சொந்தக் காலில் நிற்க விரும்பும் இளையர்கள்

2 mins read
படிக்கும் காலத்திலேயே சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் இளையர்களிடம் அதிகரித்து வருகிறது. பணமீட்டுவது என்பதற்கு அப்பால், அனுபவத்தையும் திறன்களையும் வளர்த்துக்கொள்ளவும் பகுதிநேரப் பணிகள் உதவுகின்றன.
d3d4c621-7660-4e61-addb-b644e74b9cb6
சிறுவர்களுக்கு விளையாட்டுச் சொல்லித்தரும் யுகேஷ் கண்ணன் - படம்: யுகேஷ்

சிலர் கல்விச் செலவிற்கு பெற்றோரைச் சார்ந்திருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். வேறு சிலர் விரைவில் நிதி சுதந்திரத்துடன் வாழ்வை அனுபவித்து வாழவேண்டும் என்ற நோக்குடன் படிக்கும்போதே பொருளீட்டும் வாய்ப்புகளைக் கண்டடைகின்றனர்.

பகுதிநேர வேலைகளைத் தேடும் இளையர்கள் முதலில் பெரிதும் தேர்ந்தெடுப்பது துணைப்பாட துறை. அவர்களின் தேர்ச்சிக் குறியீட்டைப் பொறுத்து அவர்களது சேவைக்கான கட்டணம் வேறுபடுகிறது. அவர்களின் சேவைத் தரத்திற்கேற்ப அவர்களிடம் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை மாறுபடுகிறது. இத்துறையில் மாணவர்களால் வாரத்திற்கு $100யிலிருந்து $200 வரை வருவாய் ஈட்ட முடிகிறது.

வேறு சிலர் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். பொதுவாக இவர்கள் அவ்விளையாட்டின் சிறந்த விளையாட்டாளர்களாக இருந்து அதன் மீது கொண்ட ஆர்வத்தால், அந்த விளையாட்டில் ஈடுபடுவதுடன், பயிற்றுவிக்கவும் செய்கின்றனர். 

அவர்கள் எந்தளவிற்கு அவர்களது பயிற்றுவிப்புத் திறன்களை வளர்த்துக்கொண்டு பயிற்றுவிப்பாளராக முன்னேறுகின்றனரோ அந்தளவிற்கு அவர்களுக்கான கட்டணமும் அதிகரிக்கும். பொதுவாக பயிற்றுவிப்பாளராக ஒரு மணி நேரத்திற்கு $40யிலிருந்து $60 வரை கட்டணமாகப் பெறலாம். 

இன்னும் சிலர் சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளில் கால்பதிக்கின்றனர். அவர்களின் திறன்களையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும், அதேநேரத்தில் வருமானத்திற்கான வழியாகவும் இத்தொழில் முயற்சிகள் அமைகின்றன.

தின்பண்டங்கள் தயாரிப்பது, அணிகலன்கள் செய்வது, மருதாணி இடும் சேவை என பல்வேறு வழிகளில் சிறு வயதிலேயே தொழில் முனைவர்களாகின்றனர். 

தங்களுக்குப் பிடித்தமான வேலைக்கு பல மணி நேரத்தைச் செலவிடுவதில் எவருக்கும் சிரமம் இருப்பதில்லை. அதனால், அவர்களால் கடுமையாக உழைக்க முடிகிறது. அவர்களது வணிகம் வழங்கும் சேவைகளுக்கும் பொருள்களுக்கும் இருக்கும் தேவையைப் பொறுத்து அவர்களது வருமானம் இருக்கும்.  

யுகேஷ் கண்ணன்
யுகேஷ் கண்ணன் - படம்: யுகேஷ்

மின்னிலக்க வணிகங்களிலும் இளையர்கள் பலர் தற்போது கால்பதிக்கத் தொடங்கியுள்ளனர். நாளிதழ்கள், தினசரி திட்டமிடல் அட்டவணைகள், ஓவியங்கள் போன்றவற்றின் மின்னிலக்க வடிவங்களை அவர்களது மின்னிலக்க கருவிகளிலேயே வடிவமைத்து ‘எட்சீ’, ‘ஷோபிப்பை’ போன்ற இணைய வணிகத் தளங்களில் கடைகள் தொடங்கி விற்கின்றனர். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டும் வழிவகுக்கும் வாய்ப்பாக இது அமைகிறது. 

அதோடு, அவர்களின் கற்பனைத் திறனை வெளிப்படுத்த உதவும் தளமாகவும் இது உள்ளது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் இளையர்களுக்கு வருவாயோடு மனநிறைவும் கிடைக்கிறது.

குறிப்புச் சொற்கள்