மாதவிடாய்: தவிப்பும் தயக்கமும் தணியட்டும்

உலகத்தில் இருக்கும் பெண்கள் அதிகமானோர் மாதவிடாய் குறித்து வெளிப்படையாக பேச முடியாமல் தவிப்பது இக்காலத்தில் இன்னும் நிலவி வருகிறது.

வேலையிடத்தில் சக ஊழியர்கள் ஆண்களாக இருந்தால் கூச்சப்படுவது, குடும்பத்தில் தன் தந்தையிடம் மாதவிடாய் பற்றி கலந்துரையாட தவிர்க்கும் பெண்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் ஒருவகையில் இது போன்ற சவால்களை எதிர்கொள்வது இயல்பாக இருக்கிறது.

மாதவிடாய் பல பெண்களை மாதம் தவறாமல் புரட்டிப் போடுகிறது. ஒரு சிலருக்கு அதைக் கையாள முடிந்தாலும் அந்த அனுபவம் பெரும்பாலான பெண்களுக்குக் கொடுமையானது.

பெண் விளையாட்டாளர்கள் மாதவிடாய் வந்துவிட்டால் அதை எப்படிச் சமாளிப்பார்கள் என்று நாம் யோசித்திருப்போம். போட்டி நடைபெறும் வேளையில், மாதவிடாய் குறித்த பேச்சுக்கு இடமில்லை.

அவ்வகையில், துடிப்பாக விளையாட்டில் ஈடுபட்டு வரும் இளம்பெண்கள் இருவர் மாதவிடாய் மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டையும் ஒட்டி, தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

சினைப்பை நீர்க்கட்டி நோய்க்குறி

பல ஆண்டுகளாக சினைப்பை நீர்க்கட்டி நோய்க்குறி (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) பிரச்சினையால் தவித்துவரும் ரிஷிகா கானமூர்த்தி, 22, மாதவிடாய் வரும்போதெல்லாம் கடும் துன்பத்தைச் சந்திக்கிறார்.

தாங்க முடியாத வலி, மிகை ரத்தப்போக்கு, மாதவிடாய் நாள்களில் ஏற்படும் மனநிலை மாற்றம் ஆகியவற்றைப் பொறுத்துகொள்ள முடியாமல் இருக்கிறார்.

வலிநீக்கி மாத்திரைகள் உட்கொள்வது, வயிற்றுப் பகுதியில் சுடுநீர்ப்பை வைப்பது, வலி கூடும்போது வலிநீக்கி ஊசி போட்டுக்கொள்வது போன்ற வழிமுறைகளை இவர் நாடுகிறார்

சிறுவயதிலிருந்தே துடிப்பான வாழ்க்கை முறையை கடைப்பிடித்து வரும் ரிஷிகா, எட்டு வயதிலிருந்து வலைப்பந்தாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பயிலும் அவர், ஓட்டப்பந்தயம், கைப்பந்து ஆகியவற்றிலும் ஈடுபட்டு வருகிறார்.

“மிகவும் சுறுசுறுப்பாக இருந்தால் மாதவிடாய்க் காலம் எளிதாக அமையும் என்பது ஒரு கட்டுக்கதை. நான் பல ஆண்டுகளாக விளையாட்டுகளில் ஈடுபட்டு, சிங்கப்பூர் சார்பாக பல போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். இருந்தாலும், ஒவ்வொரு மாதமும் எனக்கு நரக வேதனைதான்,” என்கிறார் ரிஷிகா.

“சாதாரணமாக, பள்ளிகளில் விளையாட்டு வகுப்பின்போது மாணவிகள் சிலருக்கு மாதவிடாய் இருந்தால் அவர்கள் தங்கள் ஆசிரியர்களிடம் அதை காரணமாக வைத்து உடற்பயிற்சியில் ஈடுபட தவிர்க்கப் பார்ப்பார்கள்.

“ஆனால், என்னைப் போன்ற விளையாட்டு வீராங்கனைகளுக்கு அது சாத்தியமாகாது. மாதவிடாய் இருக்கிறது என்று சொன்னாலே, பெண் பயிற்றுவிப்பாளர்கள் அதை ஒரு காரணமாகக் கூறக்கூடாது என்று கண்டிப்பார்கள்,” என்று வருத்தத்துடன் கூறினார் ரிஷிகா.

தன்னுடன் விளையாட்டில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் பெண்களாக இருப்பதால் ரிஷிகா அவர்களுடன் மாதவிடாய் பற்றிப் பேச முடியும். இருந்தாலும், ஆண் பயிற்றுவிப்பாளர்கள் சிலரிடம் அதைப் பற்றிப் பேச ரிஷிகாவுக்குத் தயக்கந்தான்.

அதற்கான காரணத்தை விளக்கிய ரிஷிகா, “ஆண் பயிற்றுவிப்பாளர்களும் எங்களுடன் வெளிப்படையாக மாதவிடாய் பற்றிப் பேச விரும்புவதில்லை,” என்று சொன்னார்.

ஒரு நாள் அந்தத் தயக்கத்தை போக்க வேண்டுமென்ற ரிஷிகா, “பெண்களும் தங்களைச் சுற்றி இருக்கும் ஆண்களுடன் மாதவிடாய் பற்றிப் பேச வழிவகுக்க வேண்டும்,” என்றார்.

அதன்படி, தன் சகோதரனிடமும் காதலனிடமும் மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசி அவர்களுக்குப் புரிய வைத்தார் ரிஷிகா.

மாதவிடாய் இருந்தாலும், பெண் பயிற்றுவிப்பாளர்கள் சிலர் வீராங்கனைகளை நீச்சல் பயிற்சி எடுக்க கட்டாயப்படுத்துவர் என்று கூறிய ரிஷிகா, “நீச்சல் அடித்தால் ரத்த ஓட்டம் நின்று விடும் என்பதால் அவர்கள் மாதவிடாய் இருந்தாலும் எங்களை நீச்சல் அடிக்க வற்புறுத்துவார்கள்.” என்றார்.

இதனால், வேலையிடத்திலும் பள்ளிகளிலும் பெண்களுக்கு மாதவிடாய் பற்றி, அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள நீக்குப்போக்கான சூழல் இருக்க வேண்டும் என்பது ரிஷிகாவின் எதிர்பார்ப்பு.

மாற்றம் கட்டாயம் வேண்டும்

கூடைப்பந்து, ஹாக்கி, நடனம், ஓட்டப்பந்தயம், அடிக்கடி உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்வது என்று நல வாழ்க்கைமுறையைப் பின்பற்றி வரும் ஸ்ரேயா, 18, மாதவிடாய் காலம் தனக்குத் தாங்கக்கூடிய அளவில் உள்ளதாகப் பகிர்ந்துகொண்டார்.

“மற்றப் பெண்கள்போல எனக்குத் தாங்க முடியாத வலி வராது. அப்படி வந்தாலும் அதைப் பொறுத்துகொண்டு நான் உடற்பயிற்சியில் ஈடுபடவே முயல்வேன். அதை காரணமாகச் சுட்டி, நான் உடற்பயிற்சியைத் தவிர்க்க மாட்டேன்,” என்றார் ஸ்ரேயா.

சில காலத்திற்கு முன்பு இந்திய அரசாங்கம் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதை பற்றி தனது கருத்தை தெரிவித்த ஸ்ரேயா, “அது ஒரு நல்ல முயற்சிதான். சிங்கப்பூரில் அதுபோன்று நடந்தால் நன்றாக இருக்கும். பெண்கள் மாதவிடாய் காரணமாக பல சிரமங்களை எதிர்நோக்குகிறார்கள். அவர்கள் இதனால் அடிக்கடி மருத்துவ விடுப்பு எடுத்து வீட்டில் இளைப்பாறவும் முடியாது,” என்றார்.

மாதவிடாயின்போது வீராங்கனைகள் பலரும் இழிவாகப் பார்க்கப்படுவதாக கூறிய ஸ்ரேயா, “மாதவிடாய் வரும்போது சிரமப்படும் வீராங்கனைகள் துடிப்பாக இருக்க முடியாது. அதனால், ஆண்களுடன் ஒப்பிடும்போது அவர்களின் உடல் வலிமை குறைவாகத்தான் இருக்கும். இதனாலேயே, வீராங்கனைகள் பலவீனமானவர்கள் என்ற எண்ணம் நிலவுகிறது,” என்று கூறினார்.

குடும்பம் மற்றும் நட்பு வட்டத்தில் மாதவிடாய் பற்றித் தயக்கமின்றிப் பேசும் ஸ்ரேயா, ரிஷிகா கூறியது போல, மாதவிடாய் ஒட்டி பேசுவதை இயல்பாக்க வேண்டும் என்றார். மேலும், கழிவறைகளில் பெண்கள் பயன்படுத்துவதற்காக திண்டுகள் (pad) இலவசமாக கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றும் சொன்னார்.

அத்துடன், மாதவிடாய் வந்தால் பெண்கள் பலவீனமாக இருப்பார்கள், அவர்கள்மேல் பரிவு காட்ட வேண்டும் போன்ற கருத்துகளை முறியடிக்க வேண்டும் என்றும் ஸ்ரேயா கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!