திருக்குறளில் இல்லாத வாழ்வியல் கருத்துகளே இல்லை: லிடியன் நாதஸ்வரம்

திருக்குறளில் மனித நல்வாழ்விற்குத் தேவையான அனைத்து அறநெறிகளும் பொதிந்துள்ளன என்றும் அதனை எளிய முறையில் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் கூறுகிறார் உலகப் புகழ்பெற்ற சிறுமுது அறிஞரான (Child Prodigy) பியானோ இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம். 

தற்போது 18 வயதாகும் இந்த இளையர், இரண்டு வயதிலிருந்தே டிரம்ஸ் இசைக்கருவியை வாசிக்கத் தொடங்கியுள்ளார். 14 இசைக்கருவிகளை வாசிக்கக்கூடிய திறமைபடைத்த இவர், தமிழ் இசையமைப்பாளர் வர்ஷன் சதீஷின் மகன் ஆவார். பாடகியான இவரின் மூத்த சகோதரி அமிர்தவர்ஷினி புல்லாங்குழல், சாக்ஸபோன் இசைக்கருவிக் கலைஞரும் ஆவார். 

இசைக்குடும்பத்தில் பிறந்து வளரும் இவர், “எனக்கு இரண்டு வயதிருக்கும் போது என்னுடைய அக்காவின் பிறந்தநாளுக்குப் பரிசுப் பொருள்கள் வந்திருந்தன. அவற்றில் இருந்த குழந்தைகளுக்கான இசைக்கருவியை வைத்து நானே புதிய மெட்டுகளில் இசையமைத்துள்ளேன். இந்தச் சம்பவமே என் இசைப்பயணத்திற்கு வித்திட்டது,” என்று சிறுவயது நினைவுகளை தமிழ் முரசிடம் பகிர்ந்தார். 

எட்டு வயதில் தானாகவே பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்ட லிடியன், ‘கேஎம் மியூசிக் கன்சர்வேட்டரி’ எனும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் இசைப்பள்ளியில் நான்காண்டுகள் பயின்றுள்ளார். இரண்டாம் வகுப்போடு முழுநேரக் கல்வியைத் தொடராமல் இவர் இசையையே தன் வாழ்க்கையாகக் கொண்டுள்ளார். 

“பள்ளிக் கல்வியைத் தொடரவில்லையே தவிர இவ்வுலகில் ஒரு நல்ல மனிதராக வாழ நான் திருக்குறளை முழுவதுமாக படித்துள்ளேன். அதில் இல்லாத கருத்துகளே இல்லை. அதனை இசைவடிவில் உலகமக்கள் அனைவரிடமும் எடுத்துச்செல்லும் முயற்சியிலேயே நானும் என் சகோதரியும் ஈடுபட்டு வருகிறோம். உலகளவில் தமிழ் மொழியின் அருமையை உணர்த்தும் வாய்ப்பாகவும் இதனை நினைக்கிறோம்,” என்றும் கூறினார் லிடியன். 

1,330 திருக்குறள்களையும் அதன் பொருளோடு ஒரு குறளுக்கு ஒரு பாடல் வீதம் இந்த உடன்பிறப்புகள் உருவாக்கி வருகின்றனர். உலகம் முழுவதும் இருந்து 1,000 பாடகர்கள் இந்த பாடல்களைப் பாடி வருகின்றனர் என்றும் ஒவ்வொரு பாடலும் ஒரு நிமிடத்திற்குள் இருக்கும் என்றும் இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் இதனை வெளியிடும் திட்டம் உள்ளதாகவும் லிடியன் தெரிவித்தார். 

இவர் 13 வயதில்,  195 நாடுகள் கலந்துகொண்ட உலகளவில் நடத்தப்பட்ட ‘தி வோர்ல்ட்ஸ் பெஸ்ட்’ எனும் இசைப்போட்டியில் பங்குகொண்டு,  முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு மில்லியன் அமெரிக்க டாலரைப் பரிசாகத் தட்டிச் சென்ற பெருமைக்குரியவர். 

இசைஞானி இளையராஜாவின் முதல் மாணவர் எனும் பெருமையும் இவருக்கு உண்டு. இசைஞானியின் ரெக்கார்டிங் ஸ்டூடியோ, கோவில் போன்ற உணர்வினைத் தரும் என்று சிலாகித்த லிடியன், அவர் கற்றுக்கொடுத்த இசைப் பாடங்கள் அனைத்துமே தன் மனத்திற்கு நெருக்கமானவை என்று குறிப்பிட்டார். 

ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இசையமைத்த பாடல் ஒன்றை கித்தாரில் வாசிக்க கற்றுக்கொடுத்ததோடு அதனை அவருடனே இணைந்து ஒருமுறை மேடையில் வாசித்த அனுபவம் மறக்கமுடியாதது என்றும் பகிர்ந்துகொண்டார் லிடியன். 

மலையாள நடிகர் மோகன்லால் முதல்முறையாக இயக்கி இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிவர உள்ள ‘பாரோஸ்’ திரைப்படத்திற்கு லிடியன் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்தடுத்து பல்வேறு விதமான தனியிசைப் பாடல்களையும் ஆல்பங்களையும் உருவாக்கும் திட்டத்தில் இருக்கும் லிடியன், தொடர்ந்து திரையிசையிலும் கவனம் செலுத்தவிருப்பதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, வரலாறு சார்ந்த பின்னணி கொண்ட திரைப்படங்களில் பணியாற்றக் கூடுதல் ஆர்வத்துடன் இருப்பதாகவும் இவர் தெரிவித்தார். 

அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமான இசையைக் கொண்டு சேர்ப்பதே தன் நீண்டநாள் இலட்சியம் என்று குறிப்பிட்ட லிடியன், உலக அளவிலான உயர்தர ஆரோக்கியமான இசை வழங்கும் இந்திய இசைக்குழு ஒன்றை உருவாக்கும் கனவு தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!