தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழின் சொல்லாற்றலைப் பறைசாற்றிய நிகழ்ச்சி

2 mins read
2f98eec4-7c00-452c-981f-366b2ecb142f
வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் ஆய்வுகளை நிகழ்ச்சி மேடையில் நேரடியாகப் பார்வையாளர்கள்முன் படைத்தனர். - படம்: யோகிதா அன்புச்செழியன்

யோகிதா அன்புச்செழியன்

சிங்கப்பூரில் 25 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம், ஒவ்வோர் ஆண்டும் தமிழ்மொழி விழாவின்போது நிகழ்ச்சி நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

அவ்வகையில், 11ஆவது ஆண்டாக இம்மாதம் 14ஆம் தேதி மாலையில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ‘தமிழ்மொழியின் சொல்லாற்றல்’ எனும் தலைப்பில் அச்சங்கத்தின் நிகழ்ச்சி இடம்பெற்றது.

“ஓர் எழுத்தில், ஒரு சொல்லில், ஒரு வரலாற்றை மாற்ற முடியும்,” என்று தன் வரவேற்புரையில் கூறினார் சங்­கத்­தின் தலை­வர் ப. கருணாநிதி.

“தமிழை நேசித்து, தமிழர்களோடு தமிழில் மட்டுமே பேசுவது, தமிழில் வாசிப்பது, எழுதுவது மிகவும் அவசியம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் சிறப்புப் பேச்சாளராக புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர் பாவலர் அறிவுமதி கலந்துகொண்டார்.

அவர் தமிழின் பழைமையைப் பற்றியும் அழகைப் பற்றியும் விரிவாகப் பேசினார்.

“எல்லா ஊருக்கும் நான் விருந்தினராகப் போவேன். ஆனால் சிங்கப்பூருக்கு மட்டும் என் தமிழர்களில் ஒருவனாக வருவேன். அத்தகைய உணர்வுகளையும் கூறுகளையும் உள்ளடக்கிய ஒரு மிகச் சிறந்த ஊர் சிங்கப்பூர்,” என்று சிங்கப்பூர், தமிழ் மீது வைத்திருக்கும் பற்றையும் மதிப்பையும் பாவலர் அறிவுமதி புகழ்ந்து பேசினார்.

அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களுக்‌கு ஒரு புதிய தலைப்பில் கருத்துகளைத் திரட்டி, ஆய்வுகளைப் படைக்கும் போட்டியை நடத்தி ஊக்குவித்து வருகிறது.

இவ்வாண்டு உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி கடந்த மார்ச் 31ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் 19 பள்ளிகளில் இருந்து மொத்தம் 103 மாணவர்கள் பங்கேற்றார்கள். மூன்று பிரிவுகளாக இந்தப் போட்டி நடைபெற்றது.

உயர்நிலை ஒன்று மற்றும் இரண்டு பிரிவில் முதல் பரிசை பெற்றார் குளோபல் இந்திய அனைத்துலகப் பள்ளியின் ஈஸ்ட் கோஸ்ட் கிளையைச் சேர்ந்த மாணவர் கார்த்திக் சரண் கணபதி.

உயர்நிலை மூன்று மற்றும் நான்கு பிரிவில் ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தைச் சேர்ந்த மாணவர்கள் மகேஸ்வரன் ஆதித்யா, யுதிஷ் செந்திலரசு, தெமாசெக் தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த சித்வியா சிதம்பரம் ஆகியோர் முதல் பரிசை வென்றனர்.

தொடக்கக் கல்லூரிப் பிரிவில் யுவபாரதி அனைத்துலகப் பள்ளியைச் சேர்ந்த பவ்யா கணேஷ் குமாரும் பிரசன்னா திருவிக்ரமும் வாகை சூடினர்.

வெற்றி பெற்ற மாணவர்கள் தனியாகவோ குழுவாகவோ தங்கள் ஆய்வினை ஆங்கிலம் பயன்படுத்தாமல் தூய தமிழில் மேடையில் படைத்தனர்.

yogitaa@sph.com.sg

குறிப்புச் சொற்கள்