சிங்கப்பூர் தேசிய தொடக்கக் கல்லூரி 48ஆம் ஆண்டாக நடத்திவரும் விவாதப் போட்டியில் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி வெற்றிபெற்றுள்ளது.
ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டி சிங்கப்பூர் தேசிய தொடக்கக் கல்லூரியின் இந்திய இலக்கிய, நாடக, விவாத மன்றத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
நிகழ்ச்சியில் அப்பள்ளியின் முதல்வர் லூசி டோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இப்போட்டியில் முனைவர் வேணுகோபால், முனைவர் சீதாலட்சுமி, சிங்கப்பூர் தேசிய தொடக்கக் கல்லூரியின் துணைத் தலைமை ஆசிரியர் ஹாரேஷ் சிவராம், திருவாட்டி எழிலி கருணாகரன் ஆகியோர் நீதிபதிகளாகச் செயல்பட்டனர்.
கடந்த சில வாரங்களாக ஆறு தொடக்கக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பல பிரிவுகளில் பங்கேற்று, இறுதிப் போட்டியில் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியும் ஈசூன் இன்னோவா தொடக்கக் கல்லூரியும் மோதின.
‘சமுதாயத்தில் முன்னேறத் தேவையானது கடின உழைப்பே’ என்பது இறுதிப் போட்டியின் தலைப்பு. ஈசூன் இன்னோவா தொடக்கக் கல்லூரி தலைப்பை ஒட்டிப் பேசியது. ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி வெட்டிப் பேசியது.
இந்த விவாதப் போட்டியில் சிறந்த பேச்சாளர் விருதைப் பெற்ற ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவி மணிகண்டன் ஆர்த்தி, 17, “இப்போட்டி மிகவும் பயனுள்ளதாக இருந்தது,” என்று கூறினார்.
“இக்காலகட்டத்தில், பேச்சுத் திறன் முக்கியமானது என்று நான் மட்டும் நினைக்கவில்லை. என் குழுவில் உள்ள எல்லா உறுப்பினர்களும் நினைக்கிறார்கள்.”
தொடர்புடைய செய்திகள்
“இந்த அனுபவத்தில் நிறைய சவால்களைச் சந்தித்தோம். ஆனால், எங்களின் ஆசிரியர் எங்களுக்கு ஒரு பக்கபலமாக இருந்தார். அவர் கொடுத்த கருத்துகளும் எங்களை மேம்படுத்த உதவின,” என்றார் அவர்.
இரண்டாம் பரிசு வென்ற ஈசூன் இன்னோவா தொடக்கக்கல்லூரி மாணவி காமாட்சி சந்திரசேகர், 16, இவ்விவாதப் போட்டி பல புதிய நண்பர்களை உருவாக்கும் வாய்ப்பை அளித்ததாகக் கூறினார்.
“இந்த அனுபவத்திற்கு என் குழுவினர் அனைவரும் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். என் தொடக்கக் கல்லூரி அனுபவத்தில், முதலாம் ஆண்டின் ஒரு முக்கிய நினைவாக இது நிச்சயம் இருக்கும்,” என்று அவர் சொன்னார்.
அவருடன் போட்டியில் பேசிய கவியரசன் சாய்பிரசாத், 16, “இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது மிகவும் பெருமையாக உள்ளது,” என்றார்.
போட்டியில் பங்கேற்ற ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவி சீனிவாசன் சமீக்ஷா, 16, “இப்போட்டியில் நாங்கள் வெற்றிபெற்றதற்கான முழு காரணம் எங்கள் ஆசிரியர் முனைவர் வீரமுத்து கணேசன். நாங்கள் தைரியமாகப் பேசுவதற்குப் பல பயிற்சிகளை அவர் அளித்தார். எங்களின் வகுப்பு மாணவர்களும் எங்களை ஊக்குவித்து உறுதுணையாக இருந்தார்கள்,” என்று சொன்னார்.