரட்ட 10 நாள் மிதிவண்டிப் பயணத்தை மேற்கொள்ளும் சிங்கப்பூரர் பவித்ரன் (வலம்), 32, ஜெர்மானியர் டேவிட் ஹாக், 26. - படம்: பவித்ரன் பாக்கியநாதன்

850 கிலோ மீட்டர் தூரம். 17 கிலோ மீட்டர் உயரம். 10 நாள்கள் பயணம்.

பிரெஞ்சு, இத்தாலிய ஆல்ப்ஸ் மலைகளில் மிதிவண்டிப் பயணம் மேற்கொண்டு வருகிறார் லுட்விக்-மேக்ஸிமில்லியன்ஸ் மியூனிக் பல்கலைக்கழகத்தில் பயிலும் பவித்ரன் பாக்கியநாதன், 32. செப்டம்பர் 16ஆம் தேதி, சனிக்கிழமை தன்னோடு ஒரே பல்கலைக்கழகத்தில் படிக்கும் சக மாணவருடன் இந்தப் பயணத்தைத் தொடங்கினார்.

இப்பயணத்தின்மூலம் நாள்பட்ட நோய்களின் பாதிப்புகளைத் தடுப்பதிலும் சமாளிப்பதிலும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறார் பவித்ரன்.

இவருக்குத் துணையாக, பல்கலைக்கழகத்தில் விளையாட்டு உளவியல் துறையில் முனைவர் பட்டம் படித்துவரும் ஜெர்மானியர் டேவிட் ஹாக், 26, பயணம் செய்கிறார்.

இப்பயணம் ‘கிளப் ரெய்ன்போ’ அறநிறுவனத்திற்கு நிதித் திரட்டு முயற்சியாகவும் அமையும். இதன்வழி திரட்டப்படும் நிதி, நாள்பட்ட நோயுடைய சிறுவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஆதரவளிக்கும். இவர் திரட்டும் தொகைக்கு நிகராகப் பந்தயப்பிடிப்புக் கழகமும் நிதி வழங்கும். இன்னும் 19 நாள்களில் நிதித் திரட்டு முயற்சி நிறைவுபெறும்.

பவித்ரனும் நாள்பட்ட நோயினால் பாதிப்படைந்த ஒருவரே. அதனால், பாதிக்கப்பட்டோர் தினசரி வாழ்வில் உடலளவிலும் மனதளவிலும் சந்திக்கும் சிக்கல்களை அவரால் புரிந்துகொள்ள முடிகிறது.

குளிர், மழை, வெயில் அனைத்தையும் பொருட்படுத்தாது தம் குறிக்கோளை அடைய இருவரும் கடும் பாடுபடுகின்றனர்.

மழை, கடும் குளிரிலும் ‘கொல்லெ டெல்லா மட்டலேனா’ பிரெஞ்சு இத்தாலிய மலையை 1996 மீட்டர் ஏறியுள்ள பவித்ரன்.
மழை, கடும் குளிரிலும் ‘கொல்லெ டெல்லா மட்டலேனா’ பிரெஞ்சு இத்தாலிய மலையை 1996 மீட்டர் ஏறியுள்ள பவித்ரன். - படம்: பவித்ரன் பாக்கியநாதன்

இப்பயணத்திற்காக கடந்த ஒன்றரை மாதங்களாக வாரந்தோறும் 60 முதல் 80 கிலோ மீட்டர், மலைகள் அடங்கிய பாதைகளில் மிதிவண்டி ஓட்டிவந்துள்ளனர். ‘சால்ஸ்பர்க்’ மிதிவண்டிக் குழு ஒன்றுடனும் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

மார்ச் மாதத்தில் பனிச்சறுக்குக் காரணமாக முழங்காலில் அடிப்பட்ட பவித்ரன், மிதிவண்டி ஓட்டுதல், ஓடுதல், மலையேறுதல் போன்ற உடற்பயிற்சி நடவடிக்கைகள்மூலம் குணமடைந்து வருகிறார்.

தற்போது மனித-கணினி தொடர்பில் முனைவர் பட்டப்படிப்பில் முதல் ஆண்டை முடிக்கும் தருவாயில் இருக்கிறார் பவித்ரன். இவரது ஆராய்ச்சிக் கழகம் இதயக் குழலிய நோய்களைத் தடுப்பதற்கும் குணமடையச் செய்வதற்கும் தொழில்நுட்பங்களை உருவாக்கிவருகிறது.

பவித்ரன் தன் இளநிலை, முதுநிலை பட்டங்களை சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தில் (எஸ்யூடிடி) தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்புப் பிரிவில் முடித்தார். இளநிலைப் படிப்புக்குச் சிங்கப்பூர் தொழில்துறை உபகாரச் சம்பளமும் முதுநிலைப் படிப்புக்கு தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் ‘எஸ்ஜி டிஜிட்டல்’ உபகாரச் சம்பளமும் பெற்றார்.

அதே சமயத்தில் அவர் ‘எஸ்யூடிடி’ மலையேறும் சங்கத்தில் இருந்தபோது ‘ரிஞ்சானி’, ‘ஷுவேஷான்’ மலைகளையும் ஏறினார்.

சமூகப் பணிகளில் ஈடுபடுவது பவித்ரனுக்குப் புதிதல்ல 

‘எஸ்யூடிடி’யின் ‘ரோட்டரேக்ட்’ மன்றத்தின் தலைவராகவும் தெம்பனிஸ் வெஸ்ட் இளையர் செயற்குழுவின் துணைத் தலைவராகவும் பல சமூக முயற்சிகளுக்கு ஏற்பாடு செய்தார்.

பத்தாண்டு சமூக சேவைக்காக 2018ல் மக்கள் கழக இளையர் இயக்கத்தின் நீண்டகாலச் சேவை விருதைப் பெற்றார். ஐரோப்பா செல்லும் முன் சிண்டா இளையர் பிரிவிலும் ஓராண்டு காலம் தொண்டூழியம் புரிந்தார்.

காது கேட்க இயலாதவர்கள் அல்லது சிரமப்படுபவர்களுக்குச் சுற்றுச்சூழலில் எழும் ஓசையைப் பற்றி தகவல் தெரிவிக்க ஒளி மூலம் குறிப்புகளை வழங்கும் ‘பெரி’ எனும் உதவிக் கருவியை அவரும் ‘எஸ்யூடிடி’ குழுவினரும் உருவாக்கி, ‘ஜேம்ஸ் டைசன் விருது 2017’ஐ வென்றனர்.மேல்விவரங்களுக்கு: https://www.jamesdysonaward.org/en-NZ/2017/project/peri/

அதனால், காது கேளாமை பற்றி பவித்ரனுக்குத் தனி ஆர்வம் ஏற்பட்டது. சைகை மொழி கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.

மேலும், ஒரு குழுவின் உதவியோடு, காது சரியாகக் கேளாதவர்கள் வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் சவால்களை அவர்களே சுயமாகத் தீர்த்துக்கொள்ள, ‘ஆர்டுவினோ’, ‘ரேஸ்ப்பேரி பை’ முதலான மின்னணுக் கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொடுத்தார்.

இதுபோன்று சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த மேலும் பல திட்டங்களைச் செயல்படுத்த இளையர்களை முன்வருமாறு ஊக்குவிக்கிறார் இவர்.

பவித்ரனின் 10 நாள் பயணத்தின் பாதையை https://instagram.com/virensadventures அல்லது https://www.komoot.com/tour/1277122627 ஆகிய இணைப்புகளின் வழி பின்தொடரலாம்.

குறிப்புச் சொற்கள்