இளையர்களின் கணித, தொழில்நுட்பத் திறன்களை வெளிப்படுத்தியது சிங்கப்பூரில் முதன்முறையாக நடைபெற்ற ‘மேத்வர்க்ஸ்’ ஆளில்லா சிறுவானூர்திப் (minidrone) போட்டி.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) இயந்திர, விண்வெளிப் பொறியியல் பள்ளி, ‘மேத்வர்க்ஸ்’ மற்றும் அதன் மறுவிற்பனையாளர் ‘டெக்சோர்ஸ்’ இணைந்து இப்போட்டியை நடத்தின. என்டியு விண்வெளிச் சமூகமும் இதற்கு ஆதரவளித்தது.
பல்கலைக்கழக (இளநிலை), தொடக்கக் கல்லூரி, பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்காக இப்போட்டி நடத்தப்பட்டது.
தரையிலுள்ள சிவப்புக் கோட்டினை வானூர்தி பின்தொடர்ந்து, ஒரு சிறு வட்டத்தில் குறிபார்த்துத் தரையிறங்க வேண்டும் என்பதே போட்டியின் விதிமுறை.
போட்டிக்கு பதிவுசெய்த 30 அணிகளைத் தயார்ப்படுத்த பயிலரங்குகளும் இணையவழிப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
அணிகள் முதல் சுற்றான மாதிரி சோதனைச் சுற்றுக்குத் தம் பதிவுகளை அனுப்பின. அச்சுற்றில், மாணவர்கள் ‘சிமுலிங்க்’ எனும் மென்பொருள்மூலம் கணினியிலேயே ஆளில்லா வானூர்தியை இயக்கி, காணொளியாகப் படம்பிடித்து அனுப்பினர்.
பத்து அணிகள் காணொளிகளை அனுப்பிய நிலையில் அவற்றில் ஆறு அணிகள் (‘என்டியு’விலிருந்து ஐந்து, நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியிலிருந்து ஒன்று) ஜூன் 11ஆம் தேதி ‘என்டியு’வில் நடைபெற்ற இறுதிச் சுற்றுக்குத் தேர்வுசெய்யப்பட்டன.
இறுதிச் சுற்றில் மாணவர்கள் கணினியில் தாம் செய்த மென்பொருளை உண்மையான வானூர்தியில் புகுத்தி, சவாலில் பங்குபெற்றனர். 15 நிமிடங்களுக்குள் அதிகபட்சம் ஏழு முறை முயற்சி செய்யலாம் என விதிக்கப்பட்டது.
ஐந்து ‘என்டியு’ அணிகளையும் வீழ்த்தி முதல் பரிசை வென்றது நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி . முதல் மூன்று நிலைகளுக்கு $1,000, $500, $250 ரொக்கப் பரிசுகள், கிண்ணங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
“நாங்கள் போட்டியைத் தொடங்கியபோது புகைப்படம் எடுப்பதில் சில பிரச்சினைகளை எதிர்நோக்கினோம். ஆயினும், சில கூறுகளை மாற்றியதால் ஆறு புள்ளிகள் எடுத்து வென்றோம்,” என்றார் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி அணியின் தலைவர் சிங் ச ஹியன், 20.
“மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்தில் கற்றதை நடைமுறைப்படுத்த தளம் அமைத்துத்தர விரும்பினோம்,” என்றார் ‘என்டியு’ அறிவார்ந்த தற்சீரமைப்பியல் ( இன்டெலிஜென்ட் சைபர்னெடிக்ஸ்) குழுமத்தின் இயக்குநர் துணைப் பேராசிரியர் மிர் ஃபெரோஸ்கான்.
“கணினியிலேயே மென்பொருள் எழுதுவதற்கும் உண்மையான ஆளில்லா வானூர்திகளில் அதைச் செயல்படுத்துவதற்கும் உள்ள வேற்றுமையை உணர்ந்தேன்,” என்றார் போட்டியாளர்களில் ஒருவரான வைதிக் ஹுர்கட், 21.

