தேசிய சேவையாற்றும் இளம் ஆண்களை வழிநடத்தும் பெண்

2 mins read
e14a97e0-d86b-4c27-a480-0288d9e0d43b
சீருடையில் இரண்டாம் சார்ஜண்ட் வினிதா ஏரியல், 27. - படம்: சிங்கப்பூர் ஆயுதப் படை

சிங்கப்பூர் ஆயுதப் படையில் பெற்றோரும் அண்ணனும் பணிபுரியும் நிலையில், அவர்கள் வழியில் ராணுவத்தில் இணைந்து இரண்டாம் சார்ஜண்ட்டாகச் சேவையாற்றி வருகிறார் வினிதா ஏரியல், 27,

காலாட்படைப் பிரிவு, கனரக ஆயுதப் படைப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளைக் கொண்ட ‘எச்கியூ3டிவ்’ என்ற படைப் பிரிவில் கம்பெனி குவாட்டர்மாஸ்டர் சார்ஜண்ட் பொறுப்பில் இவர் செயலாற்றுகிறார்.

ஈராண்டு தேசிய சேவையாற்றும் இளையர்கள் பலர் பயிற்சி பெற்று, இவர் மேற்பார்வையில் திறன்களைக் கற்றுத் தேர்ந்தனர்.

விளையாட்டு அறிவியல் துறையில் பட்டயம் பெற்ற குமாரி வினிதா, முன்னதாக ஆசிரியராகவும் வெளிப்புற நடவடிக்கைகளுக்கான பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றி இருந்தார்.

ஒரே இடத்தில் அமர்ந்தபடி வேலை செய்வதை விரும்பாத குமாரி வினிதா, சிங்கப்பூர் ஆயுதப் படையில் பணியாற்ற முடிவு செய்தார்.

“ராணுவத்தின் பெரிய, பொதுவான குறிக்கோளாக இருக்கும் தேசிய பாதுகாப்பிற்கு, ஆயுதப் படையில் பணியாற்றுபவர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க முடியும்,” என்கிறார் இவர்.

சிறிய உடல்வாகு கொண்டுள்ளதால் தொடக்கத்தில் ஆதங்கப்பட்டதாக குமாரி வினிதா தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

“இருந்தபோதும், நான் இலகுவான கருவிகளைச் சுமந்துகொள்வேன். என் அணியின் சார்பில் நிர்வாகப் பணிகளை நடத்தி முடிப்பேன்,” என்று இவர் சொல்கிறார்.

குமாரி வினிதா தம் நேரத்தைச் சரிவர நிர்வகித்து, மனநிறைவு காண்கிறார்.

“வேலை நேரத்தில் கவனத்துடன் செயலாற்றுவேன். அத்துடன், வார இறுதி நாள்களில் குடும்பத்துடன் இணைந்திருப்பேன்,” என்று அவர் கூறினார்.

தமது பணியின் மூலம் வளர்ச்சியும் மனநிறைவும் அடைவதாகக் கூறும் குமாரி வினிதா, ஆர்வமுள்ளோர் இப்பணியில் சேரும்படி ஊக்குவிக்கிறார்.

குறிப்புச் சொற்கள்