தமிழ்மொழி விழாவுக்குப் பின்பும் ‘ஆற்றல்’ தொடர வேண்டும்

தமிழ்மொழி விழாவுக்குப் பின்பும் ‘ஆற்றல்’ தொடர வேண்டும்

4 mins read
b68429ce-b1da-40ad-bb4c-b345b39fd1c6
தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகளில் இளையர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டவை 65% ஆகும். - படம்: ரவி சிங்காரம் 

தமிழ்மொழி விழாவையொட்டி ஏப்ரல் மாதத்தில் ‘ஆற்றல்’ என்ற கருப்பொருளுடன் பல நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறின.

இத்தகைய நிகழ்ச்சிகளில் இளையர்களின் பங்கேற்பு ஆண்டுக்காண்டு நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாண்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் இளையர்களுக்கெனத் திட்டமிடப்பட்டவை 65%.

இருப்பினும், தமிழ்மொழி மாதத்தோடு நின்றுவிடாமல் தொடர்ந்து அன்றாட வாழ்க்கையில் தமிழ்மொழியைப் புழங்கும், நேசிக்கும் வழக்கத்தை இளையர்கள் வாடிக்கையாக்கிக் கொள்ளவேண்டும். இதுகுறித்து, இளையர்கள் சிலர் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

என் அடையாளம், என் பலம்

தனது திறமைகளை உணர வைத்தது தமிழ்மொழி என்று கூறினார் கண்டாலு ஜீவன் புவனேஸ்வரி அத்யாஸ்ரீ, 19. தொடக்கக் கல்லூரிப் படிப்பை முடித்துள்ள இவர், “எனது அடையாளமாகவும் எனது பலமாகவும் தமிழ் இருந்து வந்துள்ளது,” என்றார்.

மேடைகளில் பேசவும் பாடவும் அமைந்த வாய்ப்புகளைத் தனக்கு வழங்கியது, தமிழ்மொழியே என்றார் அவர். அத்துடன் நண்பர்களோடு உறவை வலுப்படுத்திக்கொள்ளவும் தமிழ் உறுதுணையாக இருந்தது என்றார்.

இலக்கியம், நாடகம், குறும்படத் தயாரிப்பு போன்ற பல்வேறு அம்சங்களை ஆராய்வதற்குத் தனக்கு தமிழ்மொழி வாய்ப்பளித்ததாக சௌம்யா, 18, கூறினார். தொடக்கக் கல்லூரிப் படிப்பை முடித்திருக்கும் இவர், தமிழில் பேசுவதை மிக முக்கியமாகக் கருதுபவர்.

“எனது அடையாளத்திற்கு தமிழ் அவசியம் என நான் நம்புவதால் தமிழில் என் சரளத்தை மேம்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். தமிழ் நூல்களைப் படிப்பதுடன் தமிழர் வரலாற்றைப்பற்றிக் கற்பித்து மொழி ஆற்றலையும் பெருக்கிக்கொள்ள முடியும்,” என்றார் அவர்.

தமிழ் அளிக்கும் இன்பம்

பிற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தாலும் தனக்கு தமிழ்மொழி அளிக்கும் இன்பமே தனி என்றார் தேசிய தொடக்கக் கல்லூரி மாணவி அபர்ணா, 17. எவ்வாறு வாழ வேண்டும் என்ற வாழ்க்கை நெறிகளையும் தனக்குக் கற்றுத் தந்தது தமிழ்மொழி என்றார்.

பள்ளியில் தமிழ் இலக்கியப் பாடம், பள்ளிக்கு அப்பால் சிறுகதை நாவல் படித்தல், பட்டிமன்றம் உள்ளூர் நாடகங்களைக் காணுதல் என தமிழோடு இணைந்திருக்கும் அபர்ணா, தமிழ் நாடகங்களில் நடித்தும் தமிழ் சார்ந்த போட்டிகளில் பங்கேற்றும் வருவதாகக் குறிப்பிட்டார்.

“நமது வேலை தமிழ்மொழி சார்ந்ததாக இல்லாவிட்டாலும் அதனுடன், தமிழ் சமூகத்துடன் இணைந்திருப்பதை நாம் நம் கடமையாக மேற்கொள்ளவேண்டும்,” என்றார் அவர்.

தொடக்கக் கல்லூரியில் தமிழ் இலக்கிய பாடத்திட்டத்தைத் தான் தேர்ந்தெடுத்ததற்குக் காரணமே, தனக்கும் தமிழுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு என்றார் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவி சகீனா, 17.

தமிழ் இலக்கிய படைப்புகளில் உள்ள உன்னதமான கருத்துகளை அனுமானிக்கத் தன்னால் முடிவதுடன் அவற்றைத் தன் வாழ்க்கைக்கு உதவும் பாடங்களாகவும் பயன்படுத்த முடிகிறது என்றார்.

தாய் போன்ற தமிழ்

தமிழ்மொழிப் புழக்கத்தைத் தன் வாழ்க்கைமுறையாகக் கருதுவதாகக் கூறினார் தேசிய சேவை ஆற்றும் அஸ்வின்ராஜ், 19.

மனிதன் என்பவன் எப்படி வாழவேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் தன்மையும் தாய்மையும் தமிழில் உள்ளதாக அவர் சுட்டினார்.

சிறுகதைகளும் சிலசமயம் ஹைக்கூ கவிதைகளும் எழுதும் இவர், முன்னோர் தமிழ்மொழியைக் காத்த பயணம் இனி இக்கால இளையர்கள் தலைமையில் தொடர்வதாகச் சொன்னார்.

தேசிய சேவை ஆற்றும் மற்றொருவரான 20 வயது ரகுநந்தன், கவிமாலை சிங்கப்பூர் அமைப்பின் மாணவரணிக்குத் துணைத்தலைவராக உள்ளார்.

தான் பேசுவது, எழுதுவது, நினைப்பது என அனைத்திலும் தமிழ்மொழியும் பண்பாடும் ஊறிக்கிடப்பதில் தனக்குப் பெருமையே என்றார் அவர்.

சமூக ஊடகத் தளங்கள்வழி தமிழோடு இணைந்திருத்தல்

தமிழ்மொழியைப் பேசுவோரிடத்தில் தமிழ் கலாசாரத்துடனான பிணைப்பும் இருக்கும்.

தமிழர் என்ற பெருமை உணர்வும் இருக்கும் என்றார் ரிபப்ளிக் பலதுறைத்தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மெய்யம்மை அருணாசலம், 18.

இந்திய கலாசார குழுக்களில் சேர்ந்து தமிழ்மொழி, கலாசாரத்தில் ஆர்வங்கொண்ட மற்றவர்களுடன் இணைவதற்குத் தான் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதாகக் கூறினார் இவர்.

என்றும் அரசாங்க அங்கீகாரம்

தமிழை சிங்கப்பூர் அரசாங்கம் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாக அங்கீகரித்துள்ள நிலையில், தமிழ் அமைப்புகளும் மக்களுக்கு மொழியைக் கொண்டுசேர்க்கப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழ்மொழி விழாவில் கம்பர் கவிதைகள் சார்ந்த நடன நிகழ்ச்சியை வழங்கியதாக ‘மாகூலம் ஆர்ட்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தில் நடன ஆசிரியராக இருக்கும் 28 வயது ஆ. மீனலோசனி ஆனந்தன் கூறினார்.

நடனம் மூலம் மக்களுக்கும் மாணவர்களுக்கும் தமிழ்மொழியின் பெருமைகளைக் கொண்டுச் சேர்க்கவேண்டும் என்ற விருப்பத்தில் ஆண்டுதோறும் புதுமையான நிகழ்ச்சிகளைத் தான் வழங்க முயல்வதாக அவர் கூறினார்.  

தொடக்கக் கல்லூரிக் கல்வியை முடித்துள்ள நிவேதித்தா அன்பழகன், 18, தமிழ்மொழியுடன் தான் தொடர்ந்து இணைந்திருக்க பாரம்பரிய நடனக் கலையான பரதத்தைத் தீவிரமாகக் கற்றுப் பயிற்சி செய்வதாகச் சொன்னார்.

வாழ்க்கையின் நோக்கத்தைப் புரியவைக்கும் கருவியானது தாய்மொழியான தமிழ்மொழி என்றார் அவர்.

ஒன்றிணைக்கும் ஆற்றல்

தமிழர்களை ஒன்றிணைக்கும் ஆற்றல் கொண்டது தமிழ்மொழி என்றார் தொடக்கக் கல்லூரிப் படிப்பை முடித்துள்ள ஹரிப்ரியா, 18.

சிறுவயதில் துளிர்விட்ட தமிழார்வம், தொடக்கக் கல்லூரியில் சேர்ந்த பிறகு அதிகரித்தது என்று குறிப்பிட்ட அவர், தமிழ் மீது பற்றும் பாசமும் கொள்ள தன் தமிழாசிரியர் திரு வீரமுத்து கணேசன் பல வாய்ப்புகளை அளித்ததாகத் தெரிவித்தார்.

பாடத்திட்டத்தையொட்டிக் குறும்படம் இயக்குதல், பொன்னியின் செல்வன் என்ற ஆவணப்படத்தை இயக்குதல் என்றவாறு நண்பர்களுடன் ஈடுபட்டார் ஹரிப்ரியா.

இவ்வாறு ஆற்றல்மிகு தமிழைத் தொடர்ந்து வாழும் மொழியாக நிலைத்திடச் செய்வது ஒவ்வோர் இளையரது கடமை என்பதை எதிரொலிக்கும் விதமாகக் கருத்து தெரிவித்திருந்தனர் இளையர்கள்.

குறிப்புச் சொற்கள்