துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் மே 15ஆம் தேதி சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பதவி ஏற்கவுள்ளார். இத்தகைய தலைமைத்துவ மாற்றம் நாட்டுக்கும் மக்களுக்கும் முக்கியமான ஒன்று. மேலுமோர் ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளையர்கள் சிலரைச் சந்தித்துப் பேசியது இவ்வார இளையர் முரசு.
அனுபவமும் திறமையும் கொண்டவர்
யுகேஷ் கண்ணன், 23
சிங்கப்பூர் அரசியல் சூழல் நிலையாகவும் அமைதியாகவும் இருப்பதற்கு சீரான தலைமைத்துவம் முக்கியக் காரணம்.
சிங்கப்பூரின் எதிர்காலத் தலைவர்கள் விரைவாகவே கண்டறியப்பட்டு அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றனர். புதிய பிரதமர் தன் பணிகளை நிறைவேற்றத் தயாராகும்வரை, முன்னைய பிரதமர்கள் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து ஆலோசனை வழங்குகின்றனர்.
அவ்வகையில் அனுபவமும் தலைமைத்துவப் பண்புகளும் நிறைந்த தலைவராக விளங்குகிறார் திரு வோங். மக்கள் செயல் கட்சியின் தலைவர்கள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதில்லை என்ற விமர்சனத்தைப் போக்கும் வண்ணம் அவரது செயல்கள் உள்ளன.
எனவே, என் தலைமுறையினருக்காகவும் எனக்கு அடுத்த தலைமுறையினருக்காகவும் திரு லாரன்ஸ் வோங் என்ன செய்யவிருக்கிறார் என்பதைக் காண நான் ஆவலாக உள்ளேன்.
சமூகத்தின் தேவைகளை அறிந்தவர்
கெஜ ஷ்ரேயா இராஜ்குமார், 21
சவாலான ஒரு காலகட்டத்தில் திரு லாரன்ஸ் வோங், பிரதமர் பதவியை ஏற்கவுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பெருகிவரும் மக்கள்தொகையில் பல்லின மக்களின் தேவைகள் வேறுபட்டு இருப்பதை அறிந்து, அதற்கேற்ப செயல்படுவதில் திரு வோங் கவனம் செலுத்துவார் என்று நம்புகிறேன்.
‘மற்றவர்களின் கருத்தைக் கேட்க வேண்டும், அதன் மூலம் அவர்களின் வேறுபட்ட கண்ணோட்டத்திலான சிந்தனையையும் பார்வையையும் அறிந்துகொள்வதுடன் அவற்றை முழுமனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று 4ஜி தலைவர்களது அரசியல் நோக்கம் குறித்து திரு வோங் கூறிய சொற்கள் இவை.
இவ்வாறு எந்தப் பிரிவினரும் நமது சமூகத்தில் ஒதுக்கிவைக்கப்படமாட்டார்கள் என்பதை திரு வோங் உறுதிசெய்வார் என்று எதிர்பார்க்கிறேன். உலகளாவிய நிகழ்வுகளால் உள்நாட்டில் சமூக விரிசல்கள் ஏற்படுவதைத் தவிர்த்து ஒற்றுமையை திரு வோங் மக்களிடையே தொடர்ந்து நிலைநாட்டுவார் என்றும் நம்புகிறேன்.
பொறுப்புகளைக் கையாளும் திறன் படைத்தவர்
ஜெய் கணேஷ் லட்சுமி மீனா, 18
காலத்தின் மாற்றத்திற்கேற்ப சிங்கப்பூரர்களின் வாழ்க்கைமுறையும் மாறிக்கொண்டே வருகிறது.
முன்னாள் கல்வி அமைச்சரான திரு லாரன்ஸ் வோங் நிதி அமைச்சராக இருந்து விரைவில் நாட்டின் பிரதமராகவும் பதவி ஏற்கவுள்ளார். திரு வோங் கல்வி அமைச்சராக இருந்தபோது, அடுத்த தலைமுறை மாணவர்களுக்குப் பல பயனுள்ள திட்டங்களைக் கொண்டு வந்தார்.
அதோடு கல்வியுடன் இணைப்பாடத்திட்டச் செயல்பாட்டின் மூலம் மாணவர்களின் திறன்களையும் மேம்படுத்த உதவியுள்ளார். சிங்கப்பூர் மக்களின் கவலைகளையும் பிரச்சினைகளையும் திரு வோங் பயனுள்ள திட்டங்கள் மூலம் தீர்த்துவைப்பார் என்று நான் நம்புகிறேன்.
திரு லாரன்ஸ் வோங்கிற்கு இனி பொறுப்புகள் கூடுவதால் அவர் எவ்வாறு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்பதைப் பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளது.
இளையர்களுக்கு முன்மாதிரி
ஸ்ரீராம் பாலசுப்ரமணியன், 21
திரு லாரன்ஸ் வோங் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நிதி அமைச்சராகச் சேவையாற்றி, இனி சிங்கப்பூரின் பிரதமர் பொறுப்பையும் ஏற்கவிருக்கிறார்.
கொவிட்-19 நோய்ப் பரவல் காலகட்டத்தில் சிங்கப்பூரை மீண்டும் நிலையான ஓர் இடத்திற்குக் கொண்டுவர திரு வோங் முக்கியப் பங்காற்றினார். அவரது அணுகுமுறைகளாலும் சிக்கலான கொள்கைகளைப் பொதுமக்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்கும் திறமையாலும் ஒரு தகுதியுடைய தலைவராக மக்களால் பார்க்கப்படுகிறார்.
கல்விச் சீர்திருத்தங்கள், இளம் தொழில் முனைவர்களுக்கான வாய்ப்புகள் உள்பட இளையர்கள் தொடர்பான விவகாரங்களில் அவர் அக்கறை செலுத்துபவர். இளையர்களின் திறமைகளை மேம்படுத்துவதில் கவனமும் செலுத்தியுள்ளார்.
கல்வி அமைச்சராக இருந்தபோது, திரு வோங் மாணவர்களிடையே வாழ்நாள் கற்றலை ஊக்குவிக்க கல்விமுறையில் சீர்திருத்தங்களை முன்னெடுத்திருக்கிறார். திறன் மேம்பாடு, தொழில் ஆர்வத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அவற்றில் அடங்கும்.
இளையர்களின் அக்கறைகள், பிரச்சினைகளை நன்கு புரிந்துகொள்வதற்காக உரையாடல்களிலும் மன்றங்களிலும் பங்கேற்றுள்ளார் திரு வோங். அவர் மேற்கொண்ட முயற்சிகள், ஒரு சிறந்த தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை இளையர்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளது என்று நான் நம்புகிறேன்.
இந்தப் புதிய மாற்றத்துடன் முன்னேறி, என்னைப் போன்ற இளையர்கள் திரு வோங்கை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு, நம் நாட்டின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து கடினமாக உழைப்போம் என்று நம்புகிறேன்.
நிச்சயமற்ற உலகில் உறுதியான ஆட்சி
ஆ. விஷ்ணு வர்தினி, 21
திரு லாரன்ஸ் வோங் புதுயுகச் சவால்களைக் கையாளும் பாணியைக் காண உற்சாகத்துடன் காத்திருக்கிறேன்.
இளையர்களின் மனமறியும் அவரின் நோக்கத்தையும் இளையர்களுடன் இணைந்து செயலாற்றும் அவரின் ஈடுபாட்டையும் காட்டியது, ‘ஃபார்வர்ட் எஸ்ஜி’ திட்டம்.
சமூக, பொருளியல் சவால்கள் வேறுபட்ட பரிமாணங்களைக் கண்டுள்ளதை அத்திட்டத்தின் கலந்துரையாடல் முடிவுகள் வெளிப்படுத்தின. திரு வோங்கின் தலைமையில் அவை விரைவில் ஆலோசிக்கப்பட்டு அமலாக்கம் காணும் எனும் நம்பிக்கையும் உள்ளது.
உலகின் பல பகுதிகளில் பூசலும் போரும் தொடங்கும் அல்லது பெருகும் தறுவாயில் நாம் உள்ளோம். இந்நிலையில், உலகளவில் திரு வோங்கின் பணிகள் எவ்வாறு அமையும் என்பதும் கவனிக்கப்படும்.
உலக வல்லரசுகளுடன் சிங்கப்பூர் இதுவரை கவனமாக நல்லுறவுகளை வலுப்படுத்தி வந்துள்ளது. பெரும்பாலான நாடுகளோடு சிங்கப்பூர் கொண்டுள்ள நட்புறவுகள், தென்சீனக் கடல் பூசல், பிறநாடுகளுக்கு இடையிலான போர் போன்றவற்றால் அச்சுறுத்தல் ஏற்படலாம்.
இவற்றில் சிங்கப்பூரின் பங்கை எதிர்வரும் பிரதமர் உள்பட அவரின் குழு எவ்வாறு செயல்படுத்தும் என்ற கேள்விக்குறி உள்ளது.
உணவு, நீர் முதலிய அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்யும் வல்லமையை சிங்கப்பூர் பெருக்கி வருகிறது. இத்தேவைகளைச் சமாளிப்பது ஒருபுறம். மறுபுறம், 2030ஆம் ஆண்டுக்குள் அடையவேண்டிய பசுமை உள்ளிட்ட ஏனைய வளர்ச்சிக் குறிக்கோள்கள்.
பல நாடுகள் தங்களின் பசுமை வாக்குறுதிகளைப் புறக்கணித்துள்ள நிலையில், அவற்றைப் பூர்த்தி செய்வதை நோக்கி திரு வோங் நாட்டை வழிநடத்துவார் என இளையர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உலக மாற்றங்களுக்கு நம்மைத் தயார்ப்படுத்தும் அதே வேளையில், சிங்கப்பூரின் சமூக மாற்றங்களை வெளிப்படைத்தன்மையோடும் உறுதியோடும் திரு வோங் முன்னெடுப்பார் என்றே எதிர்பார்க்கிறேன்.
தொலைநோக்குப் பார்வை தொடரட்டும்
சுப்பிரமணியன் கார்த்திக்கேயன், 22
சிங்கப்பூரில் ஒரு புதிய தலைமைத்துவ மாற்றத்தைக் காண உள்ளோம்.
நம்முடைய வாழ்க்கைக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்துப் பலர் சிந்தித்துக் கொண்டிருப்போம். திரு லாரன்ஸ் வோங், எல்லோரும் அறிந்த ஒரு முகம்.
உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கியிருந்தபோது, அதைக் கட்டுப்படுத்துவதற்காக நம் அரசாங்கம் நியமித்த சிறப்புக் குழுவை வழிநடத்தியவர்களில் இவரும் ஒருவர்.
அந்த இக்கட்டான சூழ்நிலையைப் பக்குவமாகச் சமாளித்து, சிங்கப்பூரைப் பத்திரமாகக் கரைசேர்த்த கரங்களின் ஆற்றலை எல்லோரும் கண்டிருப்பர். இதனால், சிங்கப்பூரின் வளர்ச்சியையும் சிங்கப்பூரர்களின் நலத்தையும் கருத்தில்கொண்டு திரு வோங் நாட்டுத் திட்டங்களைச் சிறப்பாக வழிநடத்துவார் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.
இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களின் தாக்கம் மிகவும் பரவலாகவே உள்ளது. திரு வோங் போன்றவர்கள் அதீத முயற்சிகளை மேற்கொள்வதைக் காணும்போது அவர்கள் மக்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள் என்று தெரிகிறது.
திரு லீ போல் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு, சிங்கப்பூர் சமுதாயம் மேலும் பல முன்னேற்றங்களைக் காண திரு வோங் பாடுபடுவார் என்று நம்புகிறேன்.
நாட்டுக்கு நம்பிக்கை அளிக்கும் அடுத்த பாகம்
பிரீத்தி அசோகன், 18
திரு லீ சியன் லூங் கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூருக்கு ஒரு சிறந்த பிரதமராக இருந்திருக்கிறார்.
சிங்கப்பூரர்களை மனந்தளரவிடாது, முளைத்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதைத் தம் தலையாய கடமையாக மேற்கொண்டார்.
இனி, திரு லாரன்ஸ் வோங்கின் புதிய திட்டங்களும் அவற்றை அவர் செயல்படுத்தும் வழிமுறைகளையும் காண ஆவலாக உள்ளேன். திரு வோங் இளையர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர். அவர்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் தளங்களையும் அவர் உருவாக்கியுள்ளார்.
இளம் தொழில்முனைவர்கள், தொழில் தொடங்கவும் வளரவும் ஊக்குவிக்கும் திட்டங்களும் நிதியுதவித் திட்டங்களும் இவர் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
திரு லாரன்ஸ் வோங் இளையர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். நாடளாவிய பிரச்சினைகளில் இளையர்கள் கருத்து கூற உதவும் தளங்களை இவர் ஆதரித்துள்ளார்.
இவ்வாறு பல முன்னேற்றத் திட்டங்களை வழிவகுத்துள்ள திரு வோங், சிங்கப்பூரைச் சாதனைப் பயணத்தில் தொடர்ந்து கொண்டுசெல்வார் என்று நான் நம்புகிறேன். அவரின் சேவைகளையும் எதிர்காலத் திட்டங்களையும் காண ஆர்வத்துடன் உள்ளேன்.