தமிழ் மொழி ஆர்வத்தை வளர்த்த ‘யுத்தம்’

மாணவர்களிடையே தமிழ்மொழியின் சொல்வளத்தை மேம்படுத்தும் நோக்‌கத்துடன் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை, ‘யுத்தம்’ எனும் தங்கள் வருடாந்தர தமிழ் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியை இவ்வாண்டும் வெற்றிகரமாக நடத்தியது.

ஏப்ரல் 7ஆம் தேதியன்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற ‘யுத்தம் 2024’ போட்டியின் இறுதிச்சுற்றில், ​சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர் தனபால் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

2024 தமிழ் மொழி விழாவின் ‘ஆற்றல்’ கருப்பொருளையொட்டி, சொல்லாற்றல், மொழியாற்றல், அறிவாற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் போட்டிக்கான விளையாட்டுகள் அமைந்திருந்தன.

கடந்த ஏழு மாதங்களாக இந்நிகழ்ச்சிக்குத் தயார் செய்ததாகக் கூறிய அதன் ஏற்பாட்டுக் குழுத்தலைவரான விஷ்ணுவர்த்தினி, 20, “மாணவர்கள் பள்ளிப்படிப்பின்வழி தமிழ் கற்றுக்கொள்வதைவிட அனுபவக்கற்றல்வழி நிறையக் கற்றுக்கொள்வதால் அதன் அடிப்படையில் போட்டிகளை அமைக்க நினைத்தோம்,” என்றார்.

சுவாரசியமான தலைப்புகளுடன் அரையிறுதிச் சுற்றில் ‘சொல்லு மச்சி’, ‘புரியாத புதிர்’, ‘குறுக்க இந்த கௌஷிக் வந்தா’ என்ற பெயர்களிலும் இறுதிச்சுற்றில் ‘யாரது யாரது’, ‘குண்டக்க மண்டக்க’, ‘நம்ம உருட்டு அப்படி’ என்ற பெயர்களிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.

மாணவர்கள் இப்போட்டியில் மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுக்களாகக் கலந்துகொண்டனர். வழக்கத்திற்கு மாறாக இவ்வாண்டு உயர்நிலைப் பள்ளிப் பிரிவில் வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே குழுவாகக் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டது.

இவ்வாண்டு எதிர்பார்த்தததைவிட அதிகமான எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 120 மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர்.

‘மூவேந்தர்கள்’ என்ற குழுப்பெயருடன் போட்டியிட்ட கிரீன்ரிட்ஜ் உயர்நிலைப் பள்ளியின் கபிலன் திலோதமா, காமன்வெல்த் உயர்நிலைப் பள்ளியின் சிவகுமார் நிகிதா, கிரசென்ட் பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் ஸ்ரீனிகா ரகுராமன் ஆகிய மூவரும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் வெற்றி பெற்றனர்.

ஒரே வட்டாரத்தில் வளர்ந்து நண்பர்களாகிய மூவரும், போட்டியின் விவரங்களைச் சமூக ஊடகம்வழி அறிந்துகொண்டதும் தங்கள் பெயர்களை உடனே பதிவுசெய்தனர்.

“போட்டியில் மூன்று பிரிவுகள் இருந்ததால் நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு பிரிவைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி செய்யத் தொடங்கினோம்,” என்று கூறினர்.

உயர்நிலைப் பள்ளிக்குப் பிந்தைய நிலையில் பயிலும் மாணவர்களுக்கான பிரிவில் ராஃபிள்ஸ் தொடக்கக்கல்லூரி மாணவர்களாகிய சாரா தர்மராசு, வெங்கடேசன் வித்யா லட்சுமி, சுசித்தா மணிகண்டன் ஆகிய மாணவர்களைக் கொண்ட ‘பருந்துகள்’ குழு முதல் இடத்தைப் பிடித்தது.

போட்டியின் வெவ்வேறு அங்கங்கள் பார்வையாளர்களைக் கவரும் வகையில், புத்தாக்கத்துடன் அமைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, ‘பேமிலி பியூட்’ எனும் பிரபலமான அமெரிக்கத் தொலைக்காட்சி விளையாட்டுப் போட்டி, பார்வையாளர்கள் கலந்துகொள்ளும் விதத்தில் தமிழில் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் இந்திய கலாசார மன்றம் நடனம் ஒன்றைப் படைத்தது.

சிறப்பு விருந்தினர் தனபால் குமார் தமது சிறப்புரையில், “தமிழ் மொழி என்பது தமிழர்களின் அடையாளம் மட்டுமன்று, அது நமக்கான அதிகாரம் என்பதை இளையர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

தமிழ் மொழி என்பது தமிழர்களின் அடையாளம் மட்டுமன்று, அது நமக்கான அதிகாரம் என்பதை இளையர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். ஒருமுறை அந்த அதிகாரத்தைக் கைவிட்டுவிட்டால், அதை மீட்டெடுப்பது கடினம். இளையர்கள் எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றினாலும் தமிழ் உணர்வை என்றும் மறவாமல் தமிழோடு தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலை­வர் தனபால் குமார்

ஒருமுறை அந்த அதிகாரத்தைக் கைவிட்டுவிட்டால், அதை மீட்டெடுப்பது கடினம் என்று கூறினார். மேலும், இளையர்கள் எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றினாலும் தமிழ் உணர்வை என்றும் மறவாமல் தமிழோடு தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்றார் அவர்.

போட்டியாளர்களின் தமிழ்மொழிப் புழக்கத்தைப் பற்றி அறிந்திட முன்னதாகக் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டதை அடுத்து, அதன் முடிவுகள் நிகழ்ச்சியின்போது காண்பிக்கப்பட்டன.

‘யுத்தம்’ எனது தமிழ் ஆர்வத்தைத் தூண்டியது’ என்பதற்கு 99.1 விழுக்காட்டினர் ‘ஆம்’ என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

முதன்முறையாக ‘யுத்தம்’ நிகழ்ச்சியை நேரடியாகப் பார்க்க வந்திருந்த ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளித் தமிழாசிரியர் கும்பலிங்கம் உத்தமன், பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் தாங்களே திட்டமிட்டுப் படைத்த நடவடிக்கைகளைப் பெரிதும் பாராட்டினார்.

சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தின் மாணவியும் நிகழ்ச்சிக்கு வருகைதந்த பார்வையாளர்களில் ஒருவருமான வர்‌ஷினி சரவணன், 23, தன்னுடைய நண்பர்களுக்கு ஆதரவளிப்பதற்கு வந்திருந்ததாகக் கூறினார்.

உயர்நிலைப் பள்ளிவரை மட்டுமே தமிழ் ஒரு கட்டாயப் பாடமாக கற்றுக்கொடுக்கப்படுவதால் அதற்குப் பிறகு இன்றைய தலைமுறையினர் இடையே தமிழ் புழக்கம் குறைந்து வருவதாகத் தான் கருதினாலும் ‘யுத்தம்’ போன்ற நிகழ்ச்சிகள் தமிழ் மொழியாற்றலை மேலும் வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பளிக்கின்றன என்றார் வர்‌ஷினி.

yogitaa@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!