ராஜசபை இசை ஒலிக்க, ராஜா பரமேஸ்வரரும் ராணி ரத்னாதேவியும் பளபளக்கும் ஆடைகளுடனும் கண்கவர் ஆபரணங்களுடனும் மேடையில் பவனி வந்தனர்.
மேடை ஒளிக் கதிர்கள் அவர்களின் மேல் மெல்ல விழ, ராஜா பரமேஸ்வரா சற்றே தலைநிமிர்ந்து பார்த்தார்.
மேடையில் அவரைச் சுற்றி நின்ற நடிகர்கள், இளையர்களாக இருந்தது போலவே அரங்கத்திலும் இளையர் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சிங்கப்பூரின் தமிழ் நாடகத்துறை, தரத்தில் உயர்ந்துகொண்டே வருவதற்கிடையே இளையர் ஆதரவு வலுக்கும் இந்தக் காட்சி வழக்கமான ஒன்றாகிவிட்டது.
மாறிவரும் ரசனை
இளையர்கள் மேடைக்குப் பின் உதவியாளர்களாக, மேடையின் மேல் நடிகர்களாக, மேடைக்கு முன் பார்வையாளர்களாக தமிழ் நாடகத்துறையில் லயிப்பது தம்மை நெகிழவைப்பதாக அவாண்ட் நாடகக்குழுவின் இயக்குநர் திரு க செல்வானந்தன் கூறினார்.
“தமிழ் நாடகத்துறை 80கள், 90களிலிருந்து அதிகம் மாற்றம் கண்டுள்ளது. அப்போதெல்லாம் சமூகப் பிரச்சினைகளை மையமாகக்கொண்டு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. இப்போது, வெவ்வேறு நாடகக்குழுக்கள் வெவ்வேறு நாடக அம்சங்களை மையமாகக் கொண்டு நாடகங்களைப் படைக்கின்றன. இதனால், இளையர்களுக்குப் பலவகையான நாடகங்களைக் காணும் வாய்ப்புகள் உருவாகின்றன,” என்றார் திரு செலவானந்தன், 56.
வாய்ப்புகள் பல
சிங்கப்பூர் தமிழ் நாடகத்துறையில் ‘அவாண்ட்’, ‘அகம்’, ‘அதிபதி’, ‘சிங்கப்பூர் இந்திய நாடக, திரைப்பட ஆர்வலர்க் குழு’ ஆகிய நான்கு நாடகக் குழுக்களும் முன்னணி வகிக்கின்றன எனலாம்.
பல்வேறு கருப்பொருள்களை மையமாகக் கொண்டு வித்தியாசமான பாணியில் தங்களது படைப்புகளை இவை வழங்குவதுடன் வளர்ந்துவரும் நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் வாய்ப்புகளையும் அளித்து வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
பல இளம் நடிகர்கள் தங்களின் பள்ளி நாடக மேடைகளிலிருந்து தொழில்முறை மேடையில் அடி எடுத்து வைப்பதாக அகம் நாடகக்குழுவை நிறுவிய திரு சுப்ரமணியன் கணேஷ், 39, பகிர்ந்துகொண்டார்.
“இளையர்களுக்குப் புத்தாக்க வழிகளில் நாடகங்களைக் கொண்டுசேர்க்க நாங்கள் முயற்சித்துள்ளோம். மெய்நிகர் (VR), ‘ஆக்மெண்டெட் ரியாலிட்டி’ (AR) ஆகிய முறைகளைப் பயன்படுத்தி கொவிட் காலகட்டத்தில் ‘துரியோதனா’ நாடகத்தை மேடையேற்றினோம்,” என்றும் அவர் கூறினார்.
கொவிட் கிருமிப்பரவல் காலகட்டத்தில் இத்துறை சற்று தொய்வடைந்தபோதும் தற்போது அடுத்தடுத்து பல படைப்புகளுடன் சூடுபிடித்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.
2023ஆம் ஆண்டில், தற்போது இத்துறையிலிருக்கும் நான்கு முன்னணிக் குழுக்கள் ஆறு படைப்புகளை மேடையேற்றின. அவற்றில் நான்கு படைப்புகள் பெரும்பாலும் இளையர்களைக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
“துறை வளர்ச்சி அடைந்துகொண்டே வருவதால் நாடகக்குழுக்கள் அண்மைய ஆண்டுகளில் பல நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன. இதன் விளைவாக, இளம் நடிகர்களுக்கும் பல வாய்ப்புகள் அமைகின்றன,” என்று கூறினார் திரு செல்வா.
மண் மணக்கும் படைப்புகள்
இவ்வாண்டு மார்ச் மாதம் மேடையேறிய அவாண்ட் நாடகக்குழுவின் பரமேஸ்வரா நாடகத்தில் நடித்த 23 வயது மா பிரியதர்ஷினி, “தமிழ் திரைப்படங்களும் தொடர்களும் பெரும்பாலும் இந்தியாவை மையமாகக் கொண்டு இயற்றப்படுகின்றன. அவற்றுக்கு மாறாக, சிங்கப்பூர் தமிழ் நாடகப் படைப்புகள் அயல்நாட்டு சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்வியலைச் சித்திரிப்பது புத்துணர்ச்சியூட்டும் விதமாக உள்ளது,” என்று கூறினார்.
மேடை நாடகங்களை முன்பெல்லாம் பார்வையாளராகக் கண்டுகளித்த இவர், அவற்றில் நடிப்பதில் நாட்டம் கொண்டு பரமேஸ்வரா நாடகத்தில் நடித்தார்.
“மேடை நாடகத்தில் நடிப்பதென்பது எளிதான ஒன்று அல்ல. அதற்குக் கடினமான உழைப்பும் விடாமுயற்சியும் அதிகம் தேவைப்படுகின்றன. ஆனால், மேடையில் நடிக்கும்போது கிடைக்கும் அந்த உணர்ச்சிக்கு இணையேதுமில்லை,” என்றார் பிரியதர்ஷினி.
தன்னம்பிக்கை ஊட்டிய கலை
சில இளம் நடிகர்கள் ஆங்கில நாடகத் துறையிலிருந்து தமிழ் நாடகத் துறைக்கும் மாறியுள்ளனர்.
அத்தகைய நடிகர்களுள் ஒருவரான 23 வயது மிகில் ஆனந்த், அண்மையில் அகம் நாடகக்குழு படைத்த ‘பணிக்கன்’ தயாரிப்பின் ஐந்து குறுநாடகங்களில் ஒன்றான ‘நாய்’ என்ற குறுநாடகத்தில் நடித்தார்.
சிறுவயதில் தனக்குத் திக்குவாய் பிரச்சினை இருந்ததால், அதை எதிர்கொள்வதற்காக தொடக்கப்பள்ளியில் தன் பெற்றோரால் நாடக இணைப்பாட நடவடிக்கையில் சேர்க்கப்பட்டார்.
உயர்நிலைப்பள்ளியில் தமிழ் நாடகங்களில் நடித்ததால் அவருக்கு இத்துறையின் மீது ஆர்வம் பிறந்ததாகக் குறிப்பிட்டார்.
“ஆங்கிலத்தில் நான் ஏற்ற கதாபாத்திரங்களைக் காட்டிலும் தமிழில் ஏற்ற கதாபாத்திரங்களுடன் ஒன்றிப்போக எனக்குச் சற்று எளிதாக உள்ளது,” என்றார் மிகில்.
இயக்குவதிலும் வேட்கை
இளையர்களுக்கு நடிப்பின் மீதுமட்டுமின்றி இயக்கத்தின் மீதும் ஆர்வம் பிறந்துள்ளதற்குச் சான்றாக விளங்குபவர் திரு சுப்பிரமணியன் கார்த்திகேயன்.
22 வயதுடைய இவருக்கு, எழுத்தின் மீதும் இயக்கத்தின் மீதும் அதீத ஆர்வம்.
“நாடகத்தின் மூலம் என்னால் என் கற்பனைக்கு உயிரளிக்க முடிகிறது. நானும் பலரைப் போல திரைப்பட விசிறியாகத்தான் இருந்தேன். ஆனால், காலப்போக்கில் திரைப்படங்களில் இல்லாத ஒரு தனித்துவம் நாடகத்தில் இருப்பதை நான் உணர்ந்தேன்,” என்று கூறினார் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் சங்கே முழங்கு 2023ன் மூலம் தனது இயக்குநர் பயணத்தைத் தொடங்கிய கார்த்திக்.
கற்றல் மனப்பான்மை அவசியம்
இத்துறை அனைவரையும் மனமார வரவேற்றாலும் இளையர்கள் கற்றல் மனப்பான்மையுடன் இதற்குள் வர வேண்டுமெனத் தெரிவித்தார் சிங்கப்பூர் இந்திய நாடக மற்றும் திரைப்பட ஆர்வலர்க் குழுவின் நிறுவனர், திரு சலீம் ஹாடி, 42.
“இளையர்கள் புகழைத் தேடி இத்துறைக்கு வராதவரை அவர்கள் சிறந்து விளங்குவர். கற்றல் மனப்பான்மையுடன் வந்தால்தான் இந்த அனுபவத்தின் மூலம் பயனடைய முடியும்,” என்றார் சலீம் ஹாடி.

