இளையரின் பிரச்சினைகளுக்குத் தமிழ்ப் பாடல்கள்வழி தீர்வுகாண முயற்சி

இளையரின் பிரச்சினைகளுக்குத் தமிழ்ப் பாடல்கள்வழி தீர்வுகாண முயற்சி

2 mins read
8f9411fe-1fc3-4e2e-9345-14a936a24bed
‘ரீஇன்கார்னேஷன்’ குழுவின் நிறுவனர் கௌஷிக் சுரேஷுடன் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம்.  - படம்: த. கவி

இளையர்களுக்கு அறிவுரை கூறும் சலிப்பூட்டும் மேடைகளுக்கு இடையில் தாய்மொழியில் பேசி, தமிழ்ப் பாடல்களைப் பாடி அவர்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்த புதிய முயற்சி சிங்கப்பூரில் அரங்கேறியுள்ளது.

தமிழ் முரசின் ‘இளைய தலைமுறை’யும் ‘ரீஇன்கார்னேஷன்’ இசைக் குழுவினரும் இணைந்து நடத்திய ‘ஆரா 10/10’ (Aura 10/10) நிகழ்ச்சி மே 23ஆம் தேதி நடைபெற்றது.

வழக்கமான கருத்தரங்குகளில் இருந்து மாறுபட்டு அமைந்த நிகழ்வில் 18 முதல் 25 வயது வரையிலான ஏறக்குறைய 50 இளையர்கள் துடிப்புடன் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியை வழிநடத்திய ‘ரீஇன்கார்னேஷன்’ குழுவின் நிறுவனர் கௌஷிக் சுரேஷ், இளையர்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கியமான வாழ்வியல் தலைப்புகளையொட்டிய கலந்துரையாடல்களை எளிய முறையில் கையாண்டார்.

இன்றைய தலைமுறையினர் நிதி நிலவரத்தை எந்த அளவுக்குப் புரிந்துவைத்துள்ளனர் என்பது பற்றியும் அதற்குத் திட்டமிடுவது குறித்தும் அவர் பேசினார். தோல்விகளை முற்றுப்புள்ளியாகக் கருதாமல் அவற்றை அடுத்த கட்ட வளர்ச்சிக்கான படிக்கட்டுகளாக மாற்றிக்கொள்வது எப்படி என்பதை அவர் விளக்கினார்.

“நான் ஒரு சாதாரணக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவன். என் பெற்றோர் சிரமப்பட்டு சிறுகச் சிறுகச் சேமித்த பணம்தான், இன்று என்னை ஆளாக்கியுள்ளது என்பதை இன்று உணர்கிறேன். அதனை இளையர்கள் இன்றே புரிந்துகொண்டு சேமிப்புப் பழக்கங்களைக் கையாளவேண்டும் என்றுதான் இந்நிகழ்வில் எடுத்துரைக்க விரும்பினேன்,” என்று திரு கௌஷிக் பகிர்ந்துகொண்டார்.

பதின்ம வயதில் நண்பர்கள், சமூக ஊடகங்கள் போன்றவற்றில் மூழ்கிவிடாமல் எப்போதும் துணை நிற்கும் குடும்ப உறவுகளுக்குக் கொடுக்கவேண்டிய மதிப்பையும் அவர் உணர்வுபூர்வமாக எடுத்துரைத்தார்.

ஒருதலைப்பட்சமான விரிவுரையாக இல்லாமல், பங்கேற்பாளர்களின் பலதரப்பட்ட கருத்துகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் ஒரு சுவாரசியமான கலந்துரையாடலாக இந்த அமர்வு அமைந்திருந்தது.

திரு கௌஷிக் எழுப்பிய கேள்விகளுக்கு அங்கிருந்த இளையர்கள் தங்களின் வெவ்வேறு கண்ணோட்டங்களையும் சமகால எதார்த்தங்களையும் தயக்கமின்றிப் பகிர்ந்துகொண்டனர்.

இந்த ஆக்கபூர்வமான உரையாடல்களுக்கு இடையே, தற்காலத்தில் பிரபலமாகவும் இளையர்களின் மனநிலைக்குப் பொருத்தமாகவும் இருந்த பாடல்களைத் திரு கௌஷிக் பாடியது அரங்கின் உற்சாகத்தை மேலும் அதிகரித்தது.

இந்த இசை கலந்த அணுகுமுறை, ஆழமான சமூகக் கருத்துகளை இளையர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவியது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ஹரேஷ் சிங்கராஜு, இளையர்களின் துடிப்பான பங்கேற்பையும் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்களையும் சுட்டிக்காட்டினார்.

“இளையர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய தெளிவு இப்பருவத்தில் அவ்வளவாக இருக்காது. அதனால், எதிர்காலத்தில் வரக்கூடிய சிரமங்களைச் சந்திக்க இன்றிலிருந்தே திட்டமிடுவது எப்படி என்பதை எடுத்துச்சொல்ல, இது போன்ற நிகழ்ச்சிகள் சிறந்த தளமாக அமைகின்றன,” என்றார் அவர்.

இந்தப் புதுமையான அமர்வின் வடிவத்தை டாக்டர் ஹரே‌‌ஷ் பாராட்டினார்.

இசையையும் எதார்த்தத்தையும் இணைத்து, இளையர்களின் தேவைகளை அவர்களின் பாணியிலேயே அணுகிய ‘ஆரா 10/10’ அமர்வு, புதிய சிந்தனை அலையை ஏற்படுத்தித் தமது நோக்கத்தை நிறைவு செய்துள்ளது என்று பங்கேற்பாளரான செல்வி அபிராமி ராஜமாணிக்கம், 23, தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்