கெம்பாங்கான் - சாய் சீ தொகுதி மக்கள் கழகம், நற்பணிப் பேரவை ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் தமிழா இயக்கம் இணைந்து நடத்திய கோடைக் கொண்டாட்டம் நிகழ்ச்சி ஜூன் 1ஆம் தேதி கம்போங் உபி சமூக மன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கப்பூர் தமிழ் இளையர்களும் அவர்களின் பெற்றோரும் பங்கேற்று மகிழ்ந்தனர்.
கோடை விடுமுறையைப் பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக அமைந்த இந்நிகழ்ச்சி, அஞ்சாங்கல், பல்லாங்குழி, பம்பரம், ஆடுபுலி ஆட்டம் போன்ற பாரம்பரியத் தமிழ் விளையாட்டுகளை இளையர்களிடையே அறிமுகப்படுத்தும் ஒரு தளமாக அமைந்தது.
கயிறு இழுத்தல், இசை நாற்காலி, தமிழ்ப் பழமொழி ஒப்பித்தல் போன்ற அங்கங்களில் இளையர்களும் அவர்களின் பெற்றோரும் இணைந்து பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் விளையாட்டுகளைத் தொகுத்து வழங்கிய யுவஸ்ரீ ஞானசேகரன், 25, “தேர்வுகள் முடிந்து, விடுமுறை நாள்களில் இளையர்கள் தங்களது நேரத்தை வீணாக மின்னிலக்க விளையாட்டுகளில் செலவிடாமலிருக்க இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம்,” என்றார்.
மேலும், மருதாணியிடுதல், அகல் விளக்குக்கு வண்ணம் தீட்டுதல் போன்ற ஆர்வமூட்டும் நடவடிக்கைகளும், சர்பத், தேநீர்க் கடையான ‘நம்ம சாய்வாலா’ போன்ற உணவு நிலையங்களும் இளையர்களின் விருப்பத்திற்கேற்ப அமைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியின் நிறைவில், சிங்கப்பூர் நிர்வாகக் கழகத் தமிழ் இளையர் மன்றத்தின் நடனக்குழு, சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தின் இந்திய நடனக்குழு, தமிழா இயக்கத்தின் இசைக்குழு, நடனக்குழு ஆகியன ஒன்றிணைந்து நடன நிகழ்ச்சி படைத்தன.
“இன்றைய தலைமுறைக்குத் தமிழ்த் திருவிழாவின் சிறப்பம்சங்களையும் அழிந்துவரும் பழக்கவழக்கங்களையும் எடுத்துரைக்க இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது,” என்றார் நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர், சாதனா, 21.
தொடர்புடைய செய்திகள்
பண்பாடு, சமூக ஒற்றுமை, இளைய தலைமுறைப் பங்களிப்பு ஆகியவற்றை இணைத்துக் கொண்டாடும் ஒரு சிறந்த முயற்சியாக தமிழா இயக்கத்தின் கோடைக் கொண்டாட்டம் அமைந்தது.

