கவலைதரும் இளையரின் மின்சிகரெட் பழக்கம்

5 mins read
ee5b56be-fa02-475b-80cc-e09165b16391
இளையர்களிடையே மின்சிகரெட் பழக்கம் அதிகரித்துள்ளதாக அண்மைய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. - படம்: பிக்சாபே

சிங்கப்பூரில் மின்சிகரெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை துல்லியமாகக் கண்டறியப்படாவிட்டாலும் இளையர்களிடையே மின்சிகரெட் மோகம் பெருமளவில் அதிகரித்துள்ளதாக அண்மைய புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

மின்சிகரெட் பயன்பாடு குறித்து அரசாங்கம் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இருந்தாலும் அதன் பயன்பாடு இங்கு குறைந்தபாடில்லை. 

விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டாலும் மின்சிகரெட் பயன்படுத்தும் பழக்கத்தைக் கைவிடுவதாக இல்லை என்று இளையர் சிலர் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளனர். 

சிங்கப்பூரில் மின்சிகரெட் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளபோதும் இணையம் வாயிலாகவும், மலேசியாவிலிருந்தும் மின்சிகரெட்டுகள் அவர்களின் கைகளை வந்தடைகின்றன.  

உடல் நலனுக்கும் பொது வாழ்வுக்கும் தீங்கிழைக்கக்கூடிய இந்தப் பழக்கத்தைப் பற்றி ஆராய்கிறது இப்பகுதி.

ஆரோக்கியத்திற்குக் கேடு 

பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலத் தொடங்கியபோது நண்பர்களின் ஊக்கத்தால் புகைபிடிக்கத் தொடங்கினார் அஸ்வின் (உண்மை பெயரல்ல), 26. 

தற்போது உள்ளூர் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் அவர், மின்சிகரெட் பழக்கத்திற்கு ஒரு காலத்தில் இழுக்கப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

“சாதாரண சிகரெட்டைவிட மின்சிகரெட்டுக்கு நாம் செய்யும் செலவு மிகக் குறைவு. பலவிதமான மணங்களில் அவை வருகின்றன. ஏன் அதைப் பயன்படுத்திப் பார்க்கக்கூடாது என்ற எண்ணம் என்னுள் வந்தது,” என்றார் அஸ்வின்.

புகைபிடிக்கும்போதே அடிக்கடி நோய்வாய்ப்படுவதும் பொறுமையை எளிதில் இழப்பதும் அஸ்வினுக்கு வழக்கமானதாயிற்று.

ஆனாலும், மனவுளைச்சலைக் குறைக்க உதவுகிறது என்ற எண்ணத்தில் கிட்டத்தட்ட நான்காண்டுகளாகத் தொடர்ந்து புகைபிடித்து வந்தார்.

உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பதால் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்ட அஸ்வின், அதற்குப் பிறகு தனக்கு மீண்டும் புகைபிடிக்க எண்ணம் வரவில்லை என்று பகிர்ந்துகொண்டார். 

அதன் பின் சிங்கப்பூரில் மின்சிகெரட் மோகம் தலைதூக்கியபோது மீண்டும் நண்பர்களுடன் சேர்ந்து அதைத் பயன்படுத்தத் தொடங்கிய அவர், மூன்றாண்டுகளுக்குப் பின் நிறுத்திவிட்டார்.

“மின்சிகரெட் சாதாரண சிகரெட்டைவிட மிகவும் கையடக்கமானது. நான் அதற்கு அடிமையாகிவிட்டேன். எண்ணம் வரும் போதெல்லாம் திருட்டுத்தனமாகப் படிக்கட்டு, கழிவறை, காலியான அறை போன்ற இடங்களுக்குச் சென்று பயன்படுத்தினேன்,” என்றார் அஸ்வின்.

மூச்சுத்திணறல், அடிக்கடி சளிபிடிப்பது, எளிதாக நோய்வாய்ப்படுவது போன்றவற்றால் மின்சிகரெட் பயன்பாட்டைக் குறைக்க முற்பட்டார் அஸ்வின். 

“அதை நிறுத்திய பிறகு எனது நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்தது. மின்சிகரெட் வாங்குவதும் கடினமாக இருந்ததால் எனக்கு அந்தப் பழக்கத்தை விடுவது சாத்தியமாகத் தோன்றியது,” என்று சொன்னார் அஸ்வின்.

தொல்லை வேண்டாம் 

அஸ்வினைப் போல மின்சிகரெட் பயன்படுத்தியதால் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட கீர்த்திகா, 24, முன்பு புகைப்பிடித்தவர்.

புகைபிடிப்பதைவிட மின்சிகரெட் விலை மலிவு என்று நினைத்துக்கொண்டு அவர் அதை நாடினார்.

“மின்சிகரெட் பற்றி சில காலத்திற்கு முன்பு அனைத்து சமூக ஊடகத் தளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வந்தன. அதைப் பார்த்ததும் எப்படியாவது பயன்படுத்திப் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்கு ஏற்பட்டது,” என்று கீர்த்திகா சொன்னார்.

மின்சிகரெட் பயன்படுத்தத் தொடங்கியதும் புகைபிடிப்பதற்கான தூண்டுதல் குறைந்ததாகக் கூறினார் கீர்த்திகா.

மின்சிகரெட்டை ஒருவர் எளிதாகப் பயன்படுத்தலாம், அதில் பல வண்ணங்களும் மணங்களும் உண்டு போன்ற காரணங்களால் இளையர்கள் இதன்பால் ஈர்க்கப்படக்கூடும் என்றார் அவர்.  

மின்சிகரெட் பயன்படுத்தத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே தனக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை வந்ததாகக் கூறிய அவர், வேறு சிலர் அவர்களின் நுரையீரலில் நீர் தேங்கி மருத்துவமனைக்கு அவசரமாகக்கொண்டு செல்லப்பட்டது அறிந்து பயத்தில் அப்பழக்கத்தை அவர் கைவிட்டார். 

பிரச்சினைக்குத் தீர்வாகாது 

சுயதொழில் செய்து வரும் அமீர், 39, தொழில் ஏற்படுத்திய மனவுளைச்சலின் காரணமாக மின்சிகரெட் பக்கம் சாய்ந்ததாகக் கூறினார்.

ஓராண்டு ஆகியும் அவர் அந்தப் பழக்கத்திலிருந்து மீளவில்லை. 

வாகனம் ஓட்டும்போதும் வேலை பார்க்கும்போதும் மின்சிகரெட் பயன்படுத்தும் அவருக்கு மின்சிகரெட் நண்பனாகிவிட்டது.

நண்பர்கள் மூலமும் சமூக ஊடகத் தளங்கள் மூலமும் மின்சிகரெட் அவரது கைகளுக்கு வந்தடைகின்றன. புகைபிடிப்பதைவிட மின்சிகரெட் மலிவானது என்ற அவர் ஒரு மாதத்திற்கு அதற்காக $60 ஒதுக்கி வருகிறார்.

இளையர்கள் அதிகமாக மின்சிகரெட் பழக்கத்திற்கு எளிதில் அடிமையாவதற்கான காரணத்தைச் சுட்டிய அவர், “புகையிலை சிகரெட் என்றால் இளையர்கள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும். மின்சிகரெட்டை அவர்கள் எளிதில் வாங்கிக்கொள்ளலாம்,” என்றார்.

இருப்பினும், மனஉளைச்சலுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மின்சிகரெட் இருப்பதாக நினைப்பது தவறு என்று அவர் கூறினார்.

சுகாதார அறிவியல் ஆணையம் வலியுறுத்து 

சுகாதார அறிவியல் ஆணையம் மின்சிகரெட் பயன்பாடு குறித்து அண்மையில் சில தகவல்களை வெளியிட்டது. மின்சிகரெட் கேட்பதற்குச் சாதாரண சிகரெட்டைவிட பாதுகாப்பானதாக இருந்தாலும் அதிலும் தீங்கிழைக்கக்கூடிய பொருள்கள் உள்ளன.

அதுவும் புற்றுநோய் உண்டாக்கும் பொருள்களான ஈயம், நிக்கல், தகரம் ஆகியவை மின்சிகரெட்டில் அடங்கியுள்ளன. பற்பல வண்ணங்களிலும் மணங்களிலும் அவை விற்கப்பட்டாலும் அதில் நிறைந்துள்ள பொருள்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை என்று ஆணையம் எச்சரித்தது.

சுகாதார அமைச்சு, சுகாதார மேம்பாட்டு வாரியம், சுகாதார அறிவியல் ஆணையம் ஆகிய மூன்றும் கைகோத்து மின்சிகரெட் பயன்பாட்டை முறியடிக்க பல சமூக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

மின்சிகரெட் பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள், பள்ளிகளில் அதை ஒட்டி ஏற்பாடு செய்யப்படும் திட்டங்களில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். 

சுகாதார அறிவியல் ஆணையம் சோதனைச்சாவடிகள் மூலம் மின்சிகரெட்டுகளை சிங்கப்பூருக்கு கொண்டு வரும் நபர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையத்தோடு நெருக்கமாக பணியாற்றி வருகிறது.

இணைய விற்பனைத் தளங்கள், சமூக ஊடகத் தளங்கள் ஆகியவற்றையும் அது தீவிரமாக கண்காணித்து வருகிறது. மின்சிகரெட் விற்பவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படும். அதைப் பயன்படுத்துவோருக்கு $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

மின்சிகரெட் விற்பவரையோ அல்லது பயன்படுத்துபவரையோ பார்த்தால், 6684 2036 அல்லது 6684 2037 ஆகிய எண்களில் சுகாதார அறிவியல் ஆணையத்தைத் தொடர்புகொள்ளலாம்.

பாதகங்களே அதிகம் 

செங்காங் பொது மருத்துவமனையில் சுவாச சிகிச்சைப் பிரிவில் நிபுணராக இருக்கும் டாக்டர் கணேஷ் கல்யாணசுந்தரம்.
செங்காங் பொது மருத்துவமனையில் சுவாச சிகிச்சைப் பிரிவில் நிபுணராக இருக்கும் டாக்டர் கணேஷ் கல்யாணசுந்தரம். - படம்: செங்காங் பொது மருத்துவமனை

மின்சிகரெட் பயன்பாட்டால் பல உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் வரும் என்று செங்காங் பொது மருத்துவமனையில் சுவாச சிகிச்சைப் பிரிவில் நிபுணராக இருக்கும் டாக்டர் கணேஷ் கல்யாணசுந்தரம் எச்சரித்துள்ளார். 

மின்சிகரெட்டில் இருக்கும் நிகோடினை ஆவியாக்குவதற்குப் பல்வேறு ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால் அந்த ரசாயனங்கள் அனைத்தும் சாதாரண சிகரெட் பிடிப்பதால் உருவாகும் அனைத்து பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

நாக்கு மற்றும் தொண்டைப் பகுதிகளில் வறட்சி, இருமல், மூச்சுத்திணறல், நெஞ்சு படபடப்பு, தலைவலி, மனச்சோர்வு, மன எரிச்சல், தலைச்சுற்றல் போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளதாக மருத்துவர் சொன்னார்.

மின்சிகரெட் பயன்பாட்டால் ஆண்களுக்கு விறைப்புத் திறன் குறைபாடு உருவாகும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்ட மருத்துவர், சிகரெட் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு மின்சிகரெட் சரியான உத்தி அல்ல என்று வலியுறுத்தினார்.

மேலும், குடலைப் புரட்டும் நாற்றமில்லை, உடல் நலப்பாதிப்புகளும் அதிகமில்லை என்பன போன்ற போலி விளம்பரங்களுக்கு இளையர்கள் விலை போகக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்