பல சாதனைகளைப் புரிந்து வெற்றி கண்ட இளையர்

பல சாதனைகளைப் புரிந்து வெற்றி கண்ட இளையர்

2 mins read
d66127e4-091b-4a05-bede-7032e00774ae
நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயின்ற அஷ்வீன் சிவசங்கரன்,19. - படம்: பிரீத்தி அசோகன்

நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் அஷ்வீன் சிவசங்கரன், 19, சிறப்புத் தேர்ச்சிகளுடன் 3.95 ‘ஜிபிஏ’ பெற்றுச் சிறந்த மாணவராகத் தேர்ச்சிபெற்றுள்ளார்.  

ஊடக, வடிவமைப்புப் பாடத்தில் பட்டயம் பெற்றுள்ள இவர், அதற்கு அப்பாலும் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார்.     

“இப்படிப்பில் சேர்ந்தபோது எனக்கு எந்தவோர் அடித்தளமும் இல்லை. கொடுக்கப்பட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தி, என்னை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இதை எடுத்துக்கொண்டேன்,” என்றார் அஷ்வீன். 

கல்வித் திறமைக்கு சான்றாக, இவருக்கு 2022, 2023ஆம் ஆண்டுகளில் ‘நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி-ஹாம் கிரியேஷன்ஸ்’ உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது.

முன்னர் கல்வியில் அதிக நாட்டம் இல்லாவிட்டாலும் தந்தையின் உதவியுடன் இந்த அளவிற்குக் கற்றுத் தேர்ந்ததாகக் கூறும் அஷ்வீன், ஊக்கத்துடன் செயல்படும் இளையர். 

தலைமைத்துவத் திறன்மிக்க இவர், தேசிய இளையர் சாதனை விருது சங்கத்தின் தகவல், தொடர்புத் தலைவராகச் செயல்பட்டார். 

சமூக அளவிலான நிகழ்ச்சிகளில் இச்சங்கத்தின் குழுவை வழிநடத்தியதால், ‘முன்னேறும் சிங்கப்பூர்’ உரையாடல்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வேலை-வாழ்க்கைச் சமநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறும் அஷ்வீன், 2022ல் ‘ஸ்கூல் ஆஃப் மீடியா, டிசைன்’ தலைமைத்துவக் குழுவில் முக்கியப் பங்களித்தார்.

‘ஸ்டார் விருது’ பெற்ற அஷ்வீன் சிவசங்கரன். 
‘ஸ்டார் விருது’ பெற்ற அஷ்வீன் சிவசங்கரன்.  - படம்: பிரீத்தி அசோகன்

கல்லூரியில் அக்கறை, ஒருமைப்பாடு, புதுமை, ஆர்வம், குழுப்பணி போன்ற விழுமியங்களை ஆதரிக்கும் ஓர் இளம் தலைவராக இருந்த இவருக்கு ‘நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி ஸ்டார்’ விருது வழங்கப்பட்டது.

தனது இறுதியாண்டுத் திட்ட ஒப்படைப்பிற்காக, என்டர்பிரைஸ் சிங்கப்பூர், தகவல், தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து, மின்னிலக்க உருமாற்றத்திற்காக வாடிக்கையாளர்களின் முயற்சிகளுடன் இணைந்து புத்தம் புதிய நெறிப்படுத்தப்பட்ட கைப்பேசிச் செயலியை உருவாக்கும் குழுவின் தலைவராக இருந்தார்.

மேலும், கல்வி அமைச்சின் ‘சிங்கப்பூர் இளைய தலைமைத்துவத் திட்டத்தின்’ விளம்பர ஓவியத்திற்கு முன்னணி வடிவமைப்பாளராகவும் பங்களித்துள்ளார்.

“மற்ற மாணவர்களுக்கு நான் கூற விரும்புவது, தவறுகள் நேர்ந்தால் அஞ்சாமல், அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு, தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என்பதே,” என்கிறார் அஷ்வீன் சிவசங்கரன். 

நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி பொது வரவேற்பு 2024க்கான சின்னங்களை வடிவமைத்த அஷ்வீன் சிவசங்கரன். 
நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி பொது வரவேற்பு 2024க்கான சின்னங்களை வடிவமைத்த அஷ்வீன் சிவசங்கரன்.  - படம்: பிரீத்தி அசோகன்

‘நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பொது வரவேற்பு 2024க்கான சின்னங்களை வடிவமைத்தல், வணிகப் பொருள்களை உருவாக்குதல் போன்றவற்றில் அஷ்வீன் ஈடுபட்டார். அத்துடன் தேசிய அளவிலான சிங்கப்பூர் கலை வாரம் 2024ல் ‘ஆடையலங்கார அணிவகுப்பு சிங்கப்பூர்’ நிகழ்ச்சிக்கான ‘மைக்ரோசைட்’ எனப்படும் சிறிய அளவிலான இணையத்தளத்தை வடிவமைத்தார். 

குறிப்புச் சொற்கள்