இளையர்களுக்கென தமிழ் முரசு ஏற்பாடு செய்த கருத்தரங்கு

3 mins read
69786c60-dea1-40fe-bd92-8adf8657419d
வாசகர், வளர்ச்சி ஆசிரியர் எஸ்.வெங்கடேஷ்வரன் (இடக்கோடி) வழிநடத்திய குழுக் கலந்துரையாடலில் இளையர்கள் தங்களின் கருத்துகளை முன்வைத்தனர். - படம்: த.கவி
multi-img1 of 4

செய்திகளை இக்கால இளையர்கள் அறிந்துகொள்ளும் முறை, அவர்களிடையே காணப்படும் தமிழ்மொழிப் புழக்கம், அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பும் தகவல்கள் உள்ளிட்டவை முற்றிலும் மாறியுள்ளன.

இதுகுறித்து ஆராய்வதற்காக கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றுக்கு தமிழ் முரசு ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ் முரசின் 89ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கடந்த ஜூலை 6ஆம் தேதி இந்திய மரபுடைமை நிலையத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ் முரசின் இளம் செய்தியாளர்களுடன் வாசகர், வளர்ச்சி ஆசிரியர் எஸ்.வெங்கடேஷ்வரன் வழிநடத்திய இந்நிகழ்ச்சியில், ஏறத்தாழ 30 இளையர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி அறியும் தளங்கள்

மிக நீளமான செய்திகளைப் படிக்கும் ஆர்வம் தங்களுக்கு அதிகம் இல்லை எனக் கூறிய இளையர்கள், செய்திகளைப் பெரும்பாலும் சமூக ஊடகங்களின் வழி தெரிந்து கொள்வதாகத் தெரிவித்தனர்.

டிக்டாக், இன்ஸ்டகிராம் தளங் களில் வெளிவரும் குறுங்காணொளிகள் மூலம் அறிந்துகொள்வதாகவும் கூறினர்.

சிலர் வார இறுதி நாள்களில் மட்டும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருப்பதாகத் தெரிவித்தனர். டெலிகிராம், வாட்ஸ்அப் தளங்கள் மூலமும் செய்திகளை இளையர்கள் படிப்பதாகத் தெரிய வந்தது.

பெரும்பாலானோர் செய்தி தொடர்பான செயலிகளைப் பயன் படுத்தினாலும், அவற்றில் வரும் செய்தி அறிவிப்புகள் (push notifications) மூலம் செய்தியை அறிந்துகொள்வதே போதுமானது என்று கூறினர். ஒரு செய்தியின் சுருக்கமான இரு வரி அறிவிப்பே இந்த செய்தி அறிவிப்புகளின் அம்சம்.

இக்கருத்தரங்கில் பங்கேற்றோர், இளம் செய்தியாளர்களுடனும் செய்தி ஆசிரியர்களுடனும் கலந்துரையாடி, ஒரு செய்தி உருவாகும் முறை குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

தன் பெற்றோர் இருவரும் தமிழ் முரசு வாசகர்கள் எனக் கூறிய குளோபல் இந்தியன் பள்ளி மாணவர் ரிதேஷ் யாஹாஸ், 14, காகித வடிவில் செய்தித்தாளை வாசிக்கும் பழக்கம் தனக்கு அதிகம் இல்லை என்றார்.

“இருப்பினும் சமூக ஊடகங் களின்வழி ஒரு செய்தி நிறுவனம் இளையர்களைச் சென்றடையும் முயற்சியில் ஈடுபடுவது சிறப்பு,” என்று பாராட்டினார் அவர்.

எதிர்பார்ப்புகள்

தகவல்களுடன் கூடிய சற்றே பொழுதுபோக்காக அமைந்த செய்தி களையும் மொழிப் பயன்பாடு தொடர்பான செய்திகளையும் தாங்கள் அதிகம் எதிர்பார்ப்பதாக இளையர்கள் கூறினர்.

எழுத்துத் தமிழில் எல்லாச் செய்திகளும் அமைந்திருந்தால் புரிந்துகொள்ள சிரமமாக இருப்பதாகச் சொன்ன இளையர்கள், அவற்றுக்கு மொழிபெயர்ப்பு அம்சத்தை வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்றனர்.

செய்திகளில் படங்கள் அதிகம் இருந்தால் கண்களுக்கு விருந்தாக இருக்கும் என்றும் கூறினர்.

செய்தி தொடர்பான காணொளிகள் பேச்சுத் தமிழில் இருப்பதால் செய்தியை அறிந்திட எளிதாக இருப்பதாகத் தெரிவித்தனர்.

தமிழ் மீது ஆர்வம் இருப்பதால் அதனை மேம்படுத்திக்கொள்ள அன்றாடம் ஒரு பழமொழி, தமிழ்மொழிச் சொற்களைக் கொண்டு விளையாடும் இணைய விளையாட்டுகள், பகடித் தொடர்கள் போன்றவை வெளிவர வேண்டும் எனத் தங்களின் எதிர்பார்ப்புகளை முன்வைத்தனர்.

பொதுவாக, குற்றப் பின்னணி யுடைய கதைகள், வரலாற்றுக் கதைகள் ஆகியவற்றை வலையொலியாகக் கேட்கத் தங்களுக்கு விருப்பம் என்றும் கூறினர்.

தங்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்த கேள்வி பதில் அங்கம், படிப்பு மற்றும் பணித் தொடர்பான துறைகள், வாய்ப்புகள், நிகழ்வுகள் குறித்த உடனடி தகவல்களைப் பெற விரும்புவதாகவும் கூறப்பட்டது.

தனது சிந்தனைகளைப் பற்றியும் தமிழில் பேசத் தடைகளாக இருக்கும் காரணங்கள் குறித்தும் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை இந்தக் கலந்துரையாடலில் பெற்றது தனக்கு உற்சாகமளிப்பதாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவி ஸ்ருதி முரளிகுமார் கூறினார்.

“எங்களிடம் கேட்டறிந்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இனி இடம்பெறவிருக்கும் புதுமையான நடவடிக்கைகளையும் நிகழ்ச்சிகளையும் காண ஆவலாக உள்ளது,” என்றார் அவர்.

இளையர்களின் மொழிப் பயன்பாட்டை வளர்க்க தமிழ் முரசு உழைப்பது பாராட்டுதலுக்குரியது என்றும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் இளையர்களுக்கெனக் கலாசார அனுபவங்களைத் தரும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.

இதுபோன்ற மேலும் பல கலந்துரையாடல்களை நடத்தி மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கேட்டறிய வேண்டும் என்று கு விக்னேஷ் குமார், 32, கேட்டுக்கொண்டார்.

“இளையர்கள் மொழிப் பயன்பாடு தொடர்பில் வெவ்வேறு சிரமங்களைச் சந்திக்கலாம். அவற்றைக் குறித்துப் பேச, ஒரு சிறந்த தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம்,” என்றார் விக்னேஷ் குமார்.

எங்களிடம் கேட்டறிந்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இனி இடம்பெறவுள்ள தமிழ் முரசின் புதுமையான நடவடிக்கைகளையும் நிகழ்ச்சிகளையும் காண ஆவலாக உள்ளது.
ஸ்ருதி முரளிகுமார்
குறிப்புச் சொற்கள்