சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் இளையர் அணி ஏற்பாடு செய்த தலைமைத்துவ மாநாடு, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ‘யுனிவர்சிட்டி டவுன்’ல் ஜூன் 14 முதல் ஜூன் 16 வரை நடைபெற்றது.
17 வயது முதல் 25 வயது வரையிலான தொடக்கக் கல்லூரி, பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழகம் போன்றவற்றில் பயிலும் மாணவர்கள், முழுநேரப் பணியில் இருக்கும் இளையர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கெடுத்தனர்.
இவ்வாண்டின் புதிய அங்கமாக, மெய்நிகர் வழியாக மனநலத்தைப் பற்றி பங்கேற்பாளர்கள் கற்றுக்கொண்டனர்.
மாநாட்டின் முதல் நாளில், இளையர்கள் தாங்கள் பெற்றுள்ள நற்பெயரைப் பற்றி புரிந்துகொள்வதற்கான அங்கம் இடம்பெற்றது.
தற்போதைய சமூகத்தின் பிரச்சினைகளை இளையர்கள் புரிந்துகொள்ளும் வகையில், ’கிரீன் நட்ஜ்’, ’ஹோப் இனிஷியேட்டிவ் அலயன்ஸ்’ போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு மாநாட்டின் இரண்டாம் நாளில் இளையர்களுக்குக் கிடைத்தது.
இதில், வசதி குறைந்த சிறுவர்கள், மனவளர்ச்சி குறைந்தவர்கள், முதியவர்கள் ஆகியோருக்கும் சுற்றுச்சூழலுக்கும் பங்கேற்பாளர்கள் உதவினர்.
மாநாட்டின் மூன்றாம் நாளில் இளையர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிற்கும் குறிப்பிட்ட சமூக அமைப்பு அளிக்கப்பட்டது. அந்த அமைப்பு எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அதற்கான தீர்வுகளையும் பங்கேற்பாளர்கள் ஆராய்ந்து பகிர்ந்துகொண்டனர்.
இந்த அங்கம், பங்கேற்பாளர்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கவும், நுண்ணறிவு, உணர்ச்சிகள், அனுபவங்களைப் பகிர்வதற்கான தளமாகவும் இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிண்டா செயலவைக் குழுவின் துணைத் தலைவரான திரு சர்ஜித் சிங் கலந்துகொண்டார்.
“இளையர்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த, கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்பதை இம்மாநாடு மூலம் புரிந்துகொள்கிறார்கள்,’’ என்று சிண்டா இளையர் அணியின் தலைவர் யுவன் மோஹன் தெரிவித்தார்.
மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த சிங்கப்பூர் பல்கலைக்கழக மாணவியான கெஜ ஸ்ரேயா ராஜ்குமார், 20, “மிகவும் கவனமாகத் திட்டமிட்டு, அனைத்து தலைமைத்துவக் குணங்களையும் வளர்ப்பதற்கான களமாக இம்மாநாட்டை நடத்தப் பாடுபட்டோம்,“ என்று கூறினார்.
அண்மையில் ‘ஏ’ நிலைத் தேர்வு முடித்து தேசிய சேவையில் சேரவிருக்கும் ஹரிஷ் கார்த்திக், 19, “புதியவர்கள் பலரைத் தெரிந்துகொள்ள முகாம் ஒரு வாய்ப்பாக அமைந்தது,” என்றார்.
“இளையரிடம் சிந்தனைகளை வளர்க்கவும், தலைமைத்துவப் பண்புகளைக் கற்றுக்கொள்ளவும் ஊக்குவிப்பதே மாநாட்டின் நோக்கம்,” என்றார் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரான, திட்ட மேலாளராகப் பணிபுரியும் திவாகரன் கேசவன், 26.
பேசத் தயங்கியவர்களுக்கு நம்பிக்கை அளித்து, அவர்களைப் பேச வைப்பது சவாலாக இருந்தது என்றார் கடந்த ஆறு ஆண்டுகளாக சிண்டாவின் பல நடவடிக்கைகளில் தொண்டூழியராக இருந்து வரும் திவாகர் கேசவன்.

