வெற்றிக்களிப்பு பெருக்கெடுத்த பட்டமளிப்பு விழா

வெற்றிக்களிப்பு பெருக்கெடுத்த பட்டமளிப்பு விழா

3 mins read
போராடி வென்ற பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள்
72dcd7bc-9c39-430c-b00b-81374b718940
பட்டயம் பெற்ற மகிழ்ச்சியில் கிம்பர்லி உதய குமார் (நடுவில்) தாயாருடனும் அண்ணனுடனும் காணப்படுகிறார். - படங்கள்: ரிபப்ளிக் பலதுறை தொழிற்கல்லூரி

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் படிப்பை முடித்த மனநிறைவுடன் சான்றிதழ் பெற்ற கிம்பர்லி உதய குமாரின் மனத்தில் தந்தையைப் பற்றிய நினைவுகள் நிழலாடின.

லுகேமியா, நிமோனியா ஆகிய நோய்கள் காரணமாகக் கிம்பர்லியின் தந்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காலமானார்.

பகல் நேரத்தில் பாடங்களைச் சரிவரப் படிப்பது, வீட்டுக்கு வந்த பிறகு தந்தையைப் பார்த்துக்கொள்வது என்ற இரட்டைப் பொறுப்புகளைச் சமாளித்து வந்தார் கிம்பர்லி.

மற்ற நண்பர்களைப் போல நினைத்த நேரத்திற்கு வெளியே செல்லவோ உல்லாச நடவடிக்கைகளில் ஈடுபடவோ தம்மால் முடியவில்லை என்று கிம்பர்லி கூறினார்.

இதனால் தொடக்கத்தில் பதற்றத்தை உணர்ந்ததாக அவர் கூறினார்.

“அப்பாவின் உடல்நலம் சம்பந்தப்பட்ட மருந்துகள் போன்ற பொருள்களைப் பள்ளிக்குக் கொண்டுசெல்வேன். அங்குச் சிலர் என்னைக் கேலி செய்வார்களோ அல்லது ஏளனமாகப் பார்ப்பார்களோ என்ற பயம் எனக்குள் இருந்தது,” என்று அவர் கூறினார்.

இருந்தபோதும், தம் அச்சங்களுக்கு மாறாக, சக மாணவர்கள் பலமுறை தமக்கு உதவ முன்வந்ததாகக் கிம்பர்லி நன்றியுணர்வுடன் குறிப்பிட்டார். நல்ல உள்ளங்கள் தனக்குத் தொடர்ந்து ஆதரவு நல்கி வந்ததாகவும் அவர் கூறினார்.

தந்தையின் நினைவைக் கண்ணியப்படுத்தும் நோக்குடன் முழுக் கவனத்தையும் தனது கல்வியில் செலுத்திப் பற்பல விருதுகளையும் உபகாரச் சம்பளம் ஒன்றையும் அவர் வென்றுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடம் பயிலத் திட்டமிடும் அவர், நாட்டின் கொள்கை வகுப்பில் ஈடுபட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறார். 

நோய் எதிர்ப்புக் குறைபாடு

உடல்நலக் குறையும்போது கல்வியில் கவனம் செலுத்த சிரமப்படுவோருக்கிடையே அதைக் கடந்து தமது துறையில் பட்டயம் பெற்றுள்ளார் பரசு ராம் சுப்பிரமணியன், 20.

ஆகச் சிறந்த தேர்ச்சி பெற்ற பத்து மாணவர்களில் இவரும் ஒருவர். 

உயிரியல் தொழில்நுட்பத் துறையில் பட்டயப் படிப்பின் முதல் இரண்டு ஆண்டுகளில் குறைந்த நோய் எதிர்ப்புச் சக்தியுடன் அவதியுற்ற அவருக்கு அன்றாக நடவடிக்கைகளில் ஈடுபடுவதே போராட்டமாக இருந்து.

இப்படிப்பின் இரண்டாம் ஆண்டில், பார்க்கின்சன் நோய்வாய்ப்பட்ட தம் தாத்தா காலமானபோது பரசுவின் மனம் வெம்பியது.

“துயரமான அந்தக் காலகட்டத்தில் எனது மதிப்பெண்கள் சற்று சரிந்தன. எனினும், என் குடும்பத்தினரும் நண்பர்களும் பேராதரவாக இருந்தனர். அறிவை வளர்த்துக்கொள்வது, பாடங்களைப் விரும்பிப் படிப்பது, உடல்நிலையைக் கவனித்துக்கொள்வது போன்றவற்றில் கவனம் செலுத்தச் சொல்லி அவர்கள் என் மனத்தைத் தேற்றினர்,” என்று அவர் கூறினார்.

மகனின் சிறப்புத் தேர்ச்சியால் பெருமிதம் அடைவதாகத் தாயார் 49 வயது ரமாபார்வதி சுப்பிரமணியன், 49, புன்னகையுடன் கூறினார்.

தினமும் பள்ளி முடிந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய பரசு, பலமுறை சோர்வுடன் வீடு திரும்பி, பாடங்களைப் படித்து முடிக்க வேண்டியிருந்ததை அந்தத் தாயார் குறிப்பிட்டார்.

“மனத்தைத் தைத்த தருணங்கள் அவை. ஆனால், இப்போது அவர் வெற்றியாளராக நம்முன் நிற்கிறார்,” என்றும் அவர் கூறினார்.

சிரமங்களுக்கு இடையிலும் பரசு, பிறர்க்குத் தொண்டாற்றும் மனம் படைத்தவர்.

ஜூரோங் வெஸ்ட் தாதிமை இல்லத்தில்,  தாத்தாவைப் போன்ற மூளை சார்ந்த நோய்கள் கொண்ட முதியோர்க்கு ஆறு மாதங்கள் பராமரிப்புத் தொண்டூழியராகச் சேவையாற்றினார்.

உயிர் வேதியியல் துறையில் பரசுவின் தாயார், தமது முதுநிலைப் பட்டத்திற்காக ஆய்வு செய்வதைக் கண்ட பரசு, அதனால் உயிரியல் தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார்.

தேசியச் சேவைக்குப் பின்னர் தாமும் இத்துறையில் பட்டக்கல்வி பயில வேண்டுமென அவர் திட்டமிடுகிறார்.

உடல் உபாதைகளையும் கடந்து கல்வியில் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ள பரசு ராம் சுப்பிரமணியன் (இடமிருந்து இரண்டாமவர்) , குடும்பத்தாருடன் கொண்டாடுகிறார்.
உடல் உபாதைகளையும் கடந்து கல்வியில் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ள பரசு ராம் சுப்பிரமணியன் (இடமிருந்து இரண்டாமவர்) , குடும்பத்தாருடன் கொண்டாடுகிறார். - படங்கள்: ரிபப்ளிக் பலதுறை தொழிற்கல்லூரி

நிகழ்த்துகலை மேலாண்மையில் நாட்டம்

தொழில்நுட்பக் கல்விக் கழகப் படிப்புக்காகக் காணொளித் தயாரிப்புத் துறையில் பயின்று நைடெக் சான்றிதழ் பெற்ற கீர்த்தனா ரவி, அத்துறை தமக்குப் பொருந்தவில்லை எனக் கருதி நிகழ்த்துகலை மேலாண்மைக்கான படிப்பைத் தேர்ந்தெடுத்தார்.

“மேடை நாடகத்தின் மீதும் அதைச் சார்ந்த மேலாண்மைப் பணிகளின் மீதும் எனக்கு இருந்த ஆழமான ஆர்வத்தைக் கண்டறிய அந்தப் படிப்பு உதவியது,” என்று அவர் கூறினார்.

2022ல் நடைபெற்ற தொழில்நுட்பக் கல்விக் கழக மத்தியக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் தயாரிப்பு மேற்பார்வையாளராகச் செயலாற்றிய அனுபவம் தமது ஆர்வத்தை மேலும் வலுப்படுத்தியதாக அவர் கூறினார்.

சந்தைப்படுத்துதல் துறையில் பட்டம் பெற முற்படும் அவர், நிகழ்த்துகலை நிர்வாகத் துறையில் பணியாற்ற விரும்புகிறார். இதற்காக ஆசிரியர்களின் அறிவுரையை நாடுவதாகவும் அவர் கூறினார்.

தமது பெற்றோர்களுடன் மேடை நாடக மேலாண்மைத் துறையில் பட்டயம் பெற்ற கீர்த்தனா ரவி.
தமது பெற்றோர்களுடன் மேடை நாடக மேலாண்மைத் துறையில் பட்டயம் பெற்ற கீர்த்தனா ரவி. - படங்கள்: ரிபப்ளிக் பலதுறை தொழிற்கல்லூரி
குறிப்புச் சொற்கள்