இளையர் பார்வையில் தேசிய தினப் பேரணி உரை

இளையர் பார்வையில் தேசிய தினப் பேரணி உரை

3 mins read
e799337d-81b8-495b-9c3c-c259e52b0d44
தேசிய தினப் பேரணி உரை ஆற்றிய பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 4

பிரதமர் லாரன்ஸ் வோங் ஆகஸ்ட் 18ஆம் தேதி ஆற்றிய தமது முதலாவது தேசிய தினப் பேரணி உரையில் பலதரப்பட்ட மக்களுக்கு ஏற்ற புதிய கொள்கைகளை அறிவித்தார். இதுகுறித்து இளையர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இவ்வார இளையர் முரசு அறிந்துவந்தது.

ஒற்றையருக்கும் முன்னுரிமை

“நான் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அடுத்த ஆண்டிலிருந்து ஒற்றையர் தங்கள் பெற்றோருடன் அல்லது அவர்களின் வீட்டுக்கு அருகில் பிடிஓ வீடு வாங்கும்போது திருமணமான தம்பதியர் பெறும் அதே முன்னுரிமைச் சலுகையைப் பெறுவார்கள் என்று பிரதமர் வோங் கூறியபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சிலர் திருமணம் செய்துகொள்ள விரும்பாத நிலையில் வீடு வாங்க எண்ணும் அவர்களுக்கு இந்த அறிவிப்பு ஆறுதலாக இருக்கும்,” என்று அரசாங்க ஊழியர் பிரித்திகா, 25, சொன்னார்.

விளையாட்டுத் துறைக்கு ஏற்றம்

“நான் விளையாட்டுகள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளேன். முழுநேரப் பணியாக நான் விளையாட்டுகளைத் தேர்ந்தெடுக்கவுள்ளேன். பிரதமர் வோங் தேசிய தினப் பேரணி உரையில் பேசியது எனக்கு ஊக்கமளித்தது. சிங்கப்பூரில் விளையாட்டுத் துறை பேரளவில் வலுவடைவதை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,” என்று மாணவர் கிஷன் குமார், 18, கூறினார்.

கலைகளுக்கு முக்கியத்துவம்

“இளம் கலைஞர்களை மேலும் வளர்ப்பதற்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவம் அளிக்‌க முயற்சிப்பது சிறப்பு என்று நினைக்கிறேன். சிறுவயதிலிருந்தே காட்சிக் கலைகள்மீது எனக்‌கு அதிக ஆர்வம் இருந்தாலும் அதை முழுநேரத் தொழிலாகத் தேர்ந்தெடுக்‌க வேண்டாம் என்றும் அதை ஒரு பொழுதுபோக்காக மட்டும் கருதலாம் என்றும் பலரும் என்னிடம் சொன்னார்கள். சிங்கப்பூர் கலைப் பல்கலைக்கழகத்திற்கு அதிக நிதியும் மனிதவளத்தையும் வழங்குவதன் மூலம் மாணவர்களுக்கு பல வாய்ப்புகள் வழங்கப்படும் என்று நான் நம்புகிறேன்,” என்று லாசால் கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவி சம்யுக்‌தா வெங்கடேசன், 23, சொன்னார்.

புதுப் பெற்றோருக்கு நம்பிக்கை

குழந்தை பெற்றுக்கொள்ளும் தாயாருக்குத் தற்போது 16 வார விடுப்பும் தந்தைக்கு நான்கு வார விடுப்பும் சம்பளத்துடன் வழங்கப்படுகிறது. அந்த 20 வாரங்களுக்குரிய சம்பளத்தையும் அரசாங்கமே வழங்குகிறது.

இந்நிலையில், விடுப்புக் காலம் கூடுதலாக்கப்பட்டால் குழந்தைகளைப் பற்றிய பதற்றமும் கவலையும் குறையும் என்று இரண்டு இளம் பிள்ளைகளுக்குப் பெற்றோரான துர்கா எட்டிக்கன், சுடேஷ் கங்காதரன் தம்பதியர் தெரிவித்தனர்.

முதல் குழந்தை பிறந்ததை அடுத்து வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கும்போது சிரமமாக இருந்தது என்று வசதிகள் மேலாண்மை நிர்வாகி சுடேஷ் கங்காதரன், 39, தெரிவித்தார்.

“குழந்தை பிறந்த பிறகு கணவர் பக்கத்தில் இருப்பது மனைவிக்கு ஒருவித நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். குழந்தைப் பிறப்புக்குப் பிறகு ஒரு பெண்ணுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தத்தையும் கணவர் துணையுடன் சமாளிக்கலாம்,” என்றார் அனுபவச் சேவை இயக்குநராகப் பணியாற்றும் 39 வயது திருவாட்டி துர்கா.

புதிய கொள்கையால் இளம் பெற்றோர் பலர் ஓரிரு பிள்ளைகளுடன் நிறுத்திக்கொள்ளும் எண்ணத்தைக் கைவிடலாம் என்று திருவாட்டி துர்கா கூறினார்.

பதிவுத் திருமணத்தை 2017ஆம் ஆண்டு முடித்து 2021ல் பாரம்பரிய முறையில் திருமணம் செய்துகொண்ட ஜேஸ் வி.ஸி, பிரியதர்ஷினி தம்பதியருக்கு 2023ல் குழந்தை பிறந்தது.

32 வயது திருவாட்டி பிரியதர்ஷினி தாதியாகப் பணிபுரிகிறார்.

“குழந்தை புதிதாகப் பிறக்கும்போது பெற்றோர் இருவருக்குமே தங்கள் வாழ்க்கையில் பேரளவிலான மாற்றங்கள் ஏற்படுகின்றன. பிள்ளைப்பேறு விடுப்பின் நீட்டிப்பால் தாயார் தமது நலனை மேலும் நன்குப் பேணிக்காக்க அதிக நேரம் பெறுவார். உடல் அளவிலும் மனதளவிலும் புதிய தாயார்கள் தங்களைச் சமநிலைப்படுத்திக் கொள்வதற்கு இந்தக் காலகட்டம் உதவுகிறது,” என்று யோகாசன ஆசிரியரான 33 வயது திரு ஜேஸ் தெரிவித்தார்.

புதிதாகப் பிறந்த குழந்தைக்குப் பெற்றோரின் நேரம் கூடுதலாகக் கிடைப்பது மொத்த குடும்பத்திற்கும் மேம்பட்டதொரு நிலை என்று 34 வயது வங்கியாளர் ஆனந்த ராஜா கூறினார்.

“சிங்கப்பூரிலுள்ள பாலின சமத்துவத்திற்கு இது பேருதவியாக உள்ளது. அனைவரும் உள்ளடங்கிய முன்னேற்றும் சிங்கப்பூர்க் கொள்கையில் பாலின சமத்துவம் சார்ந்த இந்தக் கொள்கை, சிறந்ததொரு கொள்கையாகும்,” என்றார் திரு ஆனந்த ராஜா.

திருமணமான இவருக்குத் தற்போது பிள்ளைகள் இல்லை. ஆயினும், இந்தப் புதிய கொள்கையால் இனி பிறக்கும் குழந்தையைத் தாமும் தம் மனைவியும் நிம்மதியுடன் வரவேற்பதை நினைத்து மகிழ்வதாகக் கூறினார் அவர்.

“பெற்றோருக்கான 10 வார குழந்தைப்பேறு பகிர்வு விடுப்புத் திட்டம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. எனக்கு அண்மையில்தான் திருமணமானதால் எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள நானும் என் மனைவியும் திட்டமிடும்போது இந்தத் திட்டம் எங்களுக்குப் பெரிதும் கைகொடுக்கும். பலரும் குழந்தை பெற்றுக்கொள்ள தயங்கும் இந்நேரத்தில், இந்த திட்டம் ஒரு மாற்றத்தை உண்டாக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்றார் பொறியாளராகப் பணியாற்றும் சாய் அவினாஷ், 28.

குறிப்புச் சொற்கள்