பறவைகளைப் பராமரிக்கத் தொடங்கிய ஒருவர், அதனால் தன் வாழ்க்கையில் வழித்தவறிச் செல்லவில்லை என்றார். அது அர்த்தமுள்ள ஒரு பொழுதுபோக்கு என்றார் மற்றொருவர்.
பறவை ஆர்வலர்கள் இவ்வாறு நிலைமையை மிகைப்படுத்திப் பேசுவதாக நான் எண்ணியிருந்தேன்.
இப்படி இருக்கையில் கெபுன் பாருவில் பல தலைமுறைகளாகத் தொடரும் பாடும் பறவை ஆர்வலர்க் குழுவைப் பேட்டி காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத் து.
சிங்கப்பூரின் ஆகப் பழைய, பெரிய பறவைக் காட்சியகமாக அவ்விடம் விளங்குகிறது.
மறைந்து வரும் இப்பொழுதுபோக்கைப் பற்றி அறிந்துகொண்டதுடன் இத்தகைய பொழுதுபோக்குகளைத் தொடரும் போக்கு குறைந்துவருவது பற்றியும் அக்குழுவிடமிருந்து தெரிந்துகொண்டேன்.
முன்னோடிப் பறவை ஆர்வலராகப் பல பாடும் பறவைகளைப் பராமரித்து, பரிசுகள் வென்ற தன்னுடைய அப்பாவின் வழிகாட்டுதலில் இப்பொழுதுபோக்கை மேற்கொள்ளத் தொடங்கினார் கிஷோர் குமரன், 32.
இவர் தமது முழுநேர வேலையிலிருந்து விலகி, பறவைப் பராமரிப்பில் கூடுதலாகக் கவனம் செலுத்தச் சுயதொழில் ஒன்றை நிறுவினார்.
மற்றோர் ஆர்வலரான உமா காந்தன், விலங்குகள்மீது தமக்கு இருக்கும் நாட்டத்தை உணர்ந்து அதுசார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
எளிதில் பாதிப்படையக்கூடிய நிலையில் தாங்கள் இருப்பதை இவர்கள் இருவரும் உணர்ந்தனர். ஆனால், சிறுவயதிலிருந்தே இப்பொழுதுபோக்கு இவர்களின் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்துவருகிறது.
தற்போதுள்ள இளையர்கள் கல்விக்கனவைத் துரத்தும் அளவுக்கு எந்த ஒரு பொழுதுபோக்கிலும் ஈடுபடுவதில்லை என்பது கிஷோர் உட்பட குழு உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தாக இருந்தது.
நேரடிப் பள்ளி நுழைவுச் சேர்க்கைக்காகத் தொடக்கப்பள்ளி மாணவர்களை இசைக்கருவி வாசித்தல், விளையாட்டுகளில் ஈடுபடுதல் எனப் பலவற்றில் சேர்க்கப் பெற்றோர் விரும்புகின்றனர்.
அதனால் இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளாக இவை மாறிவிடுகின்றன. மனதுக்குப் பிடித்தவற்றைச் செய்து அதில் தன் அடையாளத்தைக் கண்டறிவதும் மனநிறைவு அடைவதும் அரிதாகிப் போனதில் வருத்தம் தெரிவித்தார் கிஷோர்.
குறிப்பாக, இயற்கை சார்ந்த பொழுதுபோக்குகள் குறைந்து வருகின்றன.
அதிகக் கவனம் செலுத்திப் பறவைகளை வளர்ப்பதிலும் அவற்றுக்குப் பயிற்சி அளிப்பதிலும் பல திறன்களை வளர்த்துக்கொள்ளும் பறவை ஆர்வலர்களின் ஆர்வத்தை இன்றைய இளையர்களிடையே காண முடிவதில்லை என்று கிஷோர் குறிப்பிட்டார்.
நட்புவட்டத்தை ஏற்படுத்தித்தரும் பறவைப் பராமரிப்பு பொழுதுபோக்கை இளையர்களிடத்தில் ஊக்குவிக்க முயற்சி செய்து வருகிறார் இவர்.
“பறவைகளை ரசிக்கும் இளையர்கள் அவற்றைப் பராமரிக்கவேண்டும் என்றால் முகம் சுளிக்கின்றனர். பொழுதுபோக்கு என்றாலே பள்ளி விவகாரங்களுக்கு உதவவேண்டும் எனப் பலர் எண்ணுகின்றனர். அல்லது, கணினி விளையாட்டுகளில் மூழ்கித் தன்னிலை மறக்கின்றனர்,” என்றார் கிஷோர்.
கெபுன் பாருவில் அன்றாடம் காலை ஏழு மணியிலிருந்தே தங்களின் பறவைக் கூண்டுகளை உயர் கம்பங்களில் ஏற்ற வரும் ஆர்வலர் கூட்டத்தைக் காணும்போது பிரம்மித்துப்போனேன்.
ஓர் இளையராக அந்தப் பிரம்மிப்பை ஒரு நடவடிக்கையின் மூலம் நானே உணர்ந்து பலநாள்களாகிவிட்டது.
இவ்வாறு வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கும் ஏதேனும் ஒரு பொழுதுபோக்கு ஒருவருக்கு இருக்கும்போது அதன் மூலம் ஒருவருக்கு நம்பிக்கையும் உற்சாகமும் பிறக்கின்றன என்பதை இன்றைய இளம் தலைமுறையினர் உணர வேண்டும்.


