தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடிக்கு எதிராக வருமுன் காப்போம்

6 mins read
c9964e66-1a7e-4cd5-b868-a6a6f19d2160
சிங்கப்பூரில் அனைத்து வயதினரையும் குறிவைக்கும் மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. - படம்: பிக்சாபே

புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகி டெய்லர் சுவிஃப்ட்டின் இசை நிகழ்ச்சி தொடர்பான நுழைவுச்சீட்டு மோசடியில் இவ்வாண்டு ஜனவரிக்கும் பிப்ரவரிக்கும் இடைப்பட்ட காலத்தில் குறைந்தது 334 பேர், $213,000க்கும் அதிகமான தொகையை இழந்தனர். இது ஒருவகையான மோசடி மட்டுமே. இவ்வாறு நூதன முறையில் ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன; பலவகையாகிவிட்டன. இதுகுறித்து இளையர்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

கவலையளிக்கும் உத்திகள்

மக்களிடையே மோசடிகள் குறித்த விழிப்புணர்வு, அரசாங்க உதவியோடும் பல்வேறு அமைப்புகளின் ஆதரவோடும் பன்மடங்கு உயர்ந்திருப்பது வெகுவாக நம்பிக்கை அளிக்கிறது.

ஒரு கட்டத்தில் எனது வங்கிக் கணக்கிற்கான ‘ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவெண்’ணை (ஓடிபி), மோசடிக்காரரிடம் கொடுக்க இருந்தேன். இன்று, அதிக விழிப்புணர்வுடன் இந்த ஓடிபி அம்சத்தைக் கையாள்கிறேன்.

ஆனாலும், தொடர்ந்து மோசடிக்காரர்களின் மாறிவரும் உத்திகள் கவலை அளிக்கின்றன. உள்ளூர்த் தொலைபேசி அழைப்புகள் வரும்போது அவை உண்மையானவை எனச் சற்று யோசிக்கிறோம். நான் பின்தொடர்வோரின் இன்ஸ்டகிராம் கணக்குகளில் சிலர் அதே பெயர், அதே புகைப்படங்களோடு என்னோடு உரையாடும்போதும் அதே நிலை.

இளையர்கள் அதிகம் மோசடிக்கு ஆளாகின்றனர் எனும் தகவல் மேலும் வருத்தமளிக்கிறது. 

காயம் ஏற்படுவதைத் தடுக்கக் கவனமாக நடப்பது நமது கடமை; காயம் ஏற்பட்ட பின்னர் உடனடியாக மருந்திடுவது அரசாங்கத்தின் கடமை எனும் சமூகக் கட்டிறுக்கத்தில் நாம் இயங்கி வருகிறோம்.

தனிநபர் கடமையை வலியுறுத்துவதிலும் உதவியளிப்பதிலும் அரசாங்கம் பலவகையிலும் நல்லாதரவு வழங்கி வருகிறது. அதேசமயம், காயம் ஏற்படும் சாத்தியத்தைக் குறைக்க நல்ல சாலைகளை அமைப்பதில் அரசாங்கத்தின் பங்கும் கூடி வருகிறது.

சட்டதிட்டங்கள், கொள்கை ஆய்வுகள் ஆகியன நம் உள்ளூர் பொருளியல், இணையச் சூழலை இன்னும் பாதுகாப்பானதாய் ஆக்குவது ஒரு நல்ல அறிகுறி என நம்புகிறேன். 

உள்ளூர் வங்கிகளின் பணப்பூட்டு அம்சத்தை மேலோட்டமாய்ப் பார்க்கும்போது நம்பிக்கை பிறக்கவே செய்கிறது. இதன்மூலம், நம் நிதியில் ஒரு பகுதியைக் கூடுதல் பாதுகாப்போடு ‘பூட்டிவைத்து’ கொண்டு மோசடிகளிலிருந்து காத்துக்கொள்ளலாம்.

ஆனால், சில வங்கிகளில் பூட்டப்பட்ட நிதிக்கோ வழக்கத்தைவிட குறைவான வட்டி விகிதமே வழங்கப்படுகிறது. இதுவே, மக்களின் மனத்தைத் தளர்த்தலாம். இத்தகைய நன்மை பயக்கும் திட்டங்களின் ஆக்கமும் கவருந்தன்மையும் மேம்படும் என நம்புகிறேன். 

கடந்த ஆண்டு 1,500க்கும் மேற்பட்டோர் $1.1 மில்லியனை இசை நிகழ்ச்சி நுழைவுச்சீட்டு மோசடியில் இழந்துள்ளனர். கேரசல் போன்ற தளங்களில் மறுவிற்பனைச் சந்தை தொடர்ந்து இயங்கி வருகிறது. விற்பனைக் கட்டணத்தைத் தாண்டி அதிக அளவு பணம் தர பல சிங்கப்பூரர்கள் தயாராய் உள்ளனர்.

இந்நிலையில், இசைநிகழ்ச்சி நுழைவுச்சீட்டுகள் போன்ற ஆடம்பரப் பொருள்களுக்கான சந்தையில் அதிகபட்ச விலையை அரசாங்கம் நிலைநாட்டுவது சாத்தியமா? வேறுவகைச் சந்தைத் தலையீடுகளை அது மேற்கொள்ள முடியுமா? இசைநிகழ்ச்சிகளில் அடையாளச் சரிபார்ப்பு முறையை வலுப்படுத்த இயலுமா? ஆகியவை என் மனத்தில் தோன்றிய கேள்விகள்.

2023ல் ஆக அதிக எண்ணிக்கையில் நடந்த வேலை மோசடி, சிங்கப்பூரர்களின் ஏதோ ஒரு நிதிசார்ந்த அல்லது பணிசார்ந்த தேவையைக் குறிப்பதாய்த் தெரிகிறது.

இத்தேவையைக் கண்டறிந்து அதற்கான உதவிகளைத் தொகுத்தல், உரிமமல்லாத தனியார் வேலைத் தொகுப்புகளுக்கு நிகரான வாய்ப்புகளைத் தொகுத்து வழங்குதல் ஆகியவற்றில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறதோ என்றும் தோன்றுகிறது.

காதல் மோசடி முதலியவற்றால் பாதிக்கப்படும் இளையரை முன்வர ஊக்குவிக்கும் உளவியல் சார்ந்த ஆதரவுத் தளங்கள் அல்லது விழிப்புணர்வும் ஆராயப்படலாம். 

முக்கியமாக, தனிபர் பங்கினை வலியுறுத்தி வரும் அதே சமயம், மோசடி விளையாத வண்ணம் நம் சமூகப் பொருளியல் சூழலைத் தொடர்ந்து மாற்றியமைக்க இயலுமா என்பதையும் இந்நிலை யோசிக்கத் தூண்டுகிறது.

இதுவரை நடந்த மோசடி வகைகளுக்குச் சிறப்பான தீர்வுகளைப் பரிந்துரைத்து வரும் அரசாங்கமும் நிதி நிறுவனங்களும் உருமாறிவரும் மோசடிகளுக்கு ஈடுகொடுத்து வருமுன் காக்கும் உத்திகளையும் பரவலாகக் கையாளவேண்டும்.

- ஆ. விஷ்ணு வர்தினி, 20, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மெய்யியல், அரசியல், பொருளியல் பட்டக் கல்வி முதலாம் ஆண்டு மாணவி

விழிப்புடன் இருப்பது நம் கடமை

சிங்கப்பூர் மிகவும் பாதுகாப்பான நாடு என்றாலும் மோசடிச் சம்பவங்களுக்கு எதிரான பாதுகாப்பு மேலும் வலுப்பெற வேண்டும்.

கடந்த ஆண்டில் மொத்தம் 46,563 இணைய அல்லது தொலைபேசிவழி மோசடி வழக்குகள் பதிவாயின. மோசடிவழி மொத்தம் $651.8 மில்லியன் பணம் இழக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் இணையப் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கைகள் எடுத்துவந்தாலும், மக்கள் கவனமாக இருக்கவேண்டும். நம் உள்ளங்கையில் தவழும் கைப்பேசிகளை முதலில் கவனமாகப் பயன்படுத்த அறிந்திடல் வேண்டும். 

மக்கள் பணத்தையும் பொருளையும் தேடி ஓடிக்கொண்டே இருக்கும் காலத்தில், இணையத்தில் வரும் போலிச் செய்திகளும் விளம்பரங்களும் அவர்களை ஈர்க்கவே செய்கின்றன.

சற்று நிதானித்து, சிந்தித்துப் பார்க்கும்போதே அவற்றின் போலித்தன்மை நமக்கு புலப்படக்கூடும். முக்கியமாக மாணவர்கள் இத்தகைய மோசடி விளம்பரங்களுக்கு பலியாவதற்குக் காரணம், அது அவர்களின் ஆசையைத் தூண்டுவதுதான்.

இவ்வாறு மோசடிக்காரர்கள் ஒருவரது ஆசையை அறிந்து அதை ஒரு பலவீனமாக அடையாளங்கண்டு குறிவைக்கின்றனர்.  

அரசாங்க ஊழியர்கள் அல்லது அதிகாரிகள்போல வலம் வரும் மோசடிகளும் அதிகரிப்பதைக் காண முடிகிறது. நம் வங்கிக் கணக்கு விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் ஆகியவற்றை எளிதாக வாங்கிக்கொண்டு பணமோசடி செய்வது, நமக்கு எவ்வளவு அருகில் மோசடிகள் வந்துவிட்டன என்பதைக் காட்டுகிறது.

நம்பகத்தன்மை வாய்ந்த மின்னஞ்சல்களையும் குறுஞ்செய்திகளையும் தயாரிக்க வல்லவர்களாக உள்ளனர் மோசடிக்காரர்கள். மனிதர்களின் எழுத்தையும் பேச்சையும் துல்லியமாகத் தயாரிக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் தளங்களின் அதிகரிப்பு இப்பணியை இன்னும் எளிதாக்கி உள்ளது என்பதே கசப்பான உண்மை.  

இளையர்கள் இதுபோன்ற மோசடிகள் பற்றி போதிய விழிப்புணர்வைப் பெறுவது மிக அவசியம். அண்மைக் காலத்தில், தனிமையாக வாழும் முதியோரைக் குறிவைத்து வருகின்றனர் மோசடிக்காரர்கள். அவர்களுடன் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு நம்பிக்கை மோசடியும் செய்கின்றனர்.

இவ்வலைகளில் சிக்காமல் இருக்க நாம் நமது நடவடிக்கைகளிலும் இணையச் செயல்பாடுகளிலும் கவனமாக இருப்பதே மிக அவசியம். பள்ளிகள், சமூக மன்றங்களில் மோசடி குறித்த விழிப்புணர்வுத் திட்டங்களும் விளம்பரங்களும் அதிகரித்துள்ளன. பயிலரங்குகள், கலந்துரையாடல்கள் என மோசடி குறித்த பேச்சுகளும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. 

நாளும் நம் கைகளில் தவழும் திறன்பேசிகளே நமக்கு முதல் எதிரிகளாகிவிடக்கூடாது.

அவற்றை எவ்வளவு சார்ந்திருக்கிறோமோ, அதற்குப் பன்மடங்கு அதிகமாக நாம் ஆபத்தில் உள்ளோம். வருமுன்னர்க் காப்பது நம்மிடையே முக்கியம். எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நமது கடமையும்கூட. 

- டீனா குமரேசன், 22, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மின்பொறியியல் பட்டக் கல்வி இரண்டாம் ஆண்டு மாணவி

பலவீனத்தைக் குறிவைக்கும் மோசடிக்காரர்கள்

மோசடிக்கு ஆளாவது குறித்து ஆராயும்போது, நிதி நெருக்கடி முக்கியக் காரணமாக உள்ளது.

விரைவாகப் பணம் தேவை என்ற காரணத்தால், மக்கள் எளிதில் அதிக சம்பளத்தை ஈட்டித்தரும் வேலைகளைப் பற்றிய விளம்பரங்களை மோசடி என்று அறியாது நம்பிவிடுகின்றனர்.

புள்ளிவிவரங்களின்படி, 20 முதல் 39 வயது வரையிலான பிரிவினர், மோசடிக்கு ஆளானோர் எண்ணிக்கையில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளனர். இந்த வயதினரில் பெரும்பாலோர் வேலை மோசடிகள், வர்த்தக மோசடிகள் போன்றவற்றுக்கு ஆளாகினர்.

பெரும்பாலான மோசடிகளுக்கு அடிப்படையானது, அவசரம், பயம். மோசடிகள் எப்போதும் ஆற்றல், திறமை அல்லது நிதி இழப்பைக் குறிக்காது.

சமூக ஊடகங்களிலும் மோசடிகள் நடக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒருவரது கணக்கை ஊடுருவி அவரின் அடையாளத்தை மோசடிக்காரர்கள் திருடக்கூடும்.  

ஒருமுறை, எனக்கே இந்த அனுபவம் ஏற்பட்டது. எனது சமூக ஊடகக் கணக்கை யாரோ ஊடுருவி இருந்தனர். நான் பதற்றத்தில் அந்த ஊடுருவியின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்தேன்.

இரண்டு வாரங்களாக மன அழுத்தத்திற்கு ஆளானேன். சரியாகச் சாப்பிடவில்லை, தூங்கவும் முடியவில்லை. ஓர் இளையராக எனக்கே இவ்வாறு இருக்க, தனிமையில் வாழும் முதியவர் மோசடிக்கு ஆளானால்?

மோசடிக்கு ஆளானால், முதலில் முடிந்தவரை அமைதியாக இருக்க வேண்டும். பகுத்தறிவற்ற முறையில் நடந்துகொள்ளாமல் இருப்பதும் முக்கியம்.

நம்பகமான சான்றுகளின் உதவியைப் பெறுவதும், உங்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து ஆதரவைப் பெறுவதும் முக்கியம்.

பயமும் பீதியும் ஏற்படுவது இயல்பு என்றாலும், ஏற்கெனவே இழந்ததைவிட இன்னும் அதிகமாக இழக்கும் அபாயம் உண்டு என்பதை உணர்ந்திட வேண்டும்.

- எல்ஷடாய் ஜீவநதி, 23, சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழக சமூகச் சேவைத் துறை பட்டக் கல்வி இரண்டாம் ஆண்டு மாணவி

குறிப்புச் சொற்கள்