பயணம் எனக்கு தரும் இன்பம்

பயணம் எனக்கு தரும் இன்பம்

படம்: கிருஸ்மிதா ஷிவ் ராம்

19 Feb 2024 - 6:00 am

2 mins read

கிருஸ்மிதா ஷிவ் ராம் சிம் பல்கலைக்கழகம் பயணம் செய்வதில் என் பெற்றோருக்குத் தனி நாட்டம் என்பதால் நானும் சிறுவயதிலிருந்தே பயணம் செய்யத் தொடங்கினேன்.

விடுமுறைக் காலங்களில் பயணம் செய்வதற்கு அவர்கள் நன்கு திட்டமிடுவார்கள். அவர்களுடன் சென்ற ஒவ்வொரு பயணமும் என் மனத்தில் நீங்கா இடத்தைப் பெற்றிருக்கிறது.

குடும்பத்தோடு பயணம் செய்யத் தொடங்கிய நான் இப்போது நண்பர்களுடனும் பயணம் செய்கிறேன்.

பல நாடுகளுக்குச் சென்றிருந்தாலும் துபாய்ப் பயணம் என் மனதில் இடம் பிடித்தது. சிங்கப்பூருடன் ஒப்பிடுகையில் இரு நாடுகளுக்கும் இடையே பல ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் என்னால் உணர முடிந்தது. துபாயின் சூழலும் கலாசாரமும் சிங்கப்பூரிலிருந்து மிகவும் மாறுபட்டவை.  

உலகெங்கும் நிறைந்துள்ள பல இன மக்களையும் அவர்களின் பல்வேறு கலாசாரங்களையும் அறிந்து, அங்கு பயணம் செய்யும்போது பிரமிப்பாக இருக்கும். நான் செல்லும் நாட்டிற்கு ஏற்ப உடைகளையும் உணவுப் பழக்கத்தையும்கூட மாற்றிக்கொள்வேன்.

சீனா சென்றபோது அந்நாட்டின் உணவுப் பழக்கத்திற்கு ஏற்றவாறு என்னை மாற்றிக்கொள்வது சற்றுக் கடினமாக இருந்தாலும்கூட அது ஒரு புதுவித அனுபவமாகத்தான் இருந்தது. வழக்கமாக நான் இந்திய உணவையே அதிகம் உண்பேன்; அதனால் வீட்டு உணவிற்கு வெகுவாக ஏங்கினேன். ஆனால் அந்த ஏக்கமும் ஒரு தனிப்பட்ட சுகத்தைத் தந்தது.

எதிர்காலத்தில் மேலும் பல இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்பது என் குறிக்கோள். பெற்றோர் அல்லது நண்பர்களுடன் பயணம் செய்வது மகிழ்ச்சியைத் தந்தாலும்கூட தனியாகப் பயணம் மேற்கொள்வதிலும் எனக்கு ஆர்வம் உண்டு.

நானும் என்னுடைய எண்ணங்களும் மட்டுமே எனத் தனியாகப் பயணம் மேற்கொள்ளும்போது அது ஒரு விதமான அமைதியையும் நிலைத்தன்மையும் தரும் என்று கருதுகிறேன். 

குறிப்புச் சொற்கள்
பயணம்இளையர் முரசுசிங்கப்பூர்