தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புத்துணர்வும் புது வாய்ப்புகளும்

2 mins read
bb874bc2-41c5-4a19-bb94-6ddc7ebe3ad8
பல்கலைக்கழக மாணவர்களுடன் எழுத்தாளர் ஹர்ஷிதா (அமர்ந்திருப்போரில் வலமிருந்து இரண்டாவது). - படம்: ஹர்ஷிதா பாலாஜி

~ ஹர்ஷிதா பாலாஜி

புத்தாண்டு புதிய வாய்ப்புகளுக்கும் நட்புகளுக்கும் வழிவகுக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

இதை நிறைவேற்ற, பட்டப்படிப்பைத் தாண்டி, இதர நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்கி மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் மனநிலையுடன் இவ்வாண்டை எதிர்கொள்வது அவசியம் என்று நான் நினைக்கிறேன்.

ஒரு பல்கலைக்கழக மாணவியாக, என் ஆசிரியர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும், மிக முக்கியமாக என் குடும்பத்தினரிடமிருந்தும் கற்றுக்கொள்ளவேண்டியவை பல. இவ்வாண்டில் மேலும் ஆக்கப்பூர்வமான முறையில் அவர்களுடன் நேரத்தைச் செலவழிப்பதன் மூலம் பலவற்றைக் கற்றுக்கொண்டு, என்னைப் பல கோணங்களில் மேம்படுத்திக்கொள்வது ஒரு முக்கியச் குறிக்கோளாகும்.

அத்துடன், தொடர்ந்து மாறிவரும் சமூக-பொருளியல் நிலையையும் உலக நிலைத்தன்மையையும் கருத்தில் கொள்ளவேண்டிய அவசியமும் என்னைப் போன்ற இளையர்களிடத்தில் இருக்கின்றது. அவ்வாறிருக்க, என்னைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளைப் பற்றி அறிந்துகொள்ள முயல்வதுடன், சமூக சேவையிலும் தொடர்ந்து ஈடுபடுவதை இவ்வாண்டின் இன்னொரு முக்கியச் குறிக்கோளாக கொண்டுள்ளேன்.

இவற்றைத் தாண்டி, தமிழ்ச் சமுதாயத்திற்கும் என்னால் ஆற்ற முடிந்த பங்கை இவ்வாண்டும் தொடர விரும்புகிறேன்.

‘தமிழா’ எனும் அமைப்பின் துணைத் தலைவராகச் செயலாற்றி வரும் நான், 2024ஆம் ஆண்டில் அதன்வழி பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சக தமிழ் இளையர்களிடமிருந்து பல தகவல்களையும் பாடங்களையும் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

மேலும், அடுத்தடுத்து வரும் இளையர்கள் தங்களை மேம்படுத்திக்கொண்டு, மற்றவர்களுக்குக் கைகொடுக்க எங்கள் அமைப்பும் மற்ற தமிழ் அமைப்புகளும் அவற்றால் முடிந்த பங்கினை ஆற்றவேண்டும்.

இப்படிப் பல குறிக்கோள்களைக் கொண்டுள்ள என்னைப் போன்ற இளையர்களுக்கு 2024ஆம் ஆண்டு கைகொடுக்கும் என நம்புகிறேன். ஆனால், நம்பிக்கை மட்டுமே போதாது. ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கவேண்டும்; உதவிக்கரம் நீட்டவும் தயாராக இருக்கவேண்டும். பரிவும் அன்பும் நிறைந்த சூழலை நமக்கென்ன அமைத்துக்கொள்ளவும் மற்றவர்களுக்கு அமைத்துக்கொடுக்கவும் தயாராக இருத்தல் அவசியம்.

மேற்குறிப்பிட்ட அனைத்தையும் சாதிக்க முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால், இவ்வாண்டில் அனைத்தையும் சாதிக்க முயலவேண்டும். அதுவே, இருப்பதிலேயே மிக முக்கியமான குறிக்கோள்!

-

~ ஹர்ஷிதா பாலாஜி : சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்தில் பயிலும் கணினித்துறை, சட்டத்துறை மாணவி.

குறிப்புச் சொற்கள்