கற்றலுக்கும் வளர்ச்சிக்கும் கைகொடுக்கும் ‘லேகோ’ விளையாட்டு, பல்வேறு உருவங்களை எழுப்பத் தனக்கு வாய்ப்பளிப்பதாக இளையர் காவியா குமாரசாமி, 19, கூறினார்.
“லேகோ உருவங்களை எழுப்புவதுபோல் தொடர்ச்சியான, படிப்படியான முறையில் கவனத்துடன் மேற்கொள்ளப்படும் கல்விப் பயணமும் ஒருவருக்கு வெற்றியை ஈட்டித் தரும்,” என்றார் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பயிலும் இவர்.
நிதித்துறையின் மீது ஆர்வம் கொண்டுள்ள காவியா, சிறுவயது முதல் தன் தாயாரின் ஊக்குவிப்பைப் பெற்றுவந்தார்.
சேமித்தல், செலவுகளைக் கட்டுப்படுத்துதல் எனத் தன்னையே நிர்வகித்துக்கொள்ளும் பழக்கங்களை இவர் தொடங்கினார்.
உயர்நிலைப்பள்ளிக் காலத்தில் கணக்காய்வுப் பாட ஆசிரியரின் சுவாரசியமான கற்பித்தல் முறை, காவியாவின் ஆர்வத்தை மேலும் தூண்டியது.
“நிதி நிர்வாகம் சார்ந்த உலக நடப்பு விவகாரங்களை அவர் பாடத்தின்போது விளக்கினார்,” என்றார் காவியா.
பாய லேபார் மெத்தடிஸ்ட் உயர்நிலையில் பயின்ற காவியா, வழக்கநிலைத் தொழில்நுட்பப் பிரிவில் பயின்று, பின் வழக்கநிலை ஏட்டுக்கல்விப் பிரிவுக்கு முன்னேறினார்.
கணக்காய்வுப் பாடத்தைத் தொடர்ந்து ஆர்வத்துடன் காவியா கற்றார். தொடக்கத்தில் கணக்காய்வு கற்பதில் தான் சிரமத்தை எதிர்நோக்கியபோதும் பயிற்சி செய்து அந்தப் பாடத்தின் நுட்பங்களைத் தனக்கே படிப்படியாகப் புகட்டிக் கொண்டதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது ஐடிஇ மத்தியக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் காவியா, வரும் செப்டம்பர் மாதத்தில் தம் பள்ளித் தவணையை முடித்துக்கொண்டு நிதி நிறுவனம் ஒன்றில் வேலைப் பயிற்சியில் சேரக் காத்திருக்கிறார்.
“வேலைப் பயிற்சிக்கு விண்ணப்பித்தபோது தொடர்புத் திறனை வளர்த்துக்கொள்ளும்படி அவர்கள் எனக்கு அறிவுறுத்தினர்,” என்றார் காவியா.
2023ல் ஐடிஇ சமூகக் கல்விமான் விருதைப் பெற்ற காவியா, இவ்வாண்டு பொறியியல் புத்தாக்கப் போட்டியிலும் பங்கேற்றார்.
அந்தப் போட்டியில் வர்த்தக, தொழில்நுட்ப முன்னேற்றத்தை அறிவியல் முன்னேற்றத்தோடு இணைக்கும் நிலையான புத்தாக்கங்கள் குறித்து அவரது குழு கலந்தாய்ந்தது.
‘ஐபிஎஃப்’ எனப்படும் வங்கி, நிதித்துறை நிலைய மானியத்தையும் பெற இவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
பாடங்களை வகுப்பறையில் கடசறக் கற்கவேண்டும்.
அதேநேரத்தில் வகுப்புக்கு வெளியிலும் கற்றலைத் தொடர வேண்டும் என நம்பும் காவியா, சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் மகளிர் அணி ஏற்பாடு செய்த நிதிக்கல்விப் பயிலரங்கில் கலந்துகொண்டார்.
“அங்கு நான் பார்வையாளராக மட்டும் இல்லாமல் படைப்புகளை உருவாக்கி தொடர்புத் திறனை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றேன்,” என்று அவர் கூறினார்.
தாம் விரும்பி வனையு;ம் லேகோ உருவத்தைப் போல வாழ்க்கையையும் சீராக அமைக்கும் திட்டத்தில் காவியா உள்ளார்.
நிதித்துறையில் வேலை செய்ய விரும்பும் காவியா, எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியிலும் நிதானத்தைக் கடைப்பிடித்து வெற்றியை நெருங்க முனைகிறார்.

