‘நீதிமன்றத்தில் ஒரு நாள்’

‘நீதிமன்றத்தில் ஒரு நாள்’

2 mins read
5e1945b1-d63e-4881-b4e2-9bbe16c8046c
கருத்தரங்கில் கலந்துரையாடும் மாணவர்கள். - படம்: சுந்தர நடராஜ்
multi-img1 of 2

அரசு நீதிமன்றங்களால் உயர்நிலை 3 மாணவர்களுக்காக ஒவ்வோர் ஆண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் ‘நீதிமன்றத்தில் ஒரு நாள்’ கருத்தரங்கு, இவ்வாண்டு ஜூலை 4ஆம் தேதி நடைபெற்றது.

நீதிமன்றங்களின் பங்கு, அவை மேற்கொள்ளும் பணிகள், நீதி அமைப்பின் வெவ்வேறு கூறுகள் ஆகியவற்றைப் பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஊட்டும் வகையில் கடந்த 11 ஆண்டுகளாக இந்தக் கருத்தரங்கு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாண்டு 24 உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 178 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மாறிவரும் சமூகச் சூழலையும் இளையர்களின் அன்றாட பயன்பாட்டுப் பழக்கவழக்கங்களையும் ஒட்டி நடைபெற்ற இந்தக் கருத்தரங்கு, துன்புறுத்தலையும் குறிப்பாக இணைய மிரட்டலையும் கருப்பொருளாகக் கொண்டிருந்தது.

மின்னிலக்கமயமாகும் நமது சமுதாயத்தில் இணைய மிரட்டல் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனை மையக் கருத்தாகக் கொண்டு, இணைய மிரட்டல் சம்பவங்கள் குறித்த தகவல்களும் அவற்றைக் கையாளும் உத்திகளும் மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டன.

இவ்வாண்டு நீதிமன்ற அறையை நேரில் பார்வையிடவும் மாணவர்களுக்‌கு முதன்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டது. ​​நீதிமன்ற அறையின் அமைப்பைப் பற்றியும் அதில் பணிபுரியும் வெவ்வேறு நீதிமன்ற அதிகாரிகளின் பணிகளைப் பற்றியும் மாணவர்கள் அறிந்துகொண்டனர்.

அரசு நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியான வின்சென்ட் ஹூங், நீதிமன்றங்கள் செய்யும் பணிகளைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தைத் தமது வரவேற்புரையில் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியின் மற்றோர் அங்கமாக மாவட்ட நீதிபதிகள் பிரையன் ஓங், பீட்டர் லோ ஆகியோருடன் மாணவர்கள் கலந்துரையாடினார்கள். சட்ட வல்லுநர்களுடன் தொடர்புகொள்ளவும் பல்வேறு வழக்குகளைக் கையாண்ட அனுபவங்களை அறிந்துகொள்ளவும் ஓர் தனித்துவமான வாய்ப்பாக இக்கலந்துரையாடல் மாணவர்களுக்‌கு அமைந்தது.

கருத்தரங்கில் பங்கேற்ற செயிண்ட் பேட்ரிக்ஸ் உயர்நிலைப்பள்ளி மாணவர் சயந்தன் ஜதுரிசன், 15, எதிர்காலத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிய ஆர்வம் கொண்டுள்ளார்.

“இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நீதிமன்றத்தையும் சட்ட அதிகாரிகளையும் நேரடியாகப் பார்த்தபோது என்னுள் இருந்த கனவு மேலும் தூண்டப்பட்டது,” என்றார் அவர்.

மேலும், “இந்நிகழ்வில் வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் குழுக்களாக இணைக்கப்பட்டிருந்ததால் எனக்குப் புதிய நண்பர்கள் கிடைத்துள்ளனர்,” என்றார் சயந்தன்.

காமன்வெல்த் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 15 வயது ஹரிஷ் ஸ்ரீராம், நேரடி மிரட்டலும் இணையவழி மிரட்டலும் மாணவர்களிடையே அதிகம் நிலவும் இன்றைய காலகட்டத்தில், அவற்றை எவ்வாறு சமாளிப்பது, எப்போது உதவிக்காக நீதிமன்றத்தை நாடுவது போன்ற முக்கியத் தகவல்களைத் தான் அறிந்துகொண்டதாகச் சொன்னார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய சிறப்பு சேவைகளுக்கான மையத்தின் துணை இயக்குநரும் முன்னணி நீதிமன்ற ஆலோசகருமான வனிதா கணேசன், 47, எதிர்காலத்தில் சட்டத்துறையில் பணிபுரிய விரும்பும் மாணவர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள இளம் வயதிலிருந்தே சட்டத்தைப் பற்றிப் படிக்கத் தொடங்கவேண்டும் என்றார்.

“சட்டத் துறையில் வழக்கறிஞர், நீதிபதி பணிகளைத் தவிர பல்வேறு வாய்ப்புகள் இருப்பதால் மாணவர்கள் தங்களுக்கு மிகவும் பொருத்தமான வேலையைத் தேர்ந்தெடுக்‌கலாம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்