பலூன்களை உடைக்கும் இயந்திர மனிதர்கள், ‘வில்லன்’களின் படங்களை அடையாளம் கண்டு பந்து வீசும் இயந்திரங்கள், தடைகளைத் தாண்டும் தானியங்கி வாகனங்கள் எனத் தொழில்நுட்பத் திறன்களின் விருந்தாக அமைந்தது 2026 தேசிய இளையர் தொழில்நுட்பப் போட்டியின் மாபெரும் இறுதிச்சுற்று.
நான்காவது ஆண்டாக நடைபெற்ற இந்தப் போட்டி, இம்முறை புதிய பரிமாணத்துடன் அரங்கேறியது.
கடந்த மூன்று ஆண்டுகளாகச் செயற்கை நுண்ணறிவுத் திறன்மிக்க ஆளில்லா வானூர்திகளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இப்போட்டி, இந்த ஆண்டு நிலத்தில் இயங்கும் இயந்திர மனிதர்களைக் களமிறக்கி மாணவர்களின் திறன்களைச் சோதித்தது.
தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் கூகல் நிறுவனமும் இணைந்து சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆதரவோடு இந்தப் போட்டியை நடத்தின.
66 பள்ளிகளைச் சேர்ந்த 315 மாணவர்கள் இதில் பங்கேற்றனர். கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை இம்முறை 30 விழுக்காடு அதிகரித்துள்ளது.
தீவிரப் பயிற்சியும் புதிய கற்றலும்
போட்டிக்கு முன்னர் மாணவர்களுக்கு 42 மணி நேரம் நீடித்த செய்முறைப் பயிற்சி வழங்கப்பட்டது. இயந்திரவியல், ‘பைத்தன்’ குறியீட்டு மொழி, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுடன் தொடர்பான கூறுகளை மாணவர்கள் கற்றனர்.
அத்துடன் கூகலின் ‘ஜெமினை கோட் அசிஸ்ட்’ (Gemini Code Assist) தொழில்நுட்பத்தின் உதவியோடு, மாணவர்கள் மென்பொருள் குறியீடுகளை எளிதாக எழுதவும் தங்களின் தவறுகளை உடனுக்குடன் திருத்திக்கொள்ளவும் பயிற்சி பெற்றனர்.
சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பொங்கோல் வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) நடைபெற்ற மாபெரும் இறுதிச் சுற்றிலும் பரிசு வழங்கும் விழாவிலும் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இறுதிச் சுற்றில் விறுவிறுப்பாக வடிவமைக்கப்பட்ட நான்கு கட்டத் தடைகளை மாணவர்களின் ரோபோக்கள் கடக்க வேண்டியிருந்தது.
கடுமையான சவால்களுக்குப் பிறகு, சொங்ஹுவா உயர்நிலைப்பள்ளி வாகை சூடி மாபெரும் வெற்றியாளர் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
பிடோக் கிரீன் உயர்நிலைப்பள்ளி இரண்டாமிடத்தையும், யூசோப் இஷாக் உயர்நிலைப் பள்ளி மூன்றாமிடத்தையும், தெமாசெக் தொடக்கக்கல்லூரி உயர்நிலைப் பிரிவு நான்காமிடத்தையும் கைப்பற்றின. வெற்றிபெற்ற அணிகளுக்கு அமைச்சர் டெஸ்மண்ட் லீ பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
மாணவர்களிடையே உரையாற்றிய அமைச்சர், “செயற்கை நுண்ணறிவை ஒரு கற்றல் கருவியாகப் பயன்படுத்துங்கள்,” என்று அறிவுறுத்தினார்.
செயற்கை நுண்ணறிவு தவறுகளுக்கு அப்பாற்பட்டதன்று என்ற அவர், தொடர்ந்து கேள்விகளைக் கேட்டு விமர்சனச் சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்றார்.
ஒத்துழைப்பால் வெற்றி
போட்டியின் மாபெரும் இறுதிச்சுற்றுக்குத் தேர்வான 24 அணிகளில், 58 விழுக்காட்டு அணிகள் முதன்முறையாக இந்நிலையை எட்டியுள்ளன. சிறப்பாகச் செயல்பட்ட நான்கு அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
இப்போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்று நான்காமிடம் பிடித்த தெமாசெக் தொடக்கக்கல்லூரி அணியின் 16 வயது மாணவர் குழந்தைவேல் லோகசபரி, சிறுவயதிலிருந்தே தொழில்நுட்பத்தில் தமக்கு ஆர்வம் இருந்ததாகக் கூறினார்.
“இந்தப் போட்டியின் மூலம் இயந்திரக் கருவிகளைச் சரியாகப் பயன்படுத்துவது, அவற்றை மேம்படுத்துவது உள்ளிட்ட பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்,” என்றார் அவர்.
அணித்தலைவராகப் பொறுப்பேற்ற லோகசபரி, ஒவ்வொருவரின் கருத்துக்கும் மதிப்பளித்து, அனைவரின் யோசனைகளையும் ஆராய்ந்து, சிறந்த முடிவுகளை எடுத்ததால்தான் இறுதிவரை முன்னேற முடிந்ததாகச் சொன்னார்.
எதிர்காலத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் செயற்கை நுண்ணறிவு முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால், இந்தப் போட்டியில் கிடைத்த அனுபவம் தங்களுக்கு பெரிதும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இன்றைய இளையர்கள் செயற்கை நுண்ணறிவை சமூக ஊடகங்கள் வழியாகப் பார்க்கிறார்கள். ஆனால் அதை நேரடியாகப் பயன்படுத்திப் பழகும் வாய்ப்பு இந்தப் போட்டியின் மூலம் எங்களுக்குக் கிடைத்துள்ளது,” என்றார் அவர்.
தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகப் பங்கேற்று வரும் உட்லண்ட்ஸ் உயர்நிலைப் பள்ளி இம்முறை முதல்முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
“கடந்த காலங்களில் கிடைக்காத வெற்றி இந்த முறை எங்கள் விடாமுயற்சியால் சாத்தியமானது. எங்கள் குழுவில் வெவ்வேறு பின்னணிகள், பலதரப்பட்ட சிந்தனைகள், தனித்துவமான திறன்கள் கொண்ட மாணவர்கள் இருந்தனர்.
“நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் இருந்த வேறுபாடுகளைக் களைந்து ஒரே இலக்கை நோக்கிப் பயணித்தோம்,” என்று அணியைச் சேர்ந்த 17 வயது இனியா பக்கிரிசாமி குறிப்பிட்டார்.
ஒரு குழுவாக இணைந்து எவ்வாறு செயல்படுவது என்பதை இந்தப் போட்டி தமக்கு கற்றுக் கொடுத்ததாக அதே அணியைச் சேர்ந்த 14 வயது ஹிரித்திக் ஷான் வி ஜே கூறினார். “எங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அடுத்த ஆண்டு மேலும் சிறப்பாக செயல்படுவோம்,” என்றார் அவர்.
இறுதிச்சுற்றுக்கு தேர்வான ஹாய் சிங் கத்தோலிக்கப் பள்ளி அணியின் 14 வயது பால்சந்தானி பிரபீர் ராஜீவ் குழுப்பணியின் அவசியத்தை வலியுறுத்தினார்.
“தொழில்நுட்பத்தின் மீதான அதீத ஆர்வமே எங்களை ஒன்றிணைத்தது. எங்களுக்குப் பெரிய அளவில் முன் அனுபவம் இல்லாவிட்டாலும், ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருந்து, ஆளுக்கொரு பலத்தைப் பயன்படுத்திச் சவால்களை கடக்க முயன்றோம்,” என்றார் அவர்.

