தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துணிந்து செயல்படு, நேரவிரயத்திற்கு விடைகொடு

2 mins read
58b92b18-1008-4a4a-a0a5-030887afb35a
சிங்கப்பூர் கடற்படை கடல்துறைப் பொறியாளர் மூன்றாம்நிலை சார்ஜண்ட் நைஜல் விநெஸ் ராஐ், 21. - படம்: தற்காப்பு அமைச்சு

நைஜல் விநெஸ் ராஐ்

தேசிய சேவைக்காக போர்க்கப்பலில் அடிக்கடி பயணம் செய்து வரும் நான், தற்போது சிங்கப்பூர் பலதுறை தொழிற்கல்லூரியில் பொறியியல் பட்டயப் (இயந்திரவியல் தொழில்நுட்பம்) படிப்பைப் பயின்று வருகிறேன்.

என் அடிப்படை ராணுவப் பயிற்சியின்போது தற்காப்பு அமைச்சின் வேலை-கல்வி திட்டம் பற்றிய கையேட்டைப் படித்தேன்.

இந்த நான்கு ஆண்டுத் திட்டத்தில் முழுநேரச் சேவையாளராக இணைய முடிவுசெய்தேன். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க எண்ணி தேசிய சேவையையும் மேற்படிப்பையும் ஒரே தவணையில் நிறைவேற்ற எண்ணினேன்.

பெற்றோர் சுயதொழில் செய்து வருகின்றனர். எனக்கு ஓர் அண்ணனும் ஓர் அக்காவும் உள்ளனர். பொழுதுபோக்கிற்காக ‘டிரம்ஸ்’, ‘கித்தார்’ வாசிப்பேன். 2023ஆம் ஆண்டு மே மாதம் நான் தேசிய சேவையில் சேர்ந்தேன். என் தேசிய சேவை அனுபவம் இதுவரை நிறைவாகவும் சுவாரசியமாகவும் உள்ளது.

சில நேரங்களில் போர்க்கப்பலின்வழி நெடுநாள் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். குடும்பத்தைப் பிரிந்திருப்பது தொடக்கத்தில் சிரமமாக இருந்தபோதும் கப்பலில் உடன் இருந்த சேவையாளர்கள் ஒரு குடும்பம் போல பழகுவர். கேளிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு எல்லோரும் மகிழ்வது வாடிக்கை.

ஒரே நேரத்தில் படிப்பதையும் தேசிய சேவை ஆற்றுவதையும் தவிர்க்கும்படி சிலர் அறிவுறுத்தினர். ஆனால் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். படிக்க வேண்டும் என்று என்னுள் ஊற்றெடுத்த தன்முனைப்பு, படிப்பைத் தள்ளிப்போடவேண்டாம் எனச் சிந்திக்க வைத்தது.

குடும்பச் சூழல் எனக்கு ஆதரவாக இருப்பதால் நான் வீட்டில் பெரும்பாலும் படிப்பேன். நண்பர்களும் எனக்கு ஊக்கமளிப்பர். ஐந்து முதல் ஆறு மணி நேரப் படிப்புக்கு இடையே என் குடும்பத்தார் புரிந்துணர்வுடன் நடந்துகொள்வர்.

நன்யாங் பல்கலைக்கழகத்தில் வர்த்தகப் பட்டப்படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது என் வருங்காலத் திட்டம். என்னைச் சுற்றி கிடைக்கும் ஆதரவு, என்னை மேன்மேலும் பல வெற்றிகளுக்கு இட்டுச் செல்லும் என்று நம்பிக்கையாக இருக்கிறேன்.

குறிப்புச் சொற்கள்
தற்காப்பு அமைச்சுதேசிய சேவைவரவுசெலவுத் திட்டம்