மாறுபட்ட வழிகளைக் கையாண்டு இளையோரை ஈடுபடுத்தும் நாளிதழ்

மாறுபட்ட வழிகளைக் கையாண்டு இளையோரை ஈடுபடுத்தும் நாளிதழ்

3 mins read
93ff88a2-cc7c-4d12-97da-20ffda3379fb
அச்சு முதல் இணையம் வரை, இளையர்களுக்குச் சுவையான, பயனுள்ள படைப்புகளை நல்க தமிழ் முரசு தொடர்ந்து முனைகிறது. - படம்: பே. கார்த்திகேயன்

பாரம்பரிய ஊடகமாகப் பல்லாண்டு செயல்படும் தமிழ்முரசு, காலத்திற்கேற்ப தன்னை மாற்றியமைத்து வருகிறது.

இளையர்களுக்காக வாரந்தோறும் அச்சிடப்படும் இளையர் முரசு முதல் இன்ஸ்டகிராமில் சமூக ஊடக ஒளிவழியாகச் செயல்படும் ‘இளைய தலைமுறை’ வரை, காலத்தின் தேவையைக் கணித்து முன்னோக்கிச் செல்லத் தமிழ் முரசு முனைவதை இன்றைய இளையர்கள் கண்கூடாகக் காண்கின்றனர் .

1935ல் அறிமுகம் கண்ட தமிழ் முரசு, முரசின் கம்பீரமான ஒலியைப் போல், அன்றிலிருந்து இன்றுவரை சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழாகத் தமிழ் சமூகத்திற்குச் செய்திகளைக் கொண்டுசேர்ப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.

‘சமூகத்தின் குரலாக’, என்பது தமிழ் முரசின் முழக்கவரி. அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் சமுதாயத்தின் குரலாகச் சேவையாற்றிவரும் இந்த நாளிதழ், நாளைய தலைவர்களுக்கு ஒரு தளமாகவும் குரலாகவும் பணியாற்றி வருகிறது.

தமிழ் முரசின் செய்தியறையில் இளையோர் வெவ்வேறு காலகட்டங்களில், சக இளையோரைக் கவரும் தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி அவர்களின் பார்வைகளுக்கு வெளிச்சமிட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இளைய தலைமுறை என்ற தளம் அதிகாரபூர்வமாக அறிமுகம் கண்டது, இந்தப் பணியின் புதிய மைல்கல்.

இளைய தலைமுறை தளத்தில் பல்வகைச் செய்திகளைச் சுவாரசியமாகப் படைப்பதன் மூலம் இக்கால இளையோருக்குப் பொருத்தமான பாணியில் தகவல் பரிமாறப்படுவதாக 20 வயதான நந்தன் சிவபிரகாஸ் கருதுகிறார்.

“வலையொளி வடிவில் இளையோர் பல்வேறு தலைப்புகளில் தங்களுக்கு இடையே விவாதிப்பது, அவர்களை ஈர்ப்பதில் பெரும் பங்காற்றுகிறது. அவர்களின் குரல் மக்களைச் சென்றடையவும் தளமாகத் திகழ்கிறது,” என்றார் நந்தன்.

இளைய தலைமுறை பிரபலமடைந்து வந்தாலும் இளையர் முரசில் வெளிவரும் அச்சுச் செய்திகளையும் விரும்பிப் படிப்பதாக 20 வயது கண்ணம்பாள் நடராஜன் கூறினார்.

“மனநலம், செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், கல்வி, நடப்பு நிகழ்வுகள் போன்ற இளையோருக்குப் பொருத்தமான செய்திகளை ‘இளையர் முரசு’ வழங்குகிறது. இதன் மூலம், இளையோர் உலக நடப்புகளை அறிந்து, விழிப்புணர்வுடன் இருப்பதற்குத் தமிழ் முரசு உதவுகிறது,” என்றார் கண்ணம்பாள்.

இளையோருக்கான படைப்புகள் மட்டுமன்றி, அவர்களை முதன்மைப்படுத்தும் சமூக நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது தமிழ் முரசு.

தமிழ்மொழி விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ‘முரசு 360’, மாணவச் செய்தியாளர்களை மையப்படுத்தி அவர்களது உழைப்பையும் படைப்பாற்றலையும் வெளிச்சமிட்டுக் காண்பித்தது.

இளையோருக்காக இளையோரால் படைக்கப்பட்ட அந்நிகழ்ச்சி மாறுபட்டதாக இருப்பதாக 27 வயது செந்தில் ஆண்டியப்பன் கூறினார்.

“தமிழ்மொழி விழாவில் நடந்த 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் 15 மாணவச் செய்தியாளர்கள் கலந்துகொண்டு, நேர்காணல்கள் நடத்தி செய்தியாகத் தொகுத்து அதன் சாரத்தை ஒரே நிகழ்ச்சியில் படைத்தது பாராட்டத்தக்கது. அப்படிப்பட்ட பிரம்மாண்டமான வாய்ப்பை இளையோருக்கு வழங்கி அவர்களுடைய தனித்துவத்தையும் வெளிக்கொணர்ந்தது முரசு 360,” என்று செந்தில் ஆண்டியப்பன் நினைவுகூர்ந்தார் .

‘ரீஇன்கார்னேஷன்’ குழுவின் நிறுவனர் கௌஷிக் சுரேஷுடன் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம். 
‘ரீஇன்கார்னேஷன்’ குழுவின் நிறுவனர் கௌஷிக் சுரேஷுடன் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம்.  -  படம்: த. கவி

அத்துடன், ‘ரீஇன்கார்னேஷன்’ இசைக் குழுவினருடன் இணைந்து தமிழ் முரசு மே 23ல் நடத்திய ‘ஆரா 10/10’ நிகழ்ச்சியை நடத்தியது.

அதில், பார்வையாளராகப் பங்கேற்ற 19 வயது சதாசிவம் கிருபாளினி, “இளையோருக்கான அறிவுரைகளைப் பாடல்கள்வழி இந்நிகழ்ச்சி எடுத்துரைத்தது. செய்தியைக் கடந்து, இளையோருக்கு வாழ்வியல் பயணத்திலும் தமிழ் முரசு துணையாய் இருப்பதை நான் இந்நிகழ்ச்சிவழி உணர்ந்தேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்