மாணவர் உருவாக்கிய தமிழுக்கான ‘ஏஐ’ தளம்

மாணவர் உருவாக்கிய தமிழுக்கான ‘ஏஐ’ தளம்

படம்: கணேஷ் ஹரிஹரசுதன்

22 Jun 2026 - 6:00 am

2 mins read

சிங்கப்பூர் கல்வி அமைச்சின் பாடத்திட்டத்திற்கு ஏற்ப தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தனித்துவமான செயற்கை நுண்ணறிவுத் தளத்தை 16 வயது ஹரிஹரசுதன் உருவாக்கியுள்ளார்.

மொண்ட்ஃபர்ட் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை 4ல் பயின்று வரும் கணேஷ் ஹரிஹரசுதன் ஈராண்டுகளுக்கு முன்னர் அந்தத் தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். ஐந்து மாதங்களுக்கு முன்பு மேம்படுத்தப்பட்ட தளம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது.

‘ஹரி தமிழ் நிலா’ என்ற அத்தளம், மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சிறந்த தமிழ் மொழி உதவியாளராக இருக்கும் என்பது ஹரியின் நம்பிக்கை.

தமிழை முதன்மையாகக் கொண்ட கட்டமைப்பு

பல செயற்கை நுண்ணறிவு பேசுசெயலிகள் (Chatbots) ஆங்கிலத்தை முதன்மை மொழியாகக்கொண்டு இயங்கும் நிலையில், இந்தத் தளம் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் முறையைப் பின்பற்றாமல், நேரடியாகத் தமிழிலேயே சிந்தித்துச் செயல்படும் வகையில் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதனால், இலக்கணப் பிழைகள் குறைந்து, தளத்தில் பயன்படுத்தப்படும் தமிழ் மொழியின் தரம் உயர்ந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கும் தமிழ் மொழிக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதே ஹரிஹரசுதனின் முக்கிய நோக்கம்.

பாடத்திட்டத்திற்கு ஏற்ற சிறப்பம்சங்கள்

‘ஹரி தமிழ் நிலா’ தளத்தில் புதியவற்றை கற்கலாம், உருவாக்கலாம், வழிகாட்டுதல் பெறலாம்.

எளிமையான உரையாடல்கள் முதல் கவிதை, கட்டுரை, பாடல், தேர்வுக்கான வினாத்தாள்களையும் இந்தத் தளத்தின் மூலம் உருவாக்கலாம்.

திருக்குறள், பழமொழிகள், இரட்டைக்கிளவி போன்ற பல தமிழ் இலக்கண, இலக்கியக் கூறுகள் தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் அன்றாடம் தொடர்ந்து கற்பதை ஊக்குவிக்க ‘ஸ்ட்ரீக்’ (Streak) முறையும் அவர்களின் திறனை மதிப்பிட தரவரிசை முறையும் தளத்தின் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

“சில நேரங்களில் என் தமிழ் அறிவை மேம்படுத்தவும், குறிப்பாகக் கருத்துக்களம், சுருக்கி வரைதல் போன்ற பகுதிகளைப் பயிற்சி செய்யவும் நான் இச்செயலியைப் பயன்படுத்துவேன்,” என்றார் ஹரி.

வளர்ச்சியும் அங்கீகாரமும்

தொடங்கப்பட்ட முதல் மாதத்தில் 36 ஆக இருந்த பயனர் எண்ணிக்கை ஐந்து மாதங்களில், 1,000க்கும் அதிகமாகக் கூடியுள்ளது.

தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சில் தனது புதிய தமிழ் செயற்கை நுண்ணறிவு பேசுசெயலி குறித்து விளக்கும் ஹரிஹரசுதன்.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சில் தனது புதிய தமிழ் செயற்கை நுண்ணறிவு பேசுசெயலி குறித்து விளக்கும் ஹரிஹரசுதன். - படம்: கணேஷ் ஹரிஹரசுதன்

தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு உட்பட பல அமைப்புகளோடு ஹரிஹரசுதன் தமது தளத்தைப் பற்றிப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஜிசிஇ ‘ஓ’ நிலைத் தேர்வுக்குத் தயாராகும் பரபரப்பான சூழலிலும், ‘ஹரி தமிழ் நிலா’ தளத்தை மேம்படுத்தவும் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் ஹரி.

தளம் மேலும் பலரைச் சென்றவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

எதிர்காலத்தில் கல்வி அமைச்சுடன் இணைந்து செயல்பட்டு, தமிழ் மொழி வகுப்புகளின் ஒரு பகுதியாக இத்தளத்தை சேர்ப்பதே அவரது இலக்கு.

குறிப்புச் சொற்கள்