மனத்திற்கு மிகவும் நெருக்கமாக வளர்த்த தனது முதல் செல்லப்பிராணி குருவின் உயிர் ஈராண்டுகளுக்கு முன்பு பிரிந்தபோது, பரமேஸ்வரி, 29, நிலைகுலைந்து போனார்.
அதன் இழப்பை இன்று வரை நினைத்து வருந்தும் அவர், அதன் இறுதி மூச்சுவரை கூடவே இருந்து அதை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார்.
பரமேஸ்வரியின் ஷிஹ் சூ இன நாய் அதன் 15 வயதில் மூச்சுக்குழாய் அழற்சியால் மாண்டது. கடும் நோயால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினரை அக்கறையோடும் அன்போடும் பராமரிப்பதுபோல் பரமேஸ்வரியும் அவர் செல்லப்பிராணியை பார்த்துக்கொண்டார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக கால்நடை தாதியாகப் பணிபுரிந்து வரும் பரமேஸ்வரி, செல்லப்பிராணிகளின் இறுதிக் காலத்தில் அவை நன்கு கவனிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார்.
“மனிதருக்கு வயதாகும்போது அந்திமக்காலப் பராமரிப்பை நாடுவர். இது செல்லப்பிராணிகளுக்கும் பொருந்தும்,” என்றார் பரமேஸ்வரி.
சிறு வயதிலிருந்து செல்லப்பிராணிகளை வளர்த்து வரும் பரமேஸ்வரிக்கு பிராணிகளுடன் பணியாற்ற வேண்டுமென்ற ஆர்வம் இருந்தது.
செல்லப்பிராணிகளின் நோய்த் தடுப்புச் சிகிச்சை, அறுவை சிகிச்சைகள் போன்றவற்றின்போது கால்நடை மருத்துவருக்கு உதவும் பொறுப்புகளில் பரமேஸ்வரி ஈடுபட்டு வருகிறார்.
அத்துடன், செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு அந்திமக்கால பராமரிப்பின் அவசியம் குறித்த ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
செல்லப்பிராணி ஏழு வயதை நெருங்குபோதே அதை மருத்துவப் பரிசோதனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றார் அவர்.
“ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூரில் செல்லப்பிராணிகளுக்கான அந்திமக்காலப் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. படிப்படியாக அது அதிகரிக்க வேண்டும்,” என்று பரமேஸ்வரி கூறினார்.
சிங்கப்பூரில் செல்லப்பிராணிகளுக்கான தனிப்பட்ட அந்திமக்காலப் பராமரிப்பு நிலையம் இல்லை. “பெரும்பாலானவர்கள் அவர்களின் செல்லப்பிராணி வாழ்வின் இறுதிக் கட்டத்தை நெருங்கும்போது அதை வைத்திருக்க விரும்புவதில்லை. செல்லப்பிராணி நோய்வாய்ப்பட்டிருந்தால் அதன் உயிர் இருக்கும்வரை இருக்கட்டும் என விட்டுவிடுகிறார்கள்,” என்று பரமேஸ்வரி சொன்னார்.
புற்றுநோய் போன்ற கடும் நோயால் பாதிக்கப்படும்போது சில உரிமையாளர்கள் கருணைக்கொலை முடிவை தேர்ந்தெடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“ஒரு விலங்கின் உயிர் எப்படிப் பிரிய வேண்டுமென்று உரிமையாளர்கள் முடிவு செய்யக்கூடாது. அதை முடிந்தளவிற்கு நன்கு பராமரிப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்,” என்றார் அவர்.
நோய்வாய்ப்பட்ட குருவை ஈராண்டுகள் வரை கவனித்தார் பரமேஸ்வரி. மூச்சுக்குழாய் அழற்சி என்பதால் பிராணவாயு செறிவு, காசநோய் மருந்துகளை சரியான நேரத்திற்கு அளிப்பது, மூச்சிழுப்பு மருந்து வழங்குவது போன்றவற்றைச் செய்து வந்தார்.
குருவின் மருத்துவச் செலவு மாதத்திற்கு கிட்டத்தட்ட $400லிருந்து $500 வரை ஆகும் என்ற பரமேஸ்வரி, சில உரிமையாளர்கள் அந்திமக்காலப் பராமரிப்பை பற்றி யோசிக்கும்போது செலவை நினைத்து தயங்குவதாகவும் பரமேஸ்வரி கூறினார்.

