சிறு வயதிலிருந்து எவருமே தனக்குப் பிடித்தவாறு முடிதிருத்தம் செய்யாததால் மற்றவர் விருப்பப்படி முடிதிருத்தம் செய்பவராக வேண்டும் என ஆறு வயதில் முடிவெடுத்தார் சுஜைஷ் குமார், 17. அதைப் பதினாறு வயதில் நனவாக்கியும் விட்டார்.
“தலைமுடியை அழகாகவும் திருத்தமாகவும் வெட்டுவது ஒருவரின் தன்னம்பிக்கையைப் பன்மடங்கு உயர்த்தும். பார்க்க அழகாக இருக்கிறோம் என்ற எண்ணம் உள்ளூர மகிழ்ச்சியளிக்கும்,” என்று தலையலங்காரத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டினார் சுஜைஷ்.
ஆறு வயது சுஜைஷ் பார்த்து வியந்த முதல் நிபுணர் அவர் வீட்டின் எதிரில் முடிதிருத்தும் நிலையத்தை நடத்துபவர்.
பள்ளிக்காலத்தில் நண்பர்கள் இணையத்தில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அதிகம் பார்த்து ரசிக்கும்போது, சுஜைஷ் எப்போதும் முடிதிருத்தம் செய்யும் காணொளிகளைப் பார்ப்பார்.
முடியை வெட்டுவதற்கான அடிப்படைத் திறனில் தொடங்கி பல்வேறு நுணுக்கங்களை இணையம் வழி கற்ற சுஜைஷ், 16 வயதில் நேரடியாகக் களத்தில் இறங்க முடிவெடுத்தார்.
“பெற்றோரிடம் வீட்டிலேயே செய்யப்போகிறேன் என்றேன். பல பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு சில காலத்துக்குப் பின் அதைக் கைவிடுவது எனக்கு வழக்கமாக இருந்தது. இதுவும் அதுபோலத்தான் என்று எண்ணி என் பெற்றோர் சம்மதித்தனர்,” என்றார் சுஜைஷ்.
தொடக்கத்தில் சுஜைஷை நம்பி தலையைக் கொடுக்க பலர் பயந்தனர். சில நண்பர்கள் அவர் பயிற்சிக்குக் கைகொடுக்க முன்வந்தனர்.
“பல மாதங்கள் காணொளிகளைப் பார்த்து கற்ற வித்தைகளைத் தலையில் காட்ட முழு வீச்சில் இறங்கிய கணத்தில்தான் உணர்ந்தேன், பார்க்க எளிதாக இருந்த பணி உண்மையில் எவ்வளவு கடினம் என்று. முதல் சில முயற்சிகளில் தோல்வியே கிட்டியது,” என சுஜைஷ் நினைவுகூர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
தொடர் பயிற்சியால் தேர்ச்சிபெற்ற முடிதிருத்துநர் ஆகியுள்ளார் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வர்த்தக தகவல் கட்டமைப்புத் துறையில் பயிலும் சுஜைஷ்.
முடித்திருத்தம் செய்வதில் சுஜைஷுக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. அதோடு கல்வியிலும் அவருக்கு இருந்த நாட்டம் குறையவில்லை என்பதால் சுஜைஷின் பெற்றோர் அவரது விருப்பத்துக்குத் தடைசொல்லவில்லை.
தொடக்கத்தில் முடிவெட்டுவதற்கு எட்டு வெள்ளியிலிருந்து பத்து வெள்ளி வரை கட்டணம் வாங்கிய சுஜைஷ், தற்போது இருபது வெள்ளிவரை வாங்குகிறார்.
மின்வணிகத் தளங்களிலிருந்து விலை குறைந்த கருவிகளை வாங்கி முடிதிருத்தம் செய்த சுஜைஷ், வாடிக்கையாளர்கள் அதிகரிக்க, பணம் சேர்த்து ஏறத்தாழ ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள முடிதிருத்தகத்தை வீட்டிலேயே அமைத்தார்.
டிக்டாக்கில் தமது சேவையைப் பகிர்ந்த சுஜைஷ், “எனது காணொளிகளைப் பார்த்துவிட்டு ஜோகூர் பாருவிலிருந்தும்கூட ஒருவர் முடிதிருத்தம் செய்ய வந்தார். அது மறக்க முடியாத ஒன்று,” என்றார்.
“தெலுக் பிளாங்காவில் உள்ள நான்கறை வீட்டின் வரவேற்பறையில் முடிதிருத்தகம் வைத்திருக்கிறேன். எனக்கென ஒரு தனி வேலை இருப்பது நம்பிக்கை தருகிறது. என் தேவைகளையும் என்னால் பார்த்துக்கொள்ள முடிகிறது,” என்றார் சுஜைஷ்.
குடியிருக்கும் வீட்டில் சிறுதொழில் செய்ய வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அனுமதிக்கிறது. நகர மறுசீரமைப்பு ஆணையத்திடம் அனுமதி பெறத்தேவையில்லை. ஆனால், வீட்டை முழுமையான வணிக இடமாக்கக்கூடாது. மேலும் அக்கம்பக்கத்தாருக்கு தொந்தரவாகவும் இருக்கக்கூடாது.
இப்போதெல்லாம் வாரத்திற்கு சராசரியாக இருபது பேர் வரை முடிவெட்ட சுஜைஷிடம் வருகின்றனர். “எனினும், கல்விதான் நீண்டகால வளர்ச்சிக்கு அவசியம் என்பதால் படிப்பில் இப்போது கூடுதல் கவனம் செலுத்துகிறேன்,” என்றார் சுஜைஷ்.
எந்தத் தொழிலானாலும் ஆர்வம் இருந்தால் அதைக் கற்றுத்தர பல தளங்கள் உள்ளன. கற்றதை வணிகமாக்க உரிய தளங்களைச் சரியான முறையில் பயன்படுத்தினால் முன்னேற்றம் கைவசமாகும் என்றார் சுஜைஷ்.
தன்னிடம் முடிதிருத்த வருபவர்களின் புன்னகைதான் தமக்குக் கிடைத்த பரிசு என்ற சுஜைஷ், எதிர்காலத்தில் ‘ஜைஷ் பிளென்ட்ஸ்’ முடிதிருத்தச் சேவையை தீவெங்கும் அமைக்கும் இலக்குடன் செயல்பட்டு வருகிறார்.