இளையர்களும் அலுவலக வேலைகளும்

வேலை கலாசாரம் இன்றைய நவீன யுகத்தில் கணிசமான மாற்றங்களைச் சந்தித்துவருகிறது. இந்த மாற்றங்களை முன்னெடுத்துச் செல்பவர்கள், இளம் தொழில் நிபுணர்கள். தொழில்நுட்ப முன்னேற்றத்தாலும் மாறிவரும் சமூக வழக்கங்களாலும் வேலையிடத்தில் நீக்குப்போக்குத் தன்மை இருப்பது முக்கியம் என்றும் இளம் தலைமுறையினர் கருதுகின்றனர். அதனால், தங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தங்களது வாழ்க்கைத்தொழிலுக்கும் இடையே சமநிலை காணும் வேலைச் சூழல்களை நாடுகின்றனர். இதுகுறித்து, அறிந்து வந்தது இவ்வார இளையர் முரசு.

விருப்பம் வருத்தம் அளிக்காது

விரும்பிய வேலையைச் செய்தால் வருத்தம் ஏற்படாது என்றார் யுகேஷ் கண்ணன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இன்றைய இளையர் பலருக்கு அலுவலக வேலைகளின் மீது நாட்டம் அதிகம் இல்லை. பல வேலையிடங்களில் மாறாமலிருக்கும் வேலை கலாசாரமும் மாறிவரும் இளையர்களின் விருப்பங்களும் இதற்கு முக்கியக் காரணங்கள் என்று கூறலாம். 

தற்போதைய இளையர்கள் மின்னிலக்க, நவீனமயமான உலகைச் சேர்ந்தவர்கள். இதனால், அவர்களுக்கு பழங்காலத்து வேலை கலாசாரமும் சூழலும் பொருத்தமாக இருப்பதில்லை. 

அக்கால வேலை கலாசாரம், அதிகாரப் படிநிலை முறைக்கும் (hierarchy) கட்டமைப்புகளுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கிய ஒன்றாக இருந்தது. 

ஆனால், இளையர்கள் இன்று பள்ளிப் பருவத்திலேயே பல்வேறு குழு நடவடிக்கைகளிலும் படைப்புகளிலும் சமமாகவும் இணைந்தும் பணியாற்றுவதால் அதிகாரப் படிநிலை முறை தேவைப்படாமல் போகிறது. 

பள்ளிகளிலும் மனதில் தோன்றுவதை வெளிப்படையாகப் பேச அவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். 

அலுவலகங்களில் பரவலாகக் காணப்படும் அதிகாரப் படிநிலை முறை, அவர்களை நெருக்குகிறது. தங்களின் புத்தாக்கச் சிந்தனைக்கும் குரலுக்கும் இடமில்லாமல் போய்விடுமோ என்ற பயத்தினால் இத்தகைய வேலைகளை அவர்கள் தவிர்க்கின்றனர். 

அதுமட்டுமின்றி முந்தைய தலைமுறையினருக்கு நிதியைப் பற்றி இருந்த புரிதலைவிட இத்தலைமுறையினருக்கு அது சற்று அதிகம் என்றே கூறலாம். 

அலுவலக வேலையின் மூலம் ஈட்டும் வருவாய் மூலம் குறுகியகாலத்தில் நிதி சுதந்திரத்தை அடைந்துவிட முடியாது என்று இளையர்கள் எண்ணியுள்ளனர் எனலாம். 

இதன் காரணமாக, பெரும்பாலான இளையர்கள் சுய தொழில் தொடங்க வேண்டுமென்ற திட்டத்தில் உள்ளனர்.  

சொந்தமாகத் தொழில் தொடங்குவதன் மூலம், ஒருவருக்குக் கீழ் பணியாற்றுவதாக இல்லாமல், பலருக்கு வேலை வழங்குபவர்களாக மாறக்கூடிய வாய்ப்பு அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. 

அதுமட்டுமின்றி, இவ்வாறு தாங்களாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கும் போது அவர்களுக்குப் பிடித்த, நம்பிக்கைக்குரிய நண்பர்களைத் தங்களுடன் சேர்த்துக்கொண்டு பணியாற்றுவதில் அவர்களுக்கு ஒருவித உற்சாகமும் பிறக்கிறது. 

இச்சூழலில் முற்றிலும் அதிகாரப் படிநிலைமுறை இல்லாத, அல்லது அந்த முறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்காத வேலையிடமாக தங்களின் நிறுவனத்தை மாற்றும் வல்லமை தங்களிடம் இருப்பதை அவர்கள் உணர்கின்றனர்.

அலுவலக வேலையில் சேர்ந்து தங்களது வேலை-வாழ்க்கை சமநிலையை நிர்ணயிக்கும் வாய்ப்பை மேற்பார்வையாளர்களுக்கு வழங்குவதற்கு மாறாக, சுய தொழிலின் மூலம் தாங்களே அதை நிர்ணயிக்க முனைகின்றனர்.

சுய தொழில் தொடங்கினால், பல மணி நேரம் பணியாற்ற வேண்டுமென்ற கட்டாயம் இருந்தாலும் ஆரோக்கியமான, அவர்களுக்குப் பிடித்த வேலையிடத்தில் அந்த நேரத்தைச் செலவழிப்பதில் அவர்களுக்குப் பெரிதும் வருத்தம் இருக்காது எனலாம்.

சுமையாகத் தோன்றாமல் சுகமாகத் தோன்ற வேண்டும்

புதுமை, மனநிறைவு ஆகியவற்றை நாடி அனைத்து வயதினரும் பிடித்தமான வேலைய நாடிச் செல்ல வேண்டும் என்கிறார் ஸ்ரீநிதி வெங்கட். படம்: ஸ்ரீநிதி வெங்கட்

மாற்றம் ஒன்றே மாறாதது என்று கூறுவது வழக்கம். காலம் மாற, அதனுடன் நமது வாழ்க்கைமுறையும் மாறுபடும். தொழில்நுட்ப முன்னேற்றங்கள், சமூக ஒழுக்கங்கள், மனித இனத்தின் தேவைகள் என அனைத்தும் மாறிவர, இத்தகைய மாற்றங்களை வழிநடத்திச் செல்வது நமது இளையர்களே. 

இளையர்களுக்குப் பலவிதமான புதிய அனுபவங்கள் அனுதினமும் தேவைப்படுகின்றன. வாழ்க்கையை ரசித்து, இன்பமுற விரும்புவதோடு, அவ்விருப்பத்தை மெய்யாக்கும் துணிச்சலும் ஆற்றலும் அவர்களிடம் உள்ளன. 

இதன் விளைவாக, வழக்கமான வேலைகளுக்கு அப்பாற்பட்ட, ஏன் விந்தையாகவும் உள்ள வேலைவாய்ப்புகளை இளையர்கள் நாடிச் செல்கின்றனர். 

தொழில்நுட்பத்துடன் பிறந்து வளரும் இக்கால இளையர்கள், குழந்தைப் பருவத்திலிருந்தே இதுபோன்ற பரபரப்பான வாழ்க்கைமுறைக்கு அடிமை ஆகிவிடுகிறார்கள். 

இதனால் ஏற்படும் உளைச்சல் அவர்களை மனதளவில் மட்டுமல்லாது உடல் அளவிலும் பாதிக்கிறது. சிறுவயதிலிருந்தே ஓய்வில்லாமல் தங்களின் வாழ்க்கைச் சக்கரம் சுழல்வதாக உணரும் இளையர்கள், அலுவலகத்தில் முடங்கிக் கிடக்கும் வாழ்க்கையை நிராகரிக்கிறார்கள்.

செய்யும் தொழில் தெய்வமென்றால், அது சுவாரசியமாகவும், நாம் விரும்பும் தொழிலாகவுமாவது இருக்க வேண்டாமா? அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியும் தீராத அலுவலகப் பணிகள். இவை இல்லாமல் பலவித புதிய அனுபவங்களை வழங்கக்கூடிய வேலைகளை இளையர்கள் விரும்புவர். தனக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தரக்கூடிய வாய்ப்புகளை நாடிச் செல்வதே மனநிறைவை நல்குமென உணரும் இளையர்களின் சிந்தனையும் என்னைப் பொறுத்தவரை பாராட்டிற்குரியதுதான். 

இன்றைய இளையர்கள் பலதரப்பட்ட திறமைகளைக் கொண்டவர்களாக விளங்குகின்றனர். அதனால், அத்திறமைகளை வெளிக்கொணரும் நவீனயுக வேலைகளை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். 

வேலைகளை வெறும் பணம் ஈட்டும் சாதனமாகக் கருதாமல்  ஆசைப்பட்டதைச் செய்வதற்கான வாய்ப்பாகக் கருதுகிறார்கள் இளையர்கள். மேசைக்குக் கட்டுப்பட்டு, ஒரே வேலையைத் தினமும் பார்த்து, சலித்துப் போவதில் அவர்களுக்கு ஈடுபாடும் இல்லை, அவ்வாறு வாழ்க்கையைக் கழிக்க அவர்கள் தயாராகவும் இல்லை.

தத்தம் தனித்துவத்தை மதித்து, தனது திறன்களையும் சொந்த நலனையும் முக்கியமாகக் கருதும் இக்காலத்து இளையர்கள், வெற்றியின் அடையாளமே. மனதிற்குப் பிடித்ததைச் செய்வதுடன் துணிந்து புதுமையும் மனநிறைவையும் அளிக்கும் வேலைகளைத் தேடிச் செல்கின்றனர்.  

இத்தகைய கண்ணோட்டத்தை இளையர்கள் மட்டுமன்றி, அனைத்து வயதினரும் கொண்டிருந்தால் செய்யும் வேலை சுமையாகத் தோன்றாது, சுகமாகத் தெரியும்.

முதலாளிகளின் சிந்தனை மாற வேண்டும்

இளையர்கள் மாறுபட்ட பணிச்சூழல்களில் வேலை செய்து பார்க்க விரும்புவதாகக் கூறினார் ரித்திகா ரங்கநாதன். படம்: ரித்திகா ரங்கநாதன்

இளையர்கள் வழக்கமான அலுவலக வேலைகளிலிருந்து விலகி, வேறு விதமான பணிச் சூழல்களை நாடத் தொடங்கியுள்ளனர். 

முதலாவதாக, இன்றைய இளைய தலைமுறையினர் தங்கள் வேலையிடத்தில் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். வழக்கமான அலுவலக வேலைகளில் அதிகம் திட்டமிட்ட செயல்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு இருக்கும் சூழல் நிலவுவதால் இளையர்கள் பலர் அலுவலக வேலைகளை விரும்புவதில்லை.

மேலும், நிறைய அலுவலக வேலைகளில் தினந்தோறும் அதே விதமான பணிகளை அதே முறையில் செய்யும் சூழல் ஏற்படுவதால், அது எளிதில் சலிப்புத் தட்டிவிடும். இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபடும்போது புத்தாக்கத்தையும் படைப்பாற்றலையும் இளையர்கள் வெளிப்படுத்த வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் போய்விடும். 

மேலும், ஆரம்பநிலையில் தொடங்கும் இளையர்கள் தங்களின் கருத்துகளை முன்வைக்க வாய்ப்பு கிட்டாமல் போகலாம். இதனாலேயே, தங்களின் முழுத் திறமையை வெளிக்காட்ட அலுவலக வேலைகள் இடம் கொடுப்பதில்லை என்று இளையர்கள் பலர் எண்ணிவிடுகின்றனர். 

அதுமட்டுமன்றி, நிறைய அலுவலக வேலைகள் வேலை-வாழ்க்கை சமநிலையை கடைப்பிடிப்பதற்கு போதிய அளவு முக்கியத்துவம் தருவதில்லை என்ற எண்ணம் பரவலாக உள்ளது. குறிப்பாக, சிங்கப்பூரில் இது ஒரு பெரிய சவாலாக இருப்பதாகப் பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. 

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியினால் அலுவலகத்தில் இல்லாமல் வேறு இடங்களிலிருந்தே பணியாற்றும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்கு கொவிட்-19 நோய்த்தொற்றின்போது இருந்த வேலை ஏற்பாடுகள் சான்றாக நிற்கின்றன. 

ஆகையால், பல இளையர்கள் வீட்டிலிருந்தோ வேறு இடங்களிலிருந்தோ வேலை செய்வதை அதிகம் விரும்புகிறார்கள். இருப்பினும், வாரத்தில் மூன்று நாள்கள் அல்லது இரண்டு நாள்கள் அலுவலகத்திற்கு வந்தாக வேண்டும்; மற்றவர்களுடன் தொடர்பில் இருந்தாக வேண்டும் என்று முதலாளிகள் சிலசமயம் விதிக்கும் நிபந்தனைகள், இளையர்களை முகம் சுளிக்க வைக்கின்றன.  

ஒட்டுமொத்தத்தில், அலுவலக வேலைகளில் நன்மைகள் இருந்தாலும், இன்றைய இளையர்கள் மாறுபட்ட பணிச்சூழல்களில் வேலை செய்து பார்க்க விரும்புகிறார்கள். 

ஆகையால், திறமையான இளையர்களை ஈர்க்க வருங்காலத்தில் அலுவலக வேலைகள் வழக்கமாகக் கடைப்பிடிக்கும் சில கட்டமைப்புகளை மாற்றியமைக்க முனைய வேண்டும்.

புது அனுபவங்களைத் தரவல்ல பகுதிநேர வேலைகள்

வேலையில் நீக்குப்போக்குத் தன்மை இருப்பது அவசியம் என்கிறார் ம.ஸ்‌ருதி. படம்: ம.ஸ்‌ருதி

கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு எனது இளமைப் பருவத்தின் முக்கியமான ஆண்டுகளை, அலுவலக வாழ்க்கைக்கு அர்ப்பணிப்பதை ஏற்க என் மனம் மறுக்கிறது. ஒரு நாளில் ஒன்பது மணிநேரம், வாரத்தில் ஐந்து நாள்கள் என்ற வேலை வாழ்க்கையை எண்ணிப் பார்க்க முடியவில்லை. 

ஆர்வமும் தன்னிச்சையான போக்கும் இருக்க வேண்டிய காலத்தில் வாழ்க்கையை ஆராய்வதற்கும் அனுபவிப்பதற்கும் சுதந்திரம் இல்லாமல், தொற்றுநோய் என் தலைமுறையை வீட்டிலேயே கட்டிப்போட்டது. ஈராண்டுகள் தவறவிட்ட வாய்ப்புகளும் முடங்கிக் கிடந்த வாழ்க்கையும் அலுவலக வாழ்க்கையைத் தழுவுவதற்குத் தயக்கத்தையே ஏற்படுத்தியுள்ளன.

ஒரு பகுதிநேர வேலை ஒருவகையில் ஈர்ப்புடையதாக உள்ளது. இத்தகைய வேலை, தொழில்ரீதியான ஒரு சுதந்திரத் தேடலாக மட்டும் இல்லாமல், அட்டவணை வாழ்க்கையிலிருந்து விடுபட வாய்ப்பளிக்கும். 

வேலை என வரும்போது நீக்குப்போக்குத் தன்மை இருப்பது அவசியம் என்று நினைக்கிறேன். 

இதனால், என் ஆர்வத்தையும் அடையாளத்தையும் என்னால் கண்டுகொள்ள முடியும். 

வழக்கமான அலுவலக அமைப்பு, தவறவிட்ட வாய்ப்புகளின் அடையாளமாகவே தோன்றுகிறது. அந்த அலுவலகச் சுவர்களுக்கு வெளியே செழுமைமிக்க அனுபவங்களை வாரிவழங்கும் ஒரு வாழ்க்கை உள்ளது என்றும் நினைக்கத் தூண்டுகிறது. 

என் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கான தேடலில், தனிப்பட்ட சுதந்திரத்திற்கான, தொழில்முறை சுதந்திரத்திற்கான நுழைவாயிலாக நான் பகுதிநேர வேலைப் பாதையைக் கருதுகிறேன். வழக்கமான முழுநேர வேலையின் எல்லைகளைத் தாண்டி, துடிப்புடைய, சாத்தியக்கூறுகள் நிறைந்த வாழ்க்கையை இந்தப் பாதை எனக்குக் காட்டும் என்று நம்புகிறேன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!