பணம், உடைமைகள் மீது இளையரிடையே தலைதூக்கும் மோகம்

பணம், உடைமைகள் மீது இளையரிடையே தலைதூக்கும் மோகம்

2 mins read
df6a528f-766e-4b14-b8af-7d81ac576dc8
பிரபலமான பொருள்களை வாங்க மணிக்கணக்காக நீண்ட வரிசையில் நிற்கவும் இளையர்கள் தயாராக இருக்கின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பணமும் உடைமைகளும் வாழ்க்கையில் மிக முக்கியமானவை என்று கருதுவோர், கார், நகைகள், ஆடை, காலணிகள் எனப் பொருள்களை வாங்கிக் குவிப்பதில் மும்முரமாக உள்ளனர்.

அதிலும், உயிரற்ற பொருள்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் ‘பொருள்முதல்வாத’ (materialistic) சிந்தனையுடைய இளையர்களை அண்மைய காலமாக அதிகம் காண முடிகிறது.

இச்சிந்தனை அதிகரிப்பதற்குப் பல காரணங்கள் உண்டு.

பலர் தங்களின் வாழ்க்கை லட்சியங்களுடன் இந்தப் பொருள்களைத் தொடர்புபடுத்திவிடுகின்றனர். அந்தப் பொருள்கள் கைக்கு வரும்போது லட்சியத்தை அடைந்துவிட்டதாகக் கருதுகின்றனர்.

விளம்பரங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றுடன் மக்களிடையே கூடுதல் இணைப்பும் இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் உருவாகிவிட்டது.

இக்கால இளையர்கள் தங்களின் திறன்பேசிகளில் சமூக ஊடகங்களை உலாவந்து அதிகம் பேசப்படும் பொருள்களைப் பற்றி அறிந்துகொள்கின்றனர்; வாங்கவும் முற்படுகின்றனர்.

பணம் இல்லாவிட்டாலும் நண்பர்கள் மத்தியில் தங்களின் மதிப்பு குறைந்துவிடக்கூடாது என்பதற்காக எப்படியாவது அந்தக் குறிப்பிட்ட பொருளைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்வதில் தீவிரமாக உள்ளனர்.

மனிதர்களுடன் உணர்ச்சிப் பிணைப்பை உருவாக்க வேண்டும். ஆனால், பொருள்களுடன் அந்த உணர்ச்சி தேவையில்லை என்பதாலும் சிலர் உடைமைகளை அடைவதில் நாட்டம் காட்டுகின்றனர்.

‘தி அதர் கிளினிக்’ என்ற உளவியல் நிறுவனத்தைச் சேர்ந்த மனநல ஆலோசகர் திருமதி வயலட்டா டிசோலோவா இதுகுறித்து தமிழ் முரசிடம் பேசினார்.

உணர்ச்சி நுண்ணறிவு (emotional intelligence) குறைவதால் பொருள்முதல்வாதச் சிந்தனை அதிகரித்து மனத்தெளிவு குறையலாம். ஆகையால், வாழ்க்கையில் குறைந்தளவு மகிழ்ச்சியையே இளையர்கள் அனுபவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“இளையர்கள் கவலையைப் போக்கச் சரியான வழிமுறைகளைக் கண்டறியாமல், தற்காலிக இன்பத்தைத் தரும் பொருள்களை வாங்கலாம். இதனால், உணர்ச்சிகளுடன் சமூகத் திறன்களும் அவர்களிடத்தில் குறைந்து வருகின்றன.

“தங்கள் உணர்ச்சிகளிலிருந்து விடுபட, ஒரு மாற்றத்துக்காக இவர்கள் பொருள்களை வாங்கும்போது உணர்ச்சிகள் பாதிக்கப்பட்டதற்கான மூல காரணத்தைக் கண்டறியத் தவறிவிடுகின்றனர். இதனால், மேலும் சிக்கலான நிலைக்கு அவர்கள் ஆளாகிறார்கள்,” என்றார் திருமதி வயலட்டா.

இதனால் சமூகத்தின் மீதுள்ள பயம், அதிகப்படியான செலவு, குறைந்த சுயமரியாதை, தேவையற்ற பொருள்களைச் சேகரித்தல் ஆகியவற்றுக்கும் மேலாக பொருள்களை எப்போதுமே வாங்க வேண்டும் என்ற வேட்கை இளையர்களின் மனதில் நிலைத்திடும்.

பொருள்முதல்வாதத்தில் அதிக ஈடுபாடு கொண்டோர், தங்கள் வாழ்க்கை அம்சங்களை நன்றி உணர்வோடு பார்க்க மாட்டார்கள். பேராசையோடு இருப்பர். அதற்கு ஓர் எல்லையும் இருக்காது.

இதைச் சரிசெய்ய, தன்னுள் ஏற்படும் விரும்பத்தகாத உணர்வுகளை மறைக்காமல் மற்றவர்களிடம் அவை குறித்து பேசி, சமூக உறவுகளை வளர்த்துக்கொள்ள இளையர்கள் முற்பட வேண்டும் என்றார் திருமதி வயலட்டா.

இதனால், மனமும் தெளிவடையும். நன்றி உணர்வுடன் வாழ்க்கையை நோக்குவது முக்கியம் என்ற அவர், சமூக ஊடகத்தை ஒரு பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்