சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி தனது பொது வரவேற்பு தினத்தன்று மாணவர்கள் நவீன பொறியியல் திறன்களை நேரடியாகச் செய்து பார்க்கும் ‘டிரை எ ஸ்கில்’ (Try-a-Skill) அரங்குகளை முதன்முதலாக அறிமுகப்படுத்தியது.
ஜனவரி 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதிவரை பொது வரவேற்பு இடம்பெற்றது.
தொழில்நுட்பத் திறன்களுடன் சமூகத் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில், ‘குழுப்பணி மேம்பாட்டுக் கட்டமைப்பு’ மூலம் மாணவர்களின் ஒத்துழைப்புத் திறன் மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து மதிப்பிடப்படுகிறது.
இத்திட்டத்தில் சிறப்பாகச் செயல்படும் முதல் 50% மாணவர்களுக்கு, அவர்களின் குழுப்பணித் திறனை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கும் மின்சான்றிதழ் பட்டமளிப்பின்போது வழங்கப்படும்.
‘பிஸ்னஸ் எசென்ஷியல்ஸ் த்ரூ ஆக்ஷன்’ (BETA) திட்டம், மாணவர்கள் குழுக்களாக இணைந்து உண்மையான வணிகங்களைத் தொடங்கி நடத்துவதன் மூலம் நடைமுறை தொழில்முனைப்புத் திறன்களை வளர்க்கிறது.
தொழில் வழிகாட்டுதல் மற்றும் $1,000 வரையிலான தொடக்க நிதியுதவி மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் நேரடி அனுபவத்தை இந்த முயற்சி வழங்குகிறது.
இவ்வாண்டு பொது வரவேற்பு நாளன்று காட்சிப்படுத்தப்பட்ட 60 மாணவர் திட்டங்கள், பல்வேறு சமூக, வணிக சவால்களை எதிர்கொள்ளும் அவர்களின் புதுமையான சிந்தனைகளையும் தொழில்முனைப்புத் திறன்களையும் பறைசாற்றின.
நேரடித் திட்டங்கள், பயிலரங்குகள், வழிகாட்டுதல்கள் மூலம் வணிக மேலாண்மை, உத்திசார்ந்து முடிவெடுத்தல் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களில் மாணவர்கள் அனுபவபூர்வமான பயிற்சியைப் பெற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
வெற்றிகரமான நிறுவனங்களை உருவாக்கி மேம்படுத்தும் நேரடி அனுபவத்தை வழங்குவதன் மூலம், இத்திட்டம் மாணவர்களைத் தொழில்முறை உலகில் சிறந்து விளங்கத் தயார்ப்படுத்துகிறது.
ஆரா பிளஸ் (AURA+) அமைப்பு பயன்படுத்தப்பட்ட தேயிலை இலைகள் மற்றும் ஆரஞ்சுப் பழத் தோல்களைச் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாசனைப் பொருள்களாக (deodorisers) மாற்றுகிறது.
இவை புத்துணர்ச்சியூட்டும் இயற்கையான நறுமணத்திற்காக அத்தியாவசிய எண்ணெய்களுடன் (essential oils) சேர்க்கப்பட்டுள்ளன.
இயற்கைக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம், ஆரா பிளஸ் சாதாரண கரி அல்லது அந்துருண்டைகளுக்குப் (mothballs) பதிலாகப் பாதுகாப்பான, நிலையான மாற்றாக அமைகிறது.
இது குப்பைக் கழிவுகளைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், இடங்களை இயற்கையான நறுமணத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது.
ஆரா பிளசின் முக்கிய வாசனைப் பைகள் 100% இயற்கையான பொருள்களால் தயாரிக்கப்படுகின்றன.
சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள், உணவகக் கழிவுகளான தேயிலை இலைகள் மற்றும் ஆரஞ்சுப் பழத் தோல்களைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த நறுமணப் பைகளை உருவாக்கியுள்ளனர்.
முதலாமாண்டு மாணவியான பிரித்திகா பாண்டிதேவன், 19, “நச்சுத்தன்மையற்ற அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட இந்த வாசனைப் பைகள் ஆரோக்கியமான, மலிவான மாற்றுத் தீர்வாக அமைகிறது.” எனக் கூறினார்.
நேர மேலாண்மை மற்றும் முறையான திட்டமிடல் மூலம், சந்தைப்படுத்துதல் மற்றும் விலை நிர்ணய உத்திகளை வகுத்து, நவீன வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இத்தயாரிப்பை அவர்கள் வடிவமைத்துள்ளனர். இது கழிவு மேலாண்மை மற்றும் நிலைத்தன்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
அது போல ரிவேம்ப் (REVAMP) என்ற பெயரில் தொடங்கப்பட்ட மற்றொரு முயற்சி பயன்படுத்தப்பட்ட டெனிம் (Denim) துணிகளை மறுசுழற்சி செய்து, பயனுள்ள ஒப்பனை வைக்கும் பைகளாக வடிவமைப்பதன் மூலம் துணிக் கழிவுகளைக் குறைக்க உதவுகிறது.
மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட மஸ்டர்டு டிரீ (Mustard tree) அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது முதலாமாண்டு மாணவர்கள் அடங்கிய ரிவேம்ப் குழு.
“அவர்களுக்கு இந்தத் தயாரிப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை வழங்கி, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் எங்கள் குழு அவர்களுடன் பகிர்ந்துகொள்கிறது.” என்றார் அக்குழுவைச் சேர்ந்த மணிவண்ணன் ஹரினி 20.
இந்தக் குழு தனது ஒவ்வொரு படைப்பிலும் தனித்துவ பாணி, நிலைத்தன்மை, சமூக நலம் ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது.
“எங்கள் பீட்டா திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரிவேம்ப் நிறுவனம் ‘ஃபாஸ்ட் ஃபேஷன்’ எனும் நவநாகரிக முறையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்க உலகளவில் விரிவடையத் திட்டமிடுகிறோம்,” என்றார் ரிவேம்ப் குழுவின் லாவண்யா ஜெயபிரகாஷ், 17.
“வீணாகும் ஜீன்ஸ் துணிகளை அழகான ஒப்பனைத் துணிகளாக மாற்றுவதன் மூலம், இந்தத் தொழில்துறையில் ஏற்படும் அதிகப்படியான நீர், துணிக் கழிவுகளுக்கு நாங்கள் தீர்வை வழங்குகிறோம்,” என்றார் மாயகிருஷ்ணன் கரேஸ் ஜசிந்தா 17.
பொது வரவேற்பு நாளில் எஸ்பி அண்ட் ஐ (SP&I) மாணவர்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்தியது.
அதில் செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர், நிலைத்தன்மை, தொழில்நுட்பம், பொழுதுபோக்கு ஆகிய துறைகளில் கல்வி அறிவை நடைமுறைச் சவால்களுக்குப் பயன்படுத்தும் மாணவர்களின் புதுமையான இறுதி ஆண்டுத் திட்டங்கள் மற்றும் அவர்களின் படைப்பாற்றல் முன்னிலைப்படுத்தப்பட்டன.
இந்தத் திட்டம் அவர்களின் பார்வையை மாற்றியுள்ளது.
அவர்கள், “வாழ்க்கையைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்கும் பல மதிப்புமிக்க நுண்ணறிவுகளைக் கற்றுக்கொண்டோம்,” என்று கூறினர்.
வெறும் மறுசுழற்சிக்கு அப்பால், கழிவுகளின் தாக்கத்தைக் குறைக்க இந்த வணிகம் உண்மையில் செயல்பட விரும்பியது என்று ரிவேம்ப் குழுவினர் பகிர்ந்துகொண்டனர்.
பயனீட்டாளர் வேதித் தொழில்நுட்ப மைய மாணவர்கள் கரப்பான் (eczema) பாதிப்புள்ள சருமத்திற்காக ‘சேரிச்’ என்ற பெயரில் தாவர அடிப்படையிலான வறட்சிக் குறைப்புப் பூச்சு (moisturizer) ஒன்றைத் தயாரித்துள்ளனர்.
மருத்துவ ஆய்வுகளை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அந்தப் பூச்சு, 2025ஆம் ஆண்டின் பியூட்டி இன்சைடர் சிங்கப்பூரின் (Beauty Insider Singapore) ‘சிறந்த கரப்பான் பராமரிப்பு’ விருதை வென்றுள்ளது.
இந்தத் தயாரிப்பில் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மூன்று ஆண்டுகளுக்குமேல் தலைமை ஆய்வாளராகப் பணியாற்றி வரும் திருவாட்டி ராஜலட்சுமி வேலுகுட்டி, 40, “ஒரு பொருளைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதன் பாதுகாப்பையும் செயல்திறனையும் பரிசோதனைக் குழுக்கள் மூலம் எவ்வாறு உறுதிசெய்வது என்பதை மாணவர்கள் கற்றுக்கொண்டனர்,” என்று விளக்கினார்.
சூரிய ஆற்றல் மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஆறு திட்டங்கள் வரவேற்பு நாளன்று காணப்பட்டன.
குறிப்பாக, புளூகிரீன் ரூஃப் (Bluegreen roof) திட்டம் அறிவார்ந்த நீர் மேலாண்மை மற்றும் தாவரங்களைப் பயன்படுத்தி வெப்பநிலையை 20 டிகிரி செல்சியஸ் வரை குறைத்து, செயல்திறனை 5 விழுக்காடு அதிகரிக்கிறது.
குழுவினர் குறிப்பிட்டது போல, “பல கூறுகளை ஒரே அமைப்பிற்குள் ஒருங்கிணைப்பது முக்கிய சவால்களில் ஒன்றாகும்.” என்கிறார் இக்குழுவைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவி அசோகானந்த பிரநாமிக்கா 19.
இறுதியில், இந்தக் கண்டுபிடிப்புகள் நிலைத்தன்மையை உறுதிசெய்கின்றன.
“உகந்த நிலையில், சூரிய மின்தகடுகள் 25 டிகிரி செல்சியசில் சிறப்பாகச் செயல்படுகின்றன,” என்று அக்குழுவைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர் ரவினாஷ் சி குணாளன், 21, கூறினார்.
சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி மற்றும் ஸ்டெல்லாரிஸ் ரோபாட்டிக்ஸ் இணைந்து வரவேற்பு நாளன்று அறிமுகப்படுத்திய ஹியூமனாய்டு ரோபோ, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின்மூலம் பொறியியல் படிப்புகள் பற்றிப் பகிர்ந்தது.
படிப்புகள் குறித்த ஆலோசனை அமர்வுகளில் ஊழியர்களுக்குத் துணையாகச் செயல்பட்ட இந்த ரோபோ, நவீன ரோபாட்டிக்ஸ் எவ்வாறு கல்விச் சேவைகளை மேம்படுத்தும் என்பதைச் சிறப்பாக வெளிப்படுத்தியது.
சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்கள், ரோபோகப் (RoboCup) போட்டிகளுக்காகத் தன்னாட்சி மற்றும் மனித உருவ ரோபோக்களை உருவாக்குகின்றனர்.
முனைவர் பட்ட மாணவர்களுக்கு எதிராகப் போட்டியிட்டாலும் இவர்கள் ஜெர்மனியில் நடந்த போட்டியில் இரண்டாமிடம் பிடித்தனர்.
“நாங்கள் மட்டுமே தொழிற்கல்லூரி மாணவர்களாக இருந்தாலும் எங்களால் திறம்படப் போட்டியிட முடிகிறது,” என்றார் இக்குழுவைச் சேர்ந்த அர்ஜுன் சுப்ரமணி,19.

