தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பட்டப்படிப்புக்கு இடையே சுயதொழிலில் வெற்றி

2 mins read
21c27332-1a11-4bac-babe-8f6c866303a9
2017ல் நிறுவனத்தில் சேர்ந்த நரேஷ் குணசேகரன், காலணிகளின் வடிவமைப்பாளராகவும் பின்னர் வர்த்தகப் பங்காளியாகவும் பணியாற்றினார்.  - படம்: வயன்ட்கோ

ரக்பி விளையாட்டை முன்னதாக தேசிய அளவில் விளையாடிய நரேஷ் குணசேகரன், 31, முதலீட்டு வங்கித்துறையில் (investment banking) சேர விரும்பினார். 

ஆனால், ஆடை அலங்காரம் மீதான அவரது ஆர்வம் அவரை வேறொரு பாதையில் இட்டுச் சென்றது.

சிங்கப்பூரில் காலணிகள் விற்கும் வர்த்தகம் ஒன்றைத் தற்போது வழிநடத்திவரும் திரு நரேஷ், மிகவும் மாறுபட்ட தொழில் ஒன்றைச் செய்துவருவதன் மூலம் ஏராளமாகக் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார்.

‘வயன்ட்கோ’ (WHYANDCO) என்ற நிறுவனத்தின் இணை உரிமையாளராகவும் இருக்கும் அவர், பழைய உலகத்தின் ரசனைகளைப் புதுமையான முறையில் படைக்க முயன்று வருகிறார்.

2015ல் சிறிய காலணி கடையாகத் தொடங்கிய வர்த்தகத்திற்கு தாம் முதலில் வாடிக்கையாளராக வந்ததாக அவர் கூறினார். 2017ல் ‘வயன்ட்கோ’ நிறுவனத்தில் ஊழியராகச் சேர்ந்த அவர், காலணிகளின் வடிவமைப்பாளராகவும் பின்னர் வர்த்தகப் பங்காளியாகவும் பணியாற்றினார். 

2023ல் ‘வயன்ட்கோ’வை நிறுவியவர் அங்கிருந்து வெளியேறியதை அடுத்து திரு நரேஷ், அதன் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டார். 

‘கிளாசிக் மென்ஸ்வேர்’ (classic menswear) எனப்படும் ஆடவர்களுக்கான மேற்கத்திய உடை பாணி மீது அவருக்கு எப்போதும் தனி ஆர்வம் இருந்ததாகத் திரு நரேஷ் கூறினார். 

“குட்டைக் கால்சட்டை, ஜீன்ஸ் ஆகியவற்றில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. பலதுறை தொழிற்கல்லூரியில் பயின்றபோதும் நான் ‘லோஃபர்’ காலணிகளையும் தையற்கலைஞரால் தைக்கப்பட்ட கால்சட்டைகளையும் அணிவது வழக்கம்,” என்றார் திரு நரேஷ்.  

‘த காட்ஃபாதர்’ போன்ற திரைப்படங்களால் இந்த வகையான ஆடை அலங்காரத்தில் ஈர்க்கப்பட்டார். 

“கதாபாத்திரங்கள் அணியும் ஆடைகளில் அவர்களது மிடுக்கு, கம்பீரம் போன்றவை வெளிப்படுகிறது. உங்களின் பண்புகளை நீங்கள் தெரிவு செய்யும் ஆடை அலங்காரம் வெளிப்படுத்தும் என்பதை நான் அறிந்துகொண்டேன்,” என்று அவர் கூறினார். 

இந்த முயற்சியில் சந்தித்த சவால்களையும் விவரித்த அவர், ஒரே நேரத்தில் வகுப்புகளையும் வர்த்தகத்தையும் சமாளித்ததால் சில பாடங்களைச் சிறப்பாகச் செய்யவில்லை என்றார்.

கொவிட் 19 கிருமிப்பரவல், தன் பங்கிற்குப் பெருஞ்சவால்களை அவருக்குத் தந்தது. ஆயினும் இவற்றால் திரு நரேஷின் நிர்வாகத் திறனும் மீள்திறனும் பட்டை தீட்டப்பட்டன.

வட்டார அளவில் விரிவுகண்டு தென்கிழக்காசியாவில் வாடிக்கையாளரைக் கவரும் நோக்கில் நரேஷ், இந்நிறுவனத்தைத் திறம்பட வழிநடத்துகிறார்.  

“ஆடம்பரம் என்பது தரத்தையும் நேர்மையையும் பற்றியது. நான் தயாரிக்கும் காலணிகளை அணிந்து மற்றவர்கள் நிமிர்ந்து நடைபோடுவதைக் காணும்போது என் உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கிறது,” என்று அவர் கூறினார். 

குறிப்புச் சொற்கள்