நெசவுக் கலையைக் கொண்டாடிய நாட்டிய நாடகம்

1 mins read
d1f73826-ff46-420d-bcb1-a5d24719e7cb
நெசவு நாட்டியத்தை அரங்கேற்றிய ஏழு நடனக் கலைஞர்கள். - படம்: தத்வா கலைக்குழு

கலை நயமும் கதை வளமும் ஒருசேர ‘நெசவு’ எனும் நாட்டிய நாடகத்தை தத்வா கலைக் குழுவினர் அரங்கேற்றினர். தமிழ்மொழி விழாவின் ஒரு பகுதியாக அலிவால் கலை மையத்தில் ஏப்ரல் 27ஆம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழரின் பரம்பரியக் கைத்தறிச் சேலைகள், அவற்றை நெசவு செய்யும் நெசவாளர்கள், அவர்களது உழைப்பு, வாழ்வியல் எனப் பல அம்சங்கள் குறித்து உணர்வுபூர்வமாக பரதநாட்டியம் மூலம் வெளிப்படுத்தினர் கலைஞர்கள்.

இலக்கியக் கதைமாந்தர்களான கல்கியின் சிவகாமி, மதுரை மீனாட்சி, மகாபாரதத்தின் சத்தியவதி ஆகியோர் போல தோன்றிய நடனக் கலைஞர்கள், கதாபாத்திரத்தின் உடை, இயல்பு, உணர்வுகள் என அனைத்தையும் தத்ரூபமாகப் பிரதிபலித்தது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

“தமிழர்களிடம் கலை ஆற்றல் பல கொட்டிக்கிடக்கின்றன. அக்கலைகளில் அழகிய நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட பட்டுச் சேலை நெய்வதும் ஒன்று. அக்கலைக்கு மரியாதை செய்யும் விதமாகவும், அதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் விரும்பியதால் இந்த நாட்டிய நாடகத்தைப் படைத்தோம்,” என்றார் இந்நிகழ்ச்சியின் புத்தாக்க இயக்குனர் சுரேந்திரன்.

“நெசவுமுறை, அதிலுள்ள படிநிலைகள் குறித்த பல காணொளிகளையும் ஆவணப் படங்களையும் பார்த்து நாட்டிய நாடகத்தைக் கருத்துருவாக்கம் செய்தோம். இதில் பங்காற்றியதில் பெருமிதம் கொள்கிறோம்,” என்று கூறினார் இப்படைப்புக்கு நடனம் அமைத்து, சிவகாமியாகவும் தோன்றி ஆடிய கல்யாணி.

நடனம்வழி நெசவு செயல்களை, நயம் குன்றாமல் பார்ப்போருக்கு உணர்த்துவது கடினமாக இருந்தாலும் அதைச் செயல்படுத்தியது நிறைவாக இருந்ததாக நடனக் கலைஞர் சரிகா கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்