தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிந்தைக்கு விருந்தாக அமைந்த ‘உத்ரா 2024’

2 mins read
1d7e3615-49ff-4619-b4a3-2de093cf1922
ஜூன் 29 தேதி நடந்தேறிய ‘உத்ரா 2024’. - படம்: கிரிஷ்மிதா ஷிவ் ராம் 

காட்டில் இருக்கும் ஒவ்வொரு விலங்கின் தன்மையையும் மனித குணத்தோடு ஒப்பிட்டு, பார்வையாளர்கள் சிந்தனைக்கு விருந்தாக அமைந்தது இவ்வாண்டின் ‘உத்ரா’.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றம் கடந்த ஜூன் 29ஆம் தேதி ‘உத்ரா’ நிகழ்ச்சியைப் படைத்தது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் எட்டு மாதங்களுக்கு முன்னர் தொடங்கின. அந்த உழைப்பின் பலனாக ‘உத்ரா’ வெற்றிகரமாக நடந்தேறியது.

‘ஆரண்ய காண்டம்’ என்ற தலைப்பைக் கொண்ட இவ்வாண்டின் உத்ரா நிகழ்ச்சி, ஒரு காட்டையும் அங்கே வாழும் விலங்குகளையும் பார்வையாளர்களின் கண்முன் கொண்டு வந்தது.

‘உத்ரா’ இயக்குநர்கள் காட்டு விலங்குகளை மையமாகக் கொண்டு, காட்டையும் வாழ்வியல் பண்புகளையும் தொடர்புபடுத்தி நாடகத்தை உருவாக்கினர்.

உண்மை, வஞ்சகம், லட்சியம், பதவி ஆசை போன்றவற்றை வெளிக்கொணரும் கதைக்களத்துடன் நாடகம் அமைந்தது.

அதுவரை கற்பனை வடிவமாக இருந்தது, பின்னர் மேடையேறியபோது அனைவருக்கும் மனநிறைவு அளிக்கும் வகையில் அமைந்ததாக நாடக இயக்குநர்கள் குறிப்பிட்டனர்.

‘ஆதிரா’ கதாபாத்திரத்தில் நடித்த ரிஷி பாபு, தனது முதல் மேடை அனுபவம் இது என்றார்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தின் முன்னாள் மாணவர்கள் தனக்குப் பேருதவியாக இருந்ததாகவும் பல்வேறு சவால்களுக்கிடையே அனைவரும் துணிந்து செயல்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேடையேறியபோது தன் பயத்தைப் போக்கும் வாய்ப்பும் தனக்குக் கிட்டியதாக ரிஷி பாபு குறிப்பிட்டார்.

நாடகத்தில் வேழினியாக நடித்த டி வைஷ்ணவி, “இங்கு எனக்குக் கிடைத்த நட்புதான் எனக்கு மிகப் பெரிய படிப்பினை. சோர்ந்து போகாமல் இந்தச் சவால்மிக்க பயணத்தை நாம் ஒற்றுமையாக எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பதை நான் கற்றுக்கொண்டேன்,” என்று கூறினார்.

சமூகப் பண்புகளை, காட்டுப் பின்னணியுடன் விலங்குகளின் வாயிலாக உணர்த்துவது எளிதன்று. ஆயினும், ஒவ்வொரு நடிகரும் தாம் உணர்த்த வேண்டிய விலங்கின் இயல்பை நன்கு உள்வாங்கிக்கொண்டு திறம்பட நடித்திருந்தனர்.

குறிப்புச் சொற்கள்