‘சீட்ரியம்’ தங்க விருது உட்பட பல விருதுகளுடன் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் உன்னத மாணவியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார் 20 வயது அருள் ஜொகானா.
கடல்துறை, கடல்சார்ந்த தொழில்நுட்பப் பட்டயத்தில் நல்ல மதிப்பெண் வாங்கி ‘சீட்ரியம்’ தங்க விருதை வென்றுள்ளார் இவர்.
உயர் மதிப்பெண்கள் பெற்று கல்விக்கான உன்னத விருது, பணித்திட்டங்கள் பலவற்றில் சிறந்த முறையில் பங்காற்றி தலைமைத்துவ விருது, கடல்துறைப் புத்தாக்க விருது, சமூகச் சேவை விருது ஆகியவற்றையும் ஜொகானா வென்றுள்ளார்.
“இந்த விருதுகள் என் உழைப்புக்கும் கடப்பாட்டுக்கும் சான்று. இந்தப் பெருமை, என்னை வழிகாட்டியவர்களையும் ஆதரித்தோரையும் சேரும்,” என்று அவர் கூறினார்.
“கடல்துறைப் பணிக்கு அந்தத் துறைக்குரிய நிபுணத்துவத்துடன், சுற்றுச்சூழல் தூய்மைக்கான பொறுப்புணர்வும் அனைத்துலக விதிமுறையைப் பற்றிய புரிதலும் தேவை,” என்று அவர் கூறினார்.
அடுத்து, சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் வேதிப்பொறியியல் துறையில் பட்டக்கல்வியை மேற்கொள்ள உள்ள ஜொகானா, பெரிய கப்பல்களை உருவாக்கி உலக வர்த்தகத்திற்குப் பங்காற்றவும் விரும்புகிறார்.
சிறு வயதில் மலர்ந்த ஆர்வம்
கடற்துறையில் வேலை செய்யும் தம் தந்தையைப் பார்த்து வளர்ந்த ஜொகானா அந்தத் துறையின்மீது ஆசைப்படத் தொடங்கினார்.
“என் தந்தையின் வேலையிட சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக அழகான, பிரம்மாண்டமான கப்பல்களில் ஏறியது பசுமையாக என் நினைவில் உள்ளது,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
புதிய கப்பலின் அறிமுக விழா ஒன்றில் தம் தந்தை பங்கேற்றதைக் கண்ட மற்றொரு தருணத்தை ஜொகானா பகிர்ந்தார். “பெரிய கப்பல் ஒன்றைக் கடலுக்குள் செலுத்துவதற்கு எவ்வளவு ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் தேவைப்பட்டது என்பதைக் கண்கூடாய்க் கண்டபோது கடல்துறை மீதான என் ஆர்வம் மேலும் கூடியது,” என்றார் இந்த இளையர்.
மருத்துவத் துறையையும் பரிசீலித்த ஜொகானா கப்பல்துறை நிறுவனம் ஒன்றில் ஆறு மாத வேலைப் பயிற்சியை மேற்கொண்ட பின்னர் தமது விருப்பம் கடற்துறையில்தான் உள்ளது என்பதை உணர்ந்தார்.
“அலைகடலில் கப்பல் ஒன்றைச் செலுத்துவதில் உள்ள நுணுக்கங்கள், சவால்மிக்க சூழலில் இயங்குவதற்கான வாய்ப்புகள், புதுமையான தொழில்நுட்பம் ஆகியவை கடல்துறையைப் பற்றி எனக்குப் பிடித்த அம்சங்கள்,” என்றார் ஜொகானா
வேலைப் பயிற்சியின்போது படகுகளைக் கரையோரத்தில் கட்டுவது, துறைமுகத்தில் கப்பல்களை நிறுத்துவது, பரிசோதனை செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஜொகானா ஈடுபட்டார்.
“கப்பல் கட்டுதலுக்கான தளத்தில் நான் பெற்ற அனுபவ அறிவும் வடிவமைப்புப் பற்றிய கற்றலும் பயனுள்ளவை,” என்றார் அவர்.
பெண்ணுக்கு என்றும் பெருமை
“கடல் துறைக்கு பெண்கள் அதிகம் வருவதில்லை. எனினும் தற்போது இத்துறையில் பெண்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது,” என்றார் ஜொகானா.
விரும்பிய துறையில் ஈடுபடுவதற்கு பாலின பேதம் தடையாக இருக்கக்கூடாது என்பதை கடல்துறைக்கு வந்த பிறகு மேலும் உணர்ந்ததாக ஜொகானா கூறினார்.
“இத்துறையில் பெண்கள் பலர் தலைமைத்துவப் பொறுப்புகளில் உள்ளனர். தொடக்கத்தில் அவர்களும் என்னைப் போன்ற மனப்போக்குடன் இத்துறைக்குள் நுழைந்தவர்கள் என அறிந்தேன். உழைப்பு, மன உறுதி, நம்பிக்கை ஆகியவற்றால் எதுவும் சாத்தியம் என்பதை அவர்கள் எனக்குக் கற்பித்தனர்,” என்று அவர் கூறினார்.