தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பல்கலைக்கழக வாழ்க்கையை அறிமுகப்படுத்திய ‘சாதனா 2024’

2 mins read
1b9b9187-3692-4339-be0b-8025e358dff2
பங்கேற்பாளர்களுடன் ஏற்பாட்டுக் குழுவினர். - படம்: சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ் பேரவை

பல்கலைக்கழக நாள்கள் எவ்வாறு இருக்குமென்று தெரியாமலேயே வளாகத்திற்குள் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு உதவும் நோக்குடன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ் பேரவை, சிண்டா இளையர் சங்கத்துடன் இணைந்து, ‘சாதனா 2024’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.

“நாங்கள் பல்கலைக்கழகத்திற்கு வரும் முன் எங்களில் பலருக்குக் கல்விச் சூழல் பற்றியோ வாழ்க்கைச் சூழல் பற்றியோ அதிகம் தெரியவில்லை. வருங்கால மாணவர்களுக்கு இதுகுறித்து தெளிவு இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம்,” எனப் பேரவையின் தலைவர், சஞ்சய் முத்துக்குமரன், 23, கூறினார். 

பிப்ரவரி மாதம் 3ஆம், 4ஆம் தேதிகளில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். 

நிகழ்ச்சியின் முதல் நாளன்று பங்கேற்பாளர்கள் பல்கலைக்கழகங்களின் பொதுவான விண்ணப்ப விவரங்கள், பாட விண்ணப்பங்கள், இணைப்பாட நடவடிக்கைகள், தங்குமிட வசதிகள் போன்றவற்றைப் பற்றி அறிந்துகொண்டனர்.

அதோடு, சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், தேசிய கல்விக் கழகம் ஆகிய கல்வி நிலையங்களிலிருந்து வருகை தந்த பேச்சாளர்கள் தங்களது பல்கலைக்கழக வாழ்வைப் பற்றிப் பேசினர். 

“மற்ற பல்கலைக்கழகங்களைப் பற்றியும் அறிந்துகொண்டு, தங்களுக்கு ஏற்ற கல்வி நிலையத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்,” என நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர், 22 வயது ஆகாஷ் ராமசாமி கூறினார்.

நிகழ்ச்சியின் இரண்டாம் நாளன்று அறிவியல், சமூக அறிவியல், கணினி அறிவியல், சட்டம் எனக் குறிப்பிட்ட சில பாடங்களைப் பற்றிய பகிர்வு அங்கங்கள் நடைபெற்றன.

அதோடு, மாணவர்களுக்கு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிக்காட்டும் வகையில் வளாகத்தின் வெவ்வேறு இடங்களில் இரண்டாம் நாள் பகிர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதால் முன்பிருந்த அச்சம் சற்று குறைந்துள்ளதாக முன்னாள் தேசிய தொடக்கக்கல்லூரி மாணவரான இஜாஸ் அஹமத் பகிர்ந்துகொண்டார். 21 வயதான இவர், இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் தேசிய பலக்லைக்கழகத்தில் தனது கல்விப் பயணத்தைத் தொடங்கவுள்ளார். பல நண்பர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் கூறினார். 

“மாணவர்களால் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியென்பதால், சோர்வடைய விடாமல் பகிர்வுகளுக்கு இடையிடையே விளையாட்டுகள், ‘பிங்கோ’ சவால்கள் போன்ற அங்கங்களின் மூலம் எங்களைத் தொடர்ந்து உற்சாகமாக வைத்திருந்து அதே சமயத்தில் எங்களுக்குத் தேவையான தகவல்கள் அனைத்தையும் தெரியப்படுத்தியது என்னைக் கவர்ந்தது,” என்று சொன்னார் முன்னாள் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரி மாணவரான 20 வயது ரகுநந்தன். 

தொடர்ந்து இதுபோன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ் பேரவை முனையுமென்று அதன் தலைவர் சஞ்சய் முத்துக்குமரன், தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்