இளையர்களின் கலைத் திறன் சிறப்பை வெளிப்படுத்திய கலை விழா

கலைகளில் சிறந்து விளங்க வயது ஒரு தடையன்று என்பதை நிரூபித்துவருகின்றனர் நவம்பர் 17 முதல் 26 வரை ‘எஸ்பிளனேட்’ ஏற்பாட்டில் நடந்த கலா உத்சவம் எனும் கலை விழாவில் பங்கேற்ற இளையர்கள்.

நாட்டியத்தில் நாட்டம்

அழகான நடனத்தைப் படைத்து கலா உத்சவத்தைத் தொடங்கிவைத்த ராயலூஷன் நடனக்குழு. படம்: எஸ்பிளனேட்.

இக்கலை விழாவில் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் ராயலூஷன் குழு வழங்கிய தொடக்க நிகழ்ச்சியில் 25 வயது பிருந்தாவும் 31 வயது இப்சித்தாவும் நடனமணிகளாகப் பங்களித்தனர்.

தங்களுக்கிடையே நடனத்தில் ஏறக்குறைய 30 ஆண்டு அனுபவம் இருந்தபோதும் இவர்களுக்கு கலா உத்சவ மேடை புதிது.

“100 பேர் முன்னிலையில் நடனமாடிய அனுபவம் எங்களுக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். இதை என்றும் மறக்கமாட்டோம்,” என்றார் தென்னிந்திய, கிராமிய,‘ஹிப்ஹாப்’ நடனங்களில் சிறக்கும் இப்சித்தா.

“வெளிநாட்டினர் பலரும் எங்கள் நடனத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். நடனமாடுவது கலாசாரத்தைக் கட்டிக்காக்க ஒரு நல்ல வழி,” என்றார் பிருந்தா. இவர் 9 வயதிலேயே பரதநாட்டிய அரங்கேற்றம் செய்தவர்.

தாங்கள் பயின்றதற்கும் அப்பால் இந்தக் கலை விழாவிற்காகப் பல நடனவகைகளின் கலவையைத் தொகுத்து நடனமாக வழங்கினர்.

பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல், பெற்றோர்-சிறுவர்களுக்கும் நடனப் பயிலரங்கை ராயலூஷன் அணியினர் கலா உத்சவத்தில் வழங்கினர்.

நமது கலாசார நடனத்தை மற்ற இனத்தாருடன் பகிர்ந்துகொண்டதில் நான் பேரின்பமும் பெருமிதமும் அடைந்தேன்.
லாவன்யா, ‘ராயலூஷன்’ நடனக்குழு

“அவர்கள் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வதைப் பார்க்கும்போது என் மனம் பெருமகிழ்ச்சி அடைந்தது,” என்றார் ‘ராயலூஷன்’ தோற்றுநர் ஐஸ்வர்யா ஜெயகுமாருடன் அப்பயிலரங்கை இணைந்து வழிநடத்திய லாவன்யா.

கலா உத்சவம் 2023ல் நடனப் பயிலரங்குகள் வழங்கிய ராயலூஷன். படத்தில், முன்னால் இருப்பது ‘ராயலூஷன்’ தோற்றுநர் ஐஸ்வர்யா ஜெயகுமார். படம்: எஸ்பிளனேட்.

பாரம்பரியம், பண்பாடு

மகூலம் கலைக்கூட நடனக் கலைஞர்கள். படம்: மகூலம் கலைக்கூடம்.

கலா உத்சவ நிறைவு நிகழ்ச்சிகளில் மகூலம் கலைக்கூட நடனக் கலைஞர்கள் பொங்கல் பண்டிகையைப் பற்றி ‘மருதக் கிளிகள்’ எனும் நடனத்தை வழங்கினர்.

மயிலாட்டம், கரகாட்டம், மரக்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்றவற்றையும் இவர்கள் வழங்கினர்.

“நடனத்தின்வழி ஒருவர் தன்னையே ஆராயமுடியும்,” என்கிறார் இவர்களின் நடன ஆசிரியை ஆ. மீனலோசனி, 27.

வயலினில் வளர்ச்சி

கலா உத்சவத்தில் வயலின் வித்துவான் ஆர்.கே. ஶ்ரீராம்குமாரின் வழிகாட்டுதலில் பல இளம் இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர்.

“அவ்வளவு பெரிய வித்துவானின் முன்னிலையில் வயலின் வாசிக்க நடுக்கமாக இருந்தாலும் நிறைய கற்றுக்கொண்டேன்.” என்றார் வயலின் நிகழ்ச்சி வழங்கிய ஶ்ரீரஞ்சனி முத்து சுப்ரமணியன், 17.

பிரபல வித்துவான் ஆர்.கே. ஶ்ரீராம்குமார் வழங்கிய பயிலரங்குகள் தங்களுக்குப் பெரிதும் உதவியதாகக் கூறினர் வயலின் வாசித்த சிங்கப்பூர்க் கலைப்பள்ளி மாணவர்கள் லயா மஹேஷ், ஸ்ரீரஞ்சனி முத்து சுப்ரமணியன், வேதக்ஞா நரசிம்ஹா. (இடமிருந்து) படம்: எஸ்பிளனேட்.
கலா உத்சவம், கலைஞர்கள் அனைவருக்கும் தலைசிறந்த தளமாக அமைந்தது.
வயலின் கலைஞர் ஶ்ரீரஞ்சனி முத்து சுப்ரமணியன், 17

ஏற்கெனவே 2021ஆம் ஆண்டு இக்கலை விழாவில் வாய்ப்பாட்டுப் பாடினார் ஶ்ரீரஞ்சனி. இவர் கடந்த 12 ஆண்டுகளாகக் கர்நாடக வயலின், வாய்ப்பாட்டு சிங்கப்பூர் இந்திய நுண்கலைகள் மன்றத்தில் கற்றுவந்துள்ளார்.

குரு நெல்லை ரவீந்திரனிடம் தொடங்கியது இவரது கர்நாடக வயலின் பயணம். சமீபத்தில் கலைமாமணி எம்பார் எஸ் கண்ணனிடமிருந்தும் நிபுணத்துவ கர்நாடக வயலினும் கற்கத் தொடங்கியுள்ளார் ஶ்ரீரஞ்சனி.

கலா உத்சவத்தில் வயலின் கச்சேரி படைத்த ஶ்ரீரஞ்சனி. படம்: ஶ்ரீரஞ்சனி முத்து சுப்ரமணியன்.

லயாவின் ‘பிரபஞ்சம்’

அண்மையில் நித்யஸ்ரீ மகாதேவன் படைத்த கச்சேரிக்கு வயலின் வாசித்த லயா மஹேஷ், 16, இக்கலை விழாவில் ‘பிரபஞ்சம்’ எனும் கருவில் கச்சேரி படைத்தார்.

சிங்கப்பூர்க் கலைப்பள்ளியில் உயர்நிலை நான்கு மாணவரான இவரது கர்நாடக இசைப்பயணம் தாயாரின் கற்பித்தலிலிருந்து தொடங்கியது.

ஏழு வயதில் லால்குடி விஜயலட்சுமியிடமிருந்து கர்நாடக வயலின் கற்கத் தொடங்கியவர் கடந்த ஏழாண்டுகளாக சென்னையிலிருக்கும் ஸ்ரீ பகலா ராமதாஸிடமிருந்து கற்றுவருகிறார்.

நிருத்யாலயா நடனப் பள்ளியிலும் 4 வயதிலிருந்து பரதநாட்டியம் கற்றுவந்துள்ளார். இவரது தந்தையும் கலா உத்சவத்தில் ‘ஸ்வரிதம்’ குழு உறுப்பினராக மிருதங்கம், கடம் வாசித்தார். தாயாரும் பாடகர்.

அவர்களோடு வயலின் கச்சேரி வழங்கினார் சக மாணவர் வேதக்ஞா நரசிம்ஹா, 16. இவர் சங்கீத கலாநிதி கும். ஏ.கன்னியாகுமரி, வித்துவான் பம்பாய் வி ஆனந்த் ஆகியோரின் மாணவர்.

வித்துவான் ஆனந்திடமிருந்து ஏழு வயதிலிருந்து கர்நாடக வயலின் கற்றுவந்துள்ள இவர் விதுஷி வைஷ்ணவி ஆனந்திடமிருந்து கர்நாடக வாய்ப்பாட்டும் கற்றுவந்துள்ளர்.

வித்துவான் ஆர்.கே. ஶ்ரீராம்குமாரிடமிருந்து கற்ற அனுபவம் இவர்கள் அனைவரது நினைவிலும் என்றும் நிலைத்திருக்கும்.

உரமூட்டும் குரல்

கலா உத்சவத்தில் பாடிய அதிதி ஆத்ரேயா, 17 (இடது), அவரது 13 வயதுத் தங்கை அன்விதாவுடன் (வலது) பல இசைக் கச்சேரிகள் வழங்கியுள்ளார். படம்: ரவி சிங்காரம்

17 வயது அதிதி ஆத்ரேயாவுக்கும் அவரின் 13 வயதுத் தங்கை அன்விதாவுக்கும் இசைதான் உயிர்நாடி. 6 வயதிலிருந்து கர்நாடக இசை கற்றுவரும் இவர்கள் பல கோயில்களிலும் நிகழ்ச்சிகளிலும் பாடியுள்ளனர்.

“இசை ஒருவரது வாழ்க்கை முழுவதும் உடன்வரக்கூடியது. மனத்திற்கு அமைதியைக் கொடுப்பது. ஓர் இசைவடிவத்தைக் கற்றால் மற்ற இசைவடிவங்களையும் புரிந்துகொண்டு பாராட்டமுடியும்,” என்றார் அதிதி.

அதன் பலனாக அதிதி, கலா உத்சவத்தில் பாடும் வாய்ப்பைப் பெற்று பக்தியை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியைப் படைத்தார்.

இசையிலும் படிப்பிலும் சமநிலை காணும் இவர் ‘என்யுஎஸ்ஹை’ பள்ளியின் மாணவி. இருமுறை பிரதமர் புத்தகப் பரிசை இவர் வென்றுள்ளார்.

அஹானா மலஷெட்டி, காவ்யா வெங்கடேஷ், ரஞ்சனி பாண்டா ஆகியோரும் (இடமிருந்து) கர்நாடக வாய்ப்பாட்டுப் பாடி இவ்வாண்டுக் கலைவிழாவில் மகிழ்வித்தனர். படம்: எஸ்பிளனேட்

காவ்யா வெங்கடேஷ், 12 ஆண்டுகளாக சிங்கப்பூர் இந்திய நுண்கலைகள் மன்றத்தில் சோனாலி சின்ஹா பிஸ்வாஸிடம் கர்நாடக வாய்ப்பாட்டுக் கற்றுள்ளார். 2023ல் பட்டயம் பெற்ற அவர், கலா வைபவம் போன்ற விழாக்களிலும் தேசிய கலைகள் மன்றம் நடத்தும் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். ‘சுர் தாள் சங்கம்’ போட்டியில் 2019ல் முதல் பரிசும் பெற்றார்.

ரஞ்சனி பாண்டா சிங்கப்பூர் இந்திய நுண்கலைகள் மன்றத்தில் பத்து ஆண்டுகளாக கர்நாடக இசைக் கற்றுள்ளார். அவர் ‘ஜீஏபேக்’ சுர் தாள் சங்கம், தேசிய கலைகள் மன்ற போட்டிகளில் பங்கேற்று வென்றுள்ளார். 2019, 2023ல் கர்நாடக வாய்ப்பாட்டில் தலைசிறந்த மாணவர் விருதையும் பெற்றார்.

அஹானா மலஷெட்டி, 16, கர்நாடக வாய்ப்பாட்டை 12 ஆண்டுகளாக இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் கற்றுவந்துள்ளார். சோனாலி சின்ஹா பிஸ்வாஸிடம் எட்டு ஆண்டுகளாகக் கற்றுள்ளார். ‘அகேடமி தினம்’, ‘மாணவர் இரவு’ போன்ற கச்சேரிகள், மாணவ விழாக்களிலும் இசை வழங்கியுள்ளார்.

கலா உத்சவத்திற்கு, ஜெய்ப்பூர்-அற்றாலி கயல் காயகி பாரம்பரியத்தில் தலைசிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞரான அஷ்வினி பிடே தேஷ்பாண்டே இவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

துடிப்பான நடிப்பு

‘பச்ச பங்களா ரெட்ட கொலடா!’ நாடகத்தில் இவ்வாண்டு கலா உத்சவத்தில் நடித்த ஷேக் யாசின் (இடமிருந்து முதலாவது). படம்: எஸ்பிளனேட்

நன்யாங் பல்கலைக்கழகத்தில் ‘உத்ரா’ நாடகத்தில் நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய ஷேக் யாசின், 13 ஆண்டுகளாக மேடை நாடகங்களில் நடித்துவருகிறார்.

ஏற்கெனவே சில முறை கலா உத்சவத்திலும் பங்கேற்றுள்ளார். இம்முறை தமிழாக்கம் செய்யப்பட்ட ஆங்கில நாடகத்தில் நடித்தார். பல விருதுகளை வென்ற இந்நாடகம், நியூயார்க், லண்டன் போன்ற நகரங்களில் வாராவாரம் மேடையேறிவருகிறது.

“நடிப்பதற்கான தயக்கத்தைக் கடக்கவேண்டும். எந்தக் கதாபாத்திரத்தையும் உள்வாங்கும் மனப்பான்மையுடன் ஏற்று நடிக்க வேண்டும்,” என்பதே புதிய நடிகர்களுக்கு ஷேக் வழங்கும் அறிவுரை.

கலா உத்சவம் 2023ஐப் பற்றிய மேல்விவரங்களுக்கு: https://www.esplanade.com/whats-on/festivals-and-series/festivals/2023/…

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!