அதிகம் பயன்படுத்தப்படாத ஆடைகள், மிதிவண்டிகள், மின்னியல் பொருள்கள் போன்றவற்றைக் கைப்பேசிச் செயலிவழி பயனாளர்கள் வாடகைக்குப் பெற்றுக்கொள்ளலாம், அன்பளிப்பாக வழங்கலாம் அல்லது விற்கலாம்.
குப்பைகளையும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பையும் குறைக்க உதவும் ‘காமன் கிரேட்ஸ்’ என்ற இந்தப் புத்தாக்கத் தளம், மறுபயனீடு செய்வதையும் பகிர்வதையும் ஊக்குவிக்க உருவாக்கப்பட்டது.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் (எஸ்ஐடி) கடந்த மே 3ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த ‘மேப்பல்ட்ரீ’ சவாலின் மாபெரும் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற ஐந்து குழுக்களில் ‘காமன் கிரேட்ஸ்’ செயலியை உருவாக்கிய குழுவினரும் அடங்குவர்.
புத்தாக்கச் சிந்தனையாளர்களாகவும் நீடித்த நிலைத்தன்மையைக் கடைப்பிடிக்கும் எதிர்காலத் தலைவர்களாகவும் மாணவர்களை உருவாக்கும் நோக்கில் கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்றுவருகிறது இந்தப் போட்டி.
தகுதிபெற்ற ஐந்து குழுக்களும் தங்களின் திட்டங்களுக்குரிய மூல முன்மாதிரியை நீதிபதிகள் முன்னிலையில் படைத்தனர். அவர்களில் பயன்பாட்டுக் கணினித் துறையில் நிதித் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவப் படிப்பு பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவரான 24 வயது பிரவீன் குமார் தன்னுடைய குழு உறுப்பினர்களுடன் ‘காமன் கிரேட்ஸ்’ செயலி குறித்துப் பேசினார்.
சுற்றுச்சூழலுக்கு நேரும் பாதிப்பைத் தணிப்பதுடன் மக்களை இணைப்பதற்கும் இத்தளம் வழிவகுக்கும் என்றார் அவர். மேலும், பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக நடைபெறுவதைச் சரிபார்க்கும் அம்சமும் செயலியில் உள்ளது.
பாராட்டுச் சான்றிதழைப் பெற்ற தங்களின் திட்டம் குறித்து, “புத்தாக்கத்தை மையப்படுத்திய இந்த அனுபவம் எங்களுக்குப் புதுமையானதாக இருந்தது. இந்தத் திட்டத்தை உருவாக்க மூன்று மாதங்கள் ஆகின. நண்பர்கள், குடும்பத்தார் ஆகியோரை அணுகி கருத்து கேட்டு எங்களது திட்டத்தை நாங்கள் மேம்படுத்தினோம்.
“எதிர்காலத்தில் எங்களின் தளத்தைப் பலர் பயன்படுத்திப் பலனடைவார்கள் என்று நம்புகிறோம்,” என்றார் பிரவீன் குமார்.


