நடனம்வழி சேவையாற்றும் சிறப்புத் தேவைக் கலைஞர்கள்

2 mins read
5bfa5b06-1091-43eb-ac1f-988955939ae4
‘டவுன் சிண்ட்ரோம்’ கொண்ட ‘டிஏடிசி’ நடனக் குழுவினரும் முதியோரும் தொண்டூழியர்களும் ‘கல்சா’ சங்கத்தில் இணைந்து வழங்கிய நடனம். - படம்: லெராய் கோ, ஏமஸ் லோ/ தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி வடிவமைப்புப் பள்ளி
multi-img1 of 4

நடனத்தை முதியோருக்குக் கற்றுக்கொடுத்து மகிழ்விக்கின்றனர் ‘டவுன் சிண்ட்ரோம்’ கொண்ட ‘டிஏடிசி’ நடனக் கூட்டணியினர்.

2021 முதல் முஸ்லிம் சிறுநீரக நடவடிக்கைச் சங்கம், ‘யோங்-என்’ பராமரிப்பு நிலையம், ‘ஸ்ரீ நாராயண மிஷன்’, ‘காங் ல ஹாஸ்பிஸ்’ நிலையங்களில் நேரில் சென்று பயிற்றுவித்துள்ளனர் ‘டிஏடிசி’ குழுவினரும் மூத்த தொண்டாளர்களும்.

நாற்காலியில் அமர்ந்தபடியே செய்யக்கூடிய நடன அசைவுகளை அவர்கள் கற்பித்தனர்.

இத்திட்டத்தின் சிறப்பான முடிவை அக்டோபர் 21, ‘கல்சா’ சங்கத்தில் மூத்தோரும் ‘டிஏடிசி’ குழுவினரும் கொண்டாடினர். 

‘கொவிட்’ தொற்றினால் தாதிமை இல்லங்களில் தனியாக இருக்கும் மூத்தோருக்காக ஆறு பாகக் காணொளியாக 2020ல் துவங்கியது இத்திட்டம். காணொளியை https://mayadancetheatre.org/portfolio/body-in-motion/ தளத்தில் காணலாம்.

மாயா நடன அரங்கின் ஒரு பிரிவான ‘டிஏடிசி’, ஆறு சிறப்புத் தேவைகள் கொண்ட நடனக் கலைஞர்களுடன் 2018ல் தொடங்கியது.

‘டேங்கோ’ நடனம் கற்றுத் தேர்ந்தனர் ‘டிஏடிசி’ குழுவினர்

இதற்கு முன்பு, ‘டேங்கோ’ நடன வடிவை மூன்று புதன்கிழமைகளில் அர்ஜெண்டினா துணைத் தூதர் சேண்டியாகோவிடமிருந்து கற்றுவந்திருந்தனர் ‘டிஏடிசி’ குழுவினர்.

அதனையொட்டி ‘டிஏடிசி’, அர்ஜெண்டினா தூதரகத்துடன் இணைந்து அக்டோபர் 4 ‘ஆர்டிட்டியூட்’ ஓவியக் காட்சிக்கூடத்தில் ‘டேங்கோ’ நிகழ்ச்சி வழங்கியது.

அர்ஜெண்டின துணைத் தூதர் சேண்டியாகோ (இடது), ‘டிஏடிசி’ நடனக் கலைஞர்களுக்கும் மூத்தோருக்கும் ‘டேங்கோ’ நடன வகையை மூன்று புதன்கிழமைகளில் கற்றுத் தந்தார்.
அர்ஜெண்டின துணைத் தூதர் சேண்டியாகோ (இடது), ‘டிஏடிசி’ நடனக் கலைஞர்களுக்கும் மூத்தோருக்கும் ‘டேங்கோ’ நடன வகையை மூன்று புதன்கிழமைகளில் கற்றுத் தந்தார். - படம்: ரவி சிங்காரம்

நிகழ்ச்சியில் அழைக்கப்பட்ட பொதுமக்களும் கலந்துகொண்டனர். அர்ஜெண்டினத் தூதர் மோரிஷியோ நைன் சிறப்பித்தார்.

‘டிஏடிசி’ குழுவில் சேர்ந்து தொண்டாற்றும் 17 வயது கிரிஷ்மிதா, ரேஷ், நடன வகுப்புகளுக்குத் துணைபுரிந்தனர்.

“சிறப்புத் தேவை கொண்டோருடன் பழக முடியுமா என்ற கேள்வி முன்பு எங்களுக்கு இருந்தது. ஆனால், சக தோழர்களாகப் பழகப் பழக அவர்களும் நம்மைப் போன்றே, என உணர்ந்தோம்,” என்றனர் கிரிஷ்மிதா, ரேஷ்.

‘டிஏடிசி’ குழுவினர், நடனமாடிய மூத்தோருடன் ‘ஆர்டிட்டியூட்’ அதிகாரியும் அர்ஜெண்டினத் தூதரும் (பின்வரிசையில் நடுவில்). 
‘டிஏடிசி’ குழுவினர், நடனமாடிய மூத்தோருடன் ‘ஆர்டிட்டியூட்’ அதிகாரியும் அர்ஜெண்டினத் தூதரும் (பின்வரிசையில் நடுவில்).  - படம்: ரவி சிங்காரம்

நவம்பர் 10 முதல் 30 வரை (ஞாயிறு தவிர நாள்தோறும் 9 மணி - 6 மணி) மாயா நடன அரங்கு, தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி (டிபி​) வடிவமைப்பு, மூப்பியல் மாணவர்களுடன் ‘டிபி’ நூலகத்தில் புகைப்படக் கண்காட்சியை நடத்தும்.

இளையர், மூத்தோரின் ஒன்றிணைந்த அனுபவங்களை இக்கண்காட்சிமூலம் பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம்.

குறிப்புச் சொற்கள்