தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உணவுக்கழிவைக் குறைக்க உதவும் ‘படைவீரன் ஈக்கள்’

2 mins read
6ceef0ac-063c-4eff-b92a-e6d98a1cac50
‘பிளாக் சோல்ஜர்’ ஈவகையின் புழுக்களை மக்கள் விலங்குத் தீனியாகவும் பயன்படுத்துகிறார்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மக்களுக்கு எரிச்சலூட்டும் ஓர் உயிரினம், சிங்கப்பூரின் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றைச் சமாளிக்க உதவுகிறது என்று சொன்னால் அதை நம்புவீர்களா? உருவத்தில் சிறுத்தாலும் இந்த ஈவகையை, ‘பிளாக் சோல்ஜர் ஃபிளை’ அதாவது, ‘படைவீரன் ஈ’ என்று அழைப்பர்.

சிங்கப்பூரின் உணவுக்கழிவுப் பிரச்சினையைக் கையாள உதவிவருகிறது இந்த ‘பிளாக் சோல்ஜர்’ ஈவகை. நமது சுற்றுச்சூழலுக்குச் சாதகமாக விளங்கும் இந்த ஈவகை, கரிமக் கழிவுகளை மதிப்புமிக்க வளங்களாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு கண்டறிந்ததன்படி, 2022ஆம் ஆண்டில் 813,000 டன் உணவுக் கழிவு உருவானது. அதில் 18% மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டது.

2035ஆம் ஆண்டிற்குள் செமக்காவ் நிலப்பரப்பில் இடம் இல்லாமல் போய்விடும் என்று கூறப்படுகிறது. இதனால், குப்பைகளைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இந்த வழிகளில் ஒன்றாக ’பிளாக் சோல்ஜர்’ ஈவகை திகழ்கிறது.

நம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் பொதுவான ஈவகை அல்ல இது. இது மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. எந்த நோய்களையும் பரப்பாது.

‘பிளாக் சோல்ஜர்’ புழு தன் உடல் எடையைக் காட்டிலும் நான்கு மடங்கு சாப்பிடக்கூடியது. அதாவது 50,000 புழுக்களுக்கு முழு அன்னாசிப்பழத்தை உண்ணும் ஆற்றல் உண்டு.

பிளாக் சோல்ஜர்’ ஈக்கள், இனப்பெருக்கத்திற்காக முட்டை இடுவது தவிர தன் பிஞ்சுகளுக்குத் தீணி ஊட்டுவதில்லை. 

முட்டையிலிருந்து நுண்புழுவாக இது மிக விரைவாக வளர்ந்துவிடும். எது கிடைத்தாலும் உண்ணும். நுண்புழுக்கள், உணவுக் குப்பையை அதிக புரதச் சத்துள்ள விலங்குத் தீனியாகவும் உரமாகவும் மாற்றும் ஆற்றலுடையவை.

அதிக புரதங்களும் கொழுப்புச்சத்தும் உள்ள ‘பிளாக் சோல்ஜர்’ ஈவகையின் நுண்புழுக்களை, விலங்குத் தீனியாகவும் மனிதர்கள் பயன்படுத்துவார்கள்.

சமூக முயற்சியான சஸ்தேனபிளிட்டி@தெம்பனிஸ் பூங்காவில் ‘பிளாக் சோல்ஜர்’ புழுக்களைக் கொண்ட ஆய்வக வசதி உள்ளது.

உணவுக்கழிவை சஸ்தேனபிளிட்டி@தெம்பனிஸ் பூங்காவிலுள்ள ஆய்வத்திற்குச் சென்று மக்கள் கொடுக்கலாம்.
உணவுக்கழிவை சஸ்தேனபிளிட்டி@தெம்பனிஸ் பூங்காவிலுள்ள ஆய்வத்திற்குச் சென்று மக்கள் கொடுக்கலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குடியிருப்பாளர்கள் மீதமுள்ள உணவைக் குப்பையில் வீசுவதற்குப் பதிலாக  இந்த ஆய்வக வசதிக்குச் சென்று அங்குள்ள ஊழியர்களிடம் கொடுக்கலாம்.

அந்த உணவு, ‘பிளாக் சோல்ஜர்’ புழுக்களுக்குத் தீனியாகத் தரப்படும். பிறகு, அவற்றின் கழிவு செங்குத்தான காய்கறிப் பண்ணைக்கு உரமாகவும் திலாப்பியா மீன் பண்ணைக்குத் தீனியாகவும் வழங்கப்படும்.

கரிமப் பொருள்களை மறுபயனீடு செய்யும் தொழில்நுட்பத்திற்குப் பதிலாக இவ்வாறு ‘பிளாக் சோல்ஜர்’  புழுக்களைப் பயன்படுத்துவது மேலும் விரும்பத்தக்க ஒரு தெரிவாக உள்ளது.

தற்போது, ​​நமது உள்ளூர் தயாரிப்பாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட உரத்தையும் தீனியையும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இது உள்ளூர் உணவு உற்பத்திச் செலவையும் சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் தொடர்பான செலவையும் அதிகரிக்கிறது.

‘பிளாக் சோல்ஜர்’ ஈக்கள் உணவுக்கழிவுப் பிரச்சினைக்கு ஒரு சிறந்த தீர்வாகக் கருதப்பட்டாலும், சிறிய ஈவகையால் ஒட்டுமொத்த உணவுக்கழிவுப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது.

சிங்கப்பூரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்கை ஆற்றினால், நாட்டின் உணவுக்கழிவுப் பிரச்சினையைக் குறைந்தபட்சமாக வைத்திருக்கலாம்.

- சாதனா சுரேஷ், 16, உயர்நிலை 4, உட்லண்ட்ஸ் உயர்நிலைப் பள்ளி

குறிப்புச் சொற்கள்